210
இரண்டாயிரம் வருட தொன்மை கொண்ட ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு உரிமைக்காக தமிழமே வெகுண்டெழுந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றில் குறித்துக் கொள்ளுமொரு பண்பாட்டுப் புரட்சியே இது. ஒரு இனம் தனது பண்பாட்டு அடையாளங்களை இழக்க நேர்ந்தால் அந்த இனம் அழிந்து விடும் என்பார்கள். உலகமயமாதல் சூழல், அந்நிய சக்திகளின் தலையீடுகள், வணிக ஆதிக்க சக்திகளின் நடவடிக்கை போன்றவற்றால் தமிழ் இனம் தனது பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது.
இன்றைக்கு தமிழ் இனம் எஞ்சியிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பண்பாட்டு துறை சார்ந்த அறிஞர்கள், ஆர்வலர்கள் அது குறித்து கடுமையாக எச்சரித்து வந்திருக்கிறார்கள். உலகயமாதல் சூழல் பண்பாட்டின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எங்கள் காலத்தில் பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆட்டுக்கல்லு, அம்மி, உரல் உலக்கை போன்ற எமது பாரம்பரிய பொருட்களை எங்கள் காலத்திலேயே பறிபோய் விட்டன.
உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நலன் தரும் எங்கள் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றைக்கு இல்லை. ஒடியல் புட்டு, குரக்கன் புட்டு, உழுத்தங்கஞ்சி போன்ற உணவுகள் இன்றையை தலைக்குத் தெரியாத உணவு வகைகளாகிவிட்டன. பனையோலை வேலி, கிடுகு வேலி, துலாய்க்கிணறு என்று தனித்துவமான அடையாளங்கள் இன்றைக்கு வீடுகளில் இல்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர், சமாதான காலத்துடன் பண்பாட்டு நெருக்கடிகள் திணிக்கப்பட்டத் தொடங்கின.
2009இல் நடந்த போரில் வன்னியில் பண்பாட்டுப் பொருட்கள் பலவும் அழிக்கப்பட்டன. ஈழத்திலே தமிழ் இனம் எவ்வாறு இன அழிப்புக்கு உள்ளாகிறதோ அதைப்போலவே தமிழ் பண்பாட்டு அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள் தமக்காக உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு அடையாளங்களை வலுவாக பேணுகிறார்கள். அரச விழாக்களில் சிங்கள பண்பாட்டு உணவுகளே பரிமாறப்படுகின்றன. பண்பாட்டு அடையாளங்களை தெற்கு எங்கும் நிறுவியுள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கிலும் தமது பண்பாட்டை திணித்து, எமது பண்பாட்டை அழிக்கும் ஒரு பண்பாட்டுப் போர் புரிகின்றனர். புத்தர்சிலைகளும் இராணுவ உணவகங்களும் இராணுவ மயமும் இலங்கை அரச தலையீடுகளும் பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதாக தெளிவாக உணரலாம். தமிழ்ப் பண்பாட்டை அழிப்பதன் மூலம் தமிழ் இனத்தை அழித்துவிடலாம் என்று கருதுகின்றனர். எமது தேசத்தின் இளைய தலைமுறை நமது பாரம்பரிய பண்பாட்டின்மீது, கலாசார மரபின்மீது ஈடுபாடு கொள்ளும் காலம் இதுவாக இருக்க வேண்டும்.
ஈழத்தில் இன ரீதியாக ஒடுக்கப்பட்டு, பண்பாட்டு அழிப்புக்கு உள்ளாக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் தமிழகப் போராட்டம் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் தந்திருக்கிறது. ஈழத்தில், நல்லூர், கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று போராட்டக் களங்கள் பரந்து சென்றன. ஈழத்தில் புத்தனின் படையெடுப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு, தமிழகத்திற்காக ஈழம்! ஈழத்திற்காக தமிழகம்!! தாய் தமிழகத்திற்காக! சேய்த் தமிழகம்!!(ஈழம்) என்ற கோசங்கள் வலுப்பெற்றுள்ளன. எமது பண்பாடு, நில உறவு, இன உறவு என்பவற்றை இப் புரட்சி மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தமிழ் இனம் தன் இருப்பின்மீது கூரிய கவனத்தை ஏற்படுத்தக் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. பொது சனங்களில் குரலில் இனம், பண்பாடு, கலாசாரம் குறித்த உக்கிரம் மிகுந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்தச் சிந்தனையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது எமது எதிர்கால வரலாற்றின் இருப்புக்கு கட்டியம் கூறுகிறது. தமிழ் இனப் பண்பாட்டை எவரலாறும் அழிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கிறது.
இந்தியா என்ற மாயையை தமிழக மக்கள் உணர்ந்திருப்பதும் இந்தப் போராட்டத்தின் வெற்றியாகும். இந்தியா தமிழகத்தை அடக்கி ஒடுக்கிறதோ தவிர மக்கள் ஆட்சி புரியவில்லை. ஒருபோதும் தமிழகத்தின் குரலுக்கு இந்தியா செவிசாய்த்தில்லை. அன்றைக்கு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது தமிழகத்தின் உக்கிர குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தின் பேரழிவை தடுத்திருக்க முடியும். மாறாக இந்தியா எம்மை அழிப்பதில்தான் உறுதிபூண்டிருந்தது.
நாங்கள் சுதந்திரத்தை உணரவில்லை என்றும் ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் அடுத்த சுதந்திரதினத்தை நாங்கள் கொண்டாடவில்லை என்றும் தமிழகத்தைப் பிரித்துவிடு என்றும் தமிழக குரல்கள் வலுப்பெற்றுள்ளன. தமிழர்கள் தமது தொன்மையான கலாசாரம்மீது எத்தகைய மதிப்பு கொண்டுள்ளனர் என்பது இப்போதுதான் இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரிகின்றதாம். பெருமையடைகிறாராம். வெகுண்டெழுந்த தமிழகத்தை கண்டு, அதன் புரட்சி கண்டு, அதன் உக்கிரம் கண்டு மோடி அச்சமடைந்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சி, மோடி அரசுக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் அச்சம் ஊட்டும் புரட்சிதான். ஏனெனில் தமிழக மக்கள் போராடுவது ஜல்லிகட்டுக்காக மாத்திரமல்ல. அவர்கள் தங்கள் பண்பாட்டு உரிமைக்காக, இன மரபு உரிமைக்காக, சுய மரியாதைக்காக போராடுகின்றனர். இந்தப் புரட்சி, இந்தப் போராட்டம் எங்களுடைய பண்பாட்டு இருப்புக்காகவும் நடைபெறுகிறது. இந்தத் தொடக்கமும் திரள்வும் அரசுகளுக்கு அச்சம் ஊட்டக்கூடியது. ஈழத் தமிழர்களுக்கு ஒன்றென்றாலும் இனி தமிழகம் இப்படித்தான் வெகுண்டெழும் என்ற அச்சம் தரலாம்.. இந்தப் போராட்டம் இலங்கை அரசுக்கு அச்சமூட்டுவதன் மூலம் ஈழத் தமிழர்களாகிய எங்கள் இருப்புக்கும் அரணாக அமைவதும் இன்னொரு வெற்றியாகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love