இலங்கை கட்டுரைகள்

வடிவம் மாறும் போராட்டம் செல்வரட்னம் சிறிதரன்:-

அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தலைமையேற்று நடத்தி வந்த தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சொந்தக் கைகளில் எடுத்திருக்கின்ற ஒரு போக்கை அவதானிக்க முடிகின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பின்னால் மக்கள் அணி திரண்டு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடியதே வரலாற்றுப் பதிவாகும். ஆனால் யுததம் முடிவடைந்து எட்டு வருடங்களாகப் போகின்ற நிலையில் இத்தகைய போராட்ட வடிவத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.
அரசியல் உரிமை, மண் உரிமை, அடிப்படை உரிமை என்பவற்றை உள்ளடக்கிய தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமானது அரசியல் வழி சார்ந்தது. அதற்கு ஓர் அரசியல் தலைமை அவசியம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. ஆனால் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் மக்கள் விரும்புகின்ற அல்லது எதிர்நோக்கியிருக்கின்ற மாற்றங்களைக் கொண்டு வராத காரணத்தினால் போராட்டத்தைத் தாங்களே கைகளில் எடுக்க வேண்டிய அவல நிலைமைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். மக்களே வீதிகளில் இறங்கி தங்களுக்காகப் போராடுகின்ற காட்சியை வவுனியாவிலும், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவிலும் சமூகம் இப்போது சாட்சியாக இருந்து கண்டிருக்கின்றது.
வவுனியா நகர அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால், பொலிஸ் நிலையத்தின் எதிரில் நடத்தப்பட்ட நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டமானது, மிகக் கடுமையானது. நீர்கூட அருந்தாத நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி இரண்டு தந்தையர்களும் 12 தாய்மார்களும் உள்ளிட்ட 14 பேர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தார்கள்.
எந்தவிதமான முன் ஆயத்தங்களும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தைப் பலர் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு நோக்கி கொச்சைப்படுத்துகின்ற ஒரு போக்கைக் காண முடிகின்றது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் உண்மையிலேயே சாப்பிடாமலும் தண்ணீர்;கூட குடிக்காமலும் இருக்கின்றார்களா என்று சிலர் சந்தேகத்தோடு வேவு பார்த்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அப்படி செய்திருக்க வேண்டும். இப்படி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் உண்ணாவிரதம் இருந்தவர்கள் செய்யவில்லை. ஒரு நாடகமாகவே அதனை நடத்தி முடித்திருக்கின்றார்கள் என்று கடும் தொனியிலான விமர்சனங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான போராட்டங்கள் நீண்ட நாட்களாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை, இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஒரு விடயத்தை வசதியாக மறந்துவிட்டிருக்கின்றார்கள். அல்லது அதனை அறியாதவர்களாக – அறிய விரும்பாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது அவர்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் இருந்:து தெளிவாகத் தெரிகின்றது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்தே கடத்ததப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை எரியும் பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நல்லாட்சியில் அமைச்சராகப் பதவி வகிக்கின்ற மனோ கணேசன் யுத்த மோதல்கள் உச்சகட்டத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்காக உரத்து குரல் எழுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு மிக மோசமான உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. எநத நேரத்திலும் அவரும் வெள்ளை வானில் கடத்தப்படலாம், எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு மோசம் ஏற்படலாம் என்ற பயங்கரமான ஒரு சூழலில் அவர் காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகச் செயற்பட்டிருந்தார.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரும் வேறு சிலரும் இணைந்து உருவாக்கியிருந்த அமைப்பின் ஊடாக பல போராட்டங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தச் செயற்பாட்டின் வழியிலேயே வடக்குகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களைத் தேடிக் கண்டறிவதற்கான போராட்டங்களும கவனயீர்ப்பு நடவடிக்கைகளும் விரிவடைந்திருந்தன.
