மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விசேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில், ஏறாவூர்ப் பற்று பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்க வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இடம்பெறும் இந்த நடமாடும் சேவை அடுத்தடுத்து ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற உள்ளதாகவும், திருகோனமலையில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதமளவில் 1500க்கு மேற்பட்டவர்களின் காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.