குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரிசிக்கான விலை உயர்வினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். அரிசியின் விலையை தங்களது தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதிகரிப்பதற்கு வர்த்தகர்களுக்கு இடமளிக்கக் கூடாது என தெரிவித்துள்ள அவர் அரிசியின் விலை உயர்வினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
அரிசி விலை ஏற்றம் தொடர்பில் பல்வேறு காரணிகளை முன்வைக்காது, அதனை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் சில பகுதிகளில் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வயல் நிலங்கள் மண் கொண்டு நிரப்பப்பட்டு அவற்றில் கட்டடங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.