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் இங்கிருந்து கொழும்புக்குச் சென்று எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். அந்தக் காலப்பகுதியில் நிலவிய மிகத் தீவிரமான இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்காக வீதிகளில் இறங்க முடியாமல் இருந்தது.
ஆயினும் தங்களுக்குக் கிடைத்த சிறு சிறு இடைவெளிகளைப் பயன்படுத்திய காணாமல் போனவர்களின் தாய்மார்களும் தந்தையரும் குடும்ப உறவினர்களும் படிப்படியாக வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குத் துணிந்திருந்தார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார்கள்.
எந்தப் போராட்டமானாலும்சரி அதில் கலந்து கொள்வதற்கு அவர்கள் தயங்கியதே கிடையாது. வீதிகளிலும் பொது இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்காக அவர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே கிடையாது. பல வருடங்களாக அவர்கள் தமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றார்கள்.
இந்தப் போராட்டங்களின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்i. பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கப் போவதாக அரசாங்கத் தரப்பில் அறிவித்தார்கள். அந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் வவுனியாவுக்கும் கொழும்புக்கும் அலைந்த அலைச்சலையும், அதன் போது அவர்கள் அனுபவித்த வேதனைகளையும் எழுத்தில் வடிக்க முடியாது.
பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரின் வவுனியா அலுவலகத்தில் காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் பற்றிய ஒரு பெயர்ப் பட்டியல் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் அரசாங்கம் அறிவித்திருந்ததையடுத்து, அந்தப் பட்டியலில் காணாமல் போன தமது உறவுகளை அவர்கள் தேடினார்கள். ஒரே ஒருவரைத் தவிர வேறு எவரையும் அந்தப் பட்டியலில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்டறிய முடியவில்லை.
காணாமல் போனவர்களைத் தேடி, வவுனியாவுக்குப் படையெடுத்தவர்களைக் கண்ட அரசாங்கம் பொலிசாரின் ஊடாகக் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது. வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வசதிகளை ஏற்படுத்தி அங்கு காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய முறைப்பாடுகளைப் பொலிசார் பதிவு செய்தார்கள். அந்த முறைப்பாடுகளை வைத்து காணாமல் போனவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறியப் போவதாக பொலிசார் அறிவித்தார்கள்.
விழுந்து விழுந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்தார்களேயொழிய காணாமல் போயுள்ள ஒருவரைக்கூட அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல. கடத்தப்ப்ட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய பதிவேடு நிச்சயமாக பொலிசாரும், இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வாளர்களும் வைத்திருக்க வேண்டும் என்ற அலவலக நடைமுறைக்கு அமைவாக வைத்திருக்க வேண்டிய பட்டியலைக்கூட வெளியிடுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
அத்தகைய பட்டியல் தங்களிடம் இருப்பதாக வாய்தவறி கூறியிருக்கின்றார்களே தவிர, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ;அந்த பெயர்ப்பட்டியல் குறித்து அதிகாரபூர்வமாக அவர்கள் எதையுமே இன்று வரையிலும் கூறவில்லை.
இத்தகைய பின்னணியில்தான் தாய் தந்தையர்களும் சகோதரர்களும், மற்றும் குடும்ப உறவினர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி, ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். பிள்ளைகளைப் பிரிந்த வேதனையும், அவர்களைத் தேடி அலைவதில் அவர்கள் அனுபவித்துள்ள அவமானங்களுக்கும், இகழ்ச்சிகளுக்கும் அளவே கிடையாது. அதனால் அவர்கள் அனுபவித்துள்ள வலியின் வேதனைகளை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மிக மோசமான கழுத்தறுப்புக்கள், ஏமாற்றங்கள், அவமனாப்படுத்தல்களுக்கு ஆளாகியுள்ள போதிலும் தங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.
