குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியை தடை செய்ய வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கோரியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு ஆணைக்குழுவும் உறுதி செய்திருந்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிகள் உதவியதாகவும் இதன் காரணமாகவே வடக்கில் வேறு தமிழ் அரசியல் கட்சிகள் வளர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள கருத்து நகைப்பிற்குரியது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.