பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று புதன்கிழமை மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.
திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய கௌரவமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹொக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
பத்திரிகையாளர்களில் திரை விமர்சகர் பாவ்னா சோமையாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இசைக் கலைஞர் விஷ்வா மோகன் பட் பத்ம பூஷன் விருதையும், பாடகர் அனுராதா பட்வால் பத்மஸ்ரீ விருதையும் பெறுகின்றனர். நாட்டின் மிக உயரிய கௌரவமான பாரத ரத்னா விருது இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்று அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன் பத்மஸ்ரீ விருது பெறுகிறார். சுனிதி சாலமன் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.