சென்ற இடங்களில் எல்லாம் ஏமாற்றத்தைத் தவிர நம்பிக்கை அளிக்கத்தக்க வார்த்தைகளை அவர்களால் கேட்க முடியவில்லை. வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை, அரசியல் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்டவை என்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள். இத்தகைய ஒரு பின்னணியில்தான் இனிமேல் தலைமைகளையும் தலைவர்களையும் நம்பியிருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவர்களாக அதி உச்ச போராட்டமாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அரசாங்கமும் அரசாங்கம் விரும்பவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் எவரேனும் உயிரிழக்க நேர்ந்தால், அது அரசாங்கத்திற்குப் பெரும் சிக்கலையே உருவாக்கும் என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்தது. அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு ராஸாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வவுனியாவுக்கு விஜயம் செய்து உண்ணா விரதம் இருந்தவர்களுடன் பேச்சுக்களை நடத்தி ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்து வைத்தார்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளின் போது சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து சரியான உடன்பாடு எட்டப்படவில்லை என்றெல்லாம் எழுந்தவாறாக சிலர் விமர்சிக்கின்றார்கள். உண்ணாவிரதம் இருந்தவர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளுக்காகவே குரல் கொடுத்த நடுத்தர வயதைக் கடந்த சாதாரண தாய்மார்கள். அவர்கள் சட்டத்தரணிகளோ அல்லது பேரம் பேசுகின்ற வல்லமை கொண்டவர்களோ இல்லை என்பதை இவ்வாறு விமர்சிப்பவர்கள் வசதியாக மறந்துவிட்டிருக்கி;ன்றார்கள்.
காணாமல் போனவர்களைத் தேடி குடும்ப உறவினரகள் வீதிகளில் நடத்திய போராட்டங்களின்போது அவற்றை வேடிக்கை பார்;த்த பலர் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்காகப் போராடுபவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டியது மனிதாபிமானமுள்ள அனைவரினதும் கடமையாகும். அத்தகைய ஆதரவை வழங்குவதற்கு விருப்பமற்றவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய போராட்டத்தையும் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவது அழகல்ல. அது மனித நாகரிகமுமல்ல.
காணாமல் போனவர்களைத் தேடிக்கண்டு பிடிப்பதற்காக நடத்தப்பட்ட வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தைப் போலவே, முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராம மக்கள் தமது காணிகளுக்காக கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினருடைய முகாமுக்கு எதிரில் போhராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் கடந்த நாலைந்து வருடங்களாகவே தமது காணி உரிமைக்காக – மண் உரிமைக்காகப் போராடி வருகின்றார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் அடுத்தடுத்து வஞ்சித்து வந்திருக்கின்றது என்பது மிகவும் கசப்பான உண்மையாகும். யுத்த மோதல்கள் தீவிரம் பெற்றிருந்த 2008 ஆம் ஆண்டு கேப்பாப்பிலவு மக்கள் பாதுகாப்புக்காக தமது கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்து, பல இடங்களிலும் தஞ்சம் புகுந்து இறுதியாக யுத்தம் முடிவடைந்தையடுத்து, செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் வைக்கப்பட்டு அங்கிருந்து மீள் குடியேற்றத்திற்காக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேப்பாப்பிலவுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் செட்டிகுளம் மனிக்பாம் அகதி முகாம் முழுமையாக அரசாங்கத்தினால் மூடப்பட்டது. அப்போது இறுதியாக அங்கு இருந்த 346 பேரில் கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்தவர்களே  பெரும்பான்மையாக இருந்தார்கள். ஏனையோர் முல்லைத்தீவு மாவட்டம் மந்துவில் கிராமத்தையும் வேறு சில இடங்களையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மனிக்பாம் மூடப்படுவது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவி;க்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் அவர்களின் சொந்தக் கிராமங்களில்; மீள்குடியேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மீள்குடியேற்றத்திற்காகச் செல்ல இருந்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று தமது காணிகளைப் பார்த்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதனால் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளைப் பார்த்து வரச் சென்றபோது, அங்கு இராணுவத்தினரும்: விமானப்படையினரும் தமது குடியிருப்பு காணிகளையும், விளைநிலங்களையும் ஆக்கிரமித்து முகாம் அமைத்து அந்தப் பிரதேசத்தையே அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்கள்.
