Home இலங்கை வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவே. – சி.வீ.கே. அறிவிப்பு.

வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவே. – சி.வீ.கே. அறிவிப்பு.

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண சபையின்  எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்து சி.தவராசாவே  பதவிவகிப்பார் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.,சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வட மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் பதவி வகித்து வரும் கௌரவ சின்னத்துரை தவராசா அவர்களுக்குப் பதிலாக கௌரவ வை.தவநாதன் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் கௌரவ மகிந்த சமரசிங்க அவர்கள் 2016.11.01ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கு முகவரியிட்டு எமக்கும் கௌரவ முதலமைச்சருக்கும் பிரதியிட்டு அனுப்பியிருந்தார்.
இக் கடிதத்தின் பிரதி எமக்கு 2016.11.12 ஆம் திகதி கிடைக்கப் பெற்றது. இக் கடிதம் முறைப்படியாக முகவரியிடப்படவில்லை என சுட்டிக்காட்டியும், ஆகையால் அதுதொடர்பாக எம்மால் மேல் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தும், இதற்கு முன்னைய சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக எமக்கு முகவரியிடப்பட்ட 2014.04.25ஆம் திகதிய கடிதத்தின் நிழற்பிரதியை இணைத்து 2016.11.15ஆம் திகதி கௌரவ ஆளுநர் அவர்களுக்கு எழுதியிருந்தேன்.
இந்த நிலையில் கௌரவ சி.தவராசா அவர்களின் 2016.11.17ஆம் திகதி இடப்பட்ட கடிதம் 2016.11.18 ஆம் திகதி எமக்குக் கிடைத்தது. அது பின்வருமாறு இருந்தது.
மேற்படி விடயம் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரினால் 2016.11.01 ஆம் திகதியிடப்பட்டு தங்களிற்கும் எனக்கும் ஏனைய சிலரிற்கும் பிரதியிடப்பட்டு கௌரவ ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக   வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் பதவிக்கு கௌரவ மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களை நியமிக்குமாறு சிபார்சு செய்திருப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நானே தொடர்ந்தும் எதிர்கட்சித் தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்றும் அதற்கு தங்கள் பூரண ஆதரவு உண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதலினால் மேற்படி விடயம் தொடர்பாக ஏனைய எதிர்கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடித் தங்கள் முடிவினை எடுக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றேன். பின்னர் முறைப்படியாக எமக்கு முகவரியிடப்பட்டு 2016.11.01ஆம் திகதியிடப்பட்டு கௌரவ ஆளுநர், கௌரவ முதலமைச்சர் இவர்கள் இருவருக்கும் பிரதியிடப்பட்ட கடிதம் பேரவைச் செயலகத்துக்கு 2016.11.23 ஆம் திகதி மாலை 5.15 மணிக்குக் கிடைத்திருந்தது.
இக் கடிதம் 2016.11.24 ஆம் திகதி காலை சபை நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெறும் போது சபை அலுவலர்களால் எமக்குத் தரப்பட்டது. இது பற்றி முடிவெடுக்க அவகாசம் போதாமையால் அன்றைய தினம் சபை அமர்விலேயே இந்த உயரிய சபைக்கு தெரியப்படுத்தி இன்றைய அமர்விலே எமது தீர்மானம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தேன்.
உண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ சி. தவராசா அவர்கள் மேற்குறிப்பிட்ட கடிதத்தை எழுதியிருக்காதுவிடின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரின் கடிதத்திற்கமைய நடவடிக்கை எடுத்திருப்பேன். ஏனைனில் இவ்வாறு எழுதப்பட்ட முன்னைய கடிதங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரும் எதிர்ப்புத் கெரிவிக்கவில்லை.
எனினும் தம்மை எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோருவதாக தெரிவித்திருப்பதால் விடயத்தை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்கும் கடமையும் பொறுப்பும் எம்மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவாக உணர்ந்தேன்.
எதிர்க்கட்சித்தலைவர் என்ற பதவி சட்ட ஏற்பாடுகளின்படி நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. அரசிலமைப்பிலோ, மாகாணசபைகள் சட்டத்திலோ இந்தப் பதவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளிலோ, வடக்கு மாகாண நடைமுறை விதிகளிலோ இப் பதவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு மரபு வழிவந்த ஒன்றாகவே பாராளுமன்றத்திலும், மாகணசபைகளிலும் இருந்து வருகிறது.
எதிர்க்கட்சித்தலைவர்  பதவி. 
 
சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்று இருத்தல் வேண்டும். சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகள் அல்லது  குழுக்களின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் அவைத்தலைவரிடம் எழுத்து மூலமான  கோரிக்கையின் அடிப்படையில் அக் கட்சி  மற்றும் குழுக்களில் நம்பிக்கையை  வென்ற உறுப்பினரை அவைத்தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தல் வேண்டும்.
எதிர்க்கட்சித்தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காரணங்களை சமர்ப்பித்து அல்லது கூறி எதிர்க்கட்சியின் கட்சி மற்றும் குழுக்களின் பெரும்பான்மையான  உறுப்பினர்களினால் அவைத்தலைவரிடம் எழுத்து மூலம் கோரினால் அக் கோரிக்கையின் காரணங்களை  கவனத்தில் கொண்டு  அவரால்  எதிர்க்கட்சித்தலைவரை பதவி நீக்கம் செய்யமுடியும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அக்குழுவின் பெரும்பான்மை நம்பிக்கையை வென்ற உறுப்பினர் ஒருவரை, அவைத்தலைவர்; எதிர்க்கட்சி தலைவராக நியமித்தல் முடியும்.
எதிர்க்கட்சித் தலைவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காரணங்களை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினரால் அவைத்தலைவரிடம் எழுத்து மூலம் கோரினால் அக் கோரிக்கையில் அடங்கிய காரணங்களை அவதானத்தில் கொண்டு அவைத்தலைவர் எதிர்க்கட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்க முடியும்.
சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்று இருத்தல் வேண்டும். எதிர்க்கட்சிக் குழுவினால் அவைத்தலைவரிடம் எழுத்து மூலமான கோரிக்கையின் அடிப்படையில் அக்கட்சியுடன் கலந்துரையாடி  எதிர்க்கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்களின்  நம்பிக்கையைவென்ற  உறுப்பினர் ஒருவரை அவைத்தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க அல்லது  பதவியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரை பதவி விலக்க முடியும்.
வடக்கு மாகாணசபையைப் போன்று ஊவா மற்றும் மத்திய மாகாணசபைகளின் நடைமுறை விதிக் கோவைகளில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை.மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளின் படி பின்வருவன தெளிவாகின்றன.
எதிர்க்கட்சித் தலைவரை தீர்மானித்தல்,அங்கீகரித்தல் மற்றம் நீக்குதல் தவிசாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.எதிர்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் எழுத்து மூலமான கோரிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சித்தலைவரை நியமிக்கலாம் அல்லது நீக்கலாம்.
இவற்றை வழிகாட்டியாகக் கொண்டு 2016.12.01 ஆம் திகதி இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எமது 2016.11.25 ஆம் திகதிய கடித மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி 2016.12.01 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் நான்கு உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்;,கலந்துரையாடலின் பின்பு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தமது கருத்தை எழுதிக்   கடித உறையில் வைத்து எம்மிடம் வழங்க வேண்டும் என கோரியிருந்தேன் அதே போல் கூட்டத்தில் சமூகமளிக்க முடியாத உறுப்பினர்களும் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம்  கலந்துரையாடலுக்கு சமூகமளிக்க முடியாதுள்ளமையைத் தெரிவித்துக் கொண்டு தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2016.12.01 ஆம் திகதி தமது கருத்தைத் தெரிவிக்காது கால அவகாசம் கோரி கௌரவ வை.தவநாதன் அவர்கள் நேற்றைய தினம் அதாவது 2016.12.05 திகதியிட்ட கடிதமொன்றினை தொலைநகல் மூலம் எமக்கு அனுப்பியிருந்தார். அதில் கௌரவ சி.தவராசா அவர்கள் ஒருவாரமாக தமக்கு சாதகமாக ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அவர்களிடம் சம்மதக் கடிதங்களைப் பெற்றதாகவும் தெரிவித்து தமக்கு அதே வாய்ப்பு கிடைக்கவில்லையென்பதால் இன்றைய தினம் இந்த விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோரியுள்ளார்.
எனினும் கௌரவ எதிர்க்கட்சி உறுப்பினர்களது கடிதம் எழுத்து மூலமாக எமக்கு நேரடியாகவே கிடைக்கப்பெற்றன.  என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மேலும் கடந்த 2016.11.24 ஆம் திகதி 66 ஆவது அமர்வில் இந்த உயரிய சபைக்கு நான் அறிவித்தபடி எமது முடிவை இன்றைய அமர்வில் தெரிவிப்பது எமது கட்டாயமான கடமையாக அமைகின்றது.
இதே நேரம் இந்த விடயத்தை தங்களுக்குள்ளேயே பேசித்தீர்க்காது பந்தை எமது பக்கம் திருப்பி விட்டு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தி எதிர்மறையான விமர்சனங்கள் செய்வது பொருத்தமற்றதும் நியாயமற்றதும் கவலைக்குரியதுமாகும்.
எனவே மரபுவழி சம்பிரதாயங்கள் முன்னுதாரணங்கள் ஏனைய மாகாணங்களில் உள்ள விதிகள் என்பவற்றை ஆராய்ந்து பார்த்து எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவர் நடுநிலைமை வகிக்கும் நிலையில் இந்த உயரிய சபையின் பெரும்பாண்மை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கௌரவ சி.தவராசா அவர்களே எதிர்க்கட்சித் தலைவராக இருத்தல் வேண்டுமென தெரிவித்திருப்பதால் கௌரவ சி.தவராசா அவர்களே தொடர்ந்தும் வடக்கு மாகாண சபையின்  எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்து பதவிவகிப்பார் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More