ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசாங்கம், மிருக நல ஆர்வலர்கள் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு மனுக்களும் எதிர்வரும் 31ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய வன மற்றும் சுற்றச்சூழல் துறை பிறப்பித்த அறிக்கையை திரும்பப் பெறுவது தொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும், மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் சட்டமாஅதிபர் முகுல் ரோஹட்கி சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து தமிழகத்தின் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ரோஹட்கியிடம் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் சமூக விரோத கும்பல் புகுந்ததே வன்முறைக்கு காரணம் – ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோத கும்பல் புகுந்ததே வன்முறைக்கு காரணம் எனவும் சில சமூகவிரோத சக்திகள் பிரிவினைவாத பதாகைகளை வைத்திருந்தனர் எனவும் அதற்கான ஆதாரங்கள் அரசிடம் இருக்கிறது எனவும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும் இளைஞர்களும் கடந்த 17ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 23ம் திகதி மெரினாவில் கூடியிருந்த மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதன் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.
இந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும் இன்று விளக்கமளிக்கமையிலேயே ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகார் மீதும் முழு விசாரணை நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.