யாழ் சுன்னாக காவல் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சர்வதேச பிடியாணை பிறப்பித்து உள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை படுத்தி படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.
அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.
அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது விளக்கமறியலில் உள்ள 7 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மற்றைய சந்தேக நபர் வெளிநாட்டில் வசித்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை மேல் நீதிபதி பிறப்பித்தார்.
அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை மனு விண்ணப்பம் செய்தார்.
குறித்த பிணை மனுவை மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார். அதனை தொடர்ந்து 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.