இதனையடுத்து மனிக்பாம் முகாமில் இருந்து வெளியேற ஆயத்தமாகிய போதே அவர்கள் தங்களுடைய காணிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியிருந்தார்கள். அவர்களுடைய போராட்டக் குரலுக்கு இராணுவம் செவிசாய்க்கவில்லை.
ஆனாலும், போனால் சொந்தக் கிராமத்திற்குத்தான் போவோம். இல்லையேல் மனிக்பாம் முகாமை விட்டு வெளியேறமாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். ஆனால் எதுவுமே சரிவரவில்லை. மனிக்பாம் முகாமில் இருந்து அவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக வெளியேற்றி வற்றாப்பளை பாடசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அப்போது என்ன நடந்தது என்று கேப்பாப்பிலவு மக்கள் கூறியிருந்ததை மீட்டுப்பார்ப்பது அவசியமாகின்றது.
மனிக்பாம் முகாம் மூடப்படுவதனால், அங்கு நீங்கள் தங்கியிருக்க முடியாது. கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். உங்களை உங்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய முடியாது. எனவே வேறிடத்தில் எல்லா வசதிகளுடனும் உங்களைக் குடியேற்றப் போகின்றோம். உங்களுக்குச் சொந்தமாக எத்தனை ஏக்கர் காணி இருந்ததோ அத்தனை ஏக்கர் காணியையும் நாங்கள் தருவோம், வீடுகட்டித் தருவோம். வசதிகள் செய்து தருவோம் என்று மனிக்பாம் முகாமில் வைத்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர், வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி எல்லோரும் எங்களுக்கு உறுதியளித்துத்தான் எங்களை மனிக்பாம் முகாமில் வற்றாப்பளை பாடசாலைக்கு பஸ் வண்டிகளில் ஏற்றி வந்தார்கள். எங்களுடைய சாமான்களை லொறிகளில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.
திங்கட்கிழமை இரவு வற்றாப்பளை பாடசாலையில் தங்கவைத்துவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை கூட்டத்திற்கு வருமாறு எல்லோரையும் அழைத்தார்கள். அங்கு சென்றதும், உங்களுக்கு காணி தரப்போகிறோம். ஆதற்குரிய டோக்கன் இப்போது தருவோம் என்று சொன்னார்கள். நாங்கள் எங்களுக்கு டோக்கனும் வேண்டாம். காணியும் வேண்டாம். எங்களை எங்களுடைய காணிகளுக்குச் செல்ல விடுங்கள். அங்கு இராணுவம் இருந்தால், இராணுவம் இல்லாத குடிமனைக் காணிகளில் எங்களைக் குடியேற்றுங்கள் என எல்லோரும் ஒருமித்த குரலில் கூறினோம்.
ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்கின்ற இடத்திற்குத்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாகச் சொன்னார்கள். நாங்களும் பி;டிவாதமாக அவர்களுடன் வாதாடியபோது, இராணுவத்தி;னர் எங்களை தாக்கமுற்படுவது போல அச்சுறுத்தி தாங்கள் சொல்கின்றபடிதான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
நாங்கள் இவ்வாறு வாதாடிக் கொண்டிருந்த நேரம் அங்கிருந்த உயர் இராணுவ அதிகாரிகள் தங்களுக்குள் கூடி ஏதோ சி;ங்களத்தி;ல் கதைத்தார்கள். அதன் பின்னர் சாமான்கள் ஏற்றப்பட்டிருந்த லொறிகளை சீனியாமோட்டை குளத்திற்கு அப்பால் உள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதனையடுத்து லொறிகள் புறப்பட்டன. எங்களுடைய வீட்டுச் சாமான்கள் எல்லாமே லொறிகளில் இருந்ததனால், ஒருசிலர் சாமான்களை எங்கேயோ கொண்டு போகப்போகின்றார்கள் என்று நினைத்து லொறிகளுக்குப் பின்னால் ஓடினார்கள். அதேநேரம் அங்கிருந்த இராணுவத்தினர் மக்களுடைய கைகளிலும் பாடசாலையிலும் வைத்திருந்த பேக்குகள் பொருட்களைப் பறித்தெடுத்து அங்கு கொண்டு வரப்பட்டிருந்த ட்ரக்டர் வண்டிகளில் பவலந்தமாக ஏற்றிவிட்டு ஆட்களையும் பலந்தமாகப் பிடித்து ஏற்றி சீனியாமோட்டை குளத்துப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்றார்கள் அங்கு மூன்று புல்டோசர்கள் காடழித்துக் கொண்டு நி;ன்றது. காட்டு மரங்களையும் பற்றைகளையும் டோசர்கள் தள்ளிச் சென்று குவி;க்க, குவிக்க அங்கு ஏற்பட்ட வெளியில் காணிகளின் இலக்கங்களைக் குறிப்பிட்டு டோக்கன்களைக் கொடுத்து அவற்றில் போய் இருக்குமாறு கூறினார்கள் என கேப்பாப்பிலவு மக்கள் அப்போது செய்தியாளர்களிடம் கூறினார்கள்.
கட்டைகள் வேர்களுக்கு மத்தியில் சீர்செய்யாத காட்டு நிலத்தில் சிலர்; தங்களுடன் கொண்டு வந்திருந்த தகரங்களை மறைத்து தங்குமிடம் அமைத்தார்கள். வசதியில்லாதவர்கள் காட்டுப் பற்றைகளின் மறைவில் வெட்ட வெளியில் இருந்தார்கள். வெயில் எரித்துக் கொண்டிருந்தது. வெட்ட வெளியில் நிழலும் இல்லை. குடிசைகள் கூட இல்லை. லொறிகளில் இருந்து கண்டபடி இறக்கிவிடப்பட்ட சொந்தப் பொருட்களைத் தேடி எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் குடை நிழலில் குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படித்தான் கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் மனிக்பாம் முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டு அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவித்ததன்படி ‘மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள்’.
அதன்பின்னரே அந்த இடத்தில் கேப்பாப்பிலவ மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு அவர்கள் நிரந்தரமான வீடுகளில் குடியேற்றப்பட்டார்கள், கேப்பாப்பிலவு மக்களின் போராட்டக் குணத்தையும் பிடிவாதத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்த இராணுவத்தினர் அந்த மாதிரி கிராமத்தை வெளியுலகத்தில் இருந்து துண்டித்துத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. இரவு பகலாக இராணுவ புலனாய்வாளர்கள் அந்த மக்களை அவர்களுடைய வீடுகளிலும் வெளியிலும் கண்காணித்து வந்தார்கள் வெளியார் எவரும் அங்கு செல்ல முடியாத ஒரு சூழலும் நிலவியது.
ஆனாலும் அந்த மக்கள் தமது காணி உரிமைக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தினார்கள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள் போராடினார்கள். இதனால் அவர்களுடைய விளைநிலங்களின் ஒரு பகுதியை அவர்களால் மீட்க முடிந்தது.
தொடர்ந்து 84 பேருடைய குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்குப் படை அதிகாரிகள் இணங்கியிருந்தார்கள். அதுபற்றிய அறிவித்தலும் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இரண்டு தடவைகள் அறிவித்தவாறு ஜனவரி 23 ஆம் திகதியும், ஜனவரி 31 ஆம் திகதியும் அதிகாரிகள் வந்து அவர்களுடைய காணிகளைக் கையளிக்கவில்லை.
அதிகாரிகளின் அறிவித்தலை ஏற்று காணிகளைப் பொறுப்பேற்பதற்காக, ஆவணங்களுடன் 31 ஆம் திகதி சென்ற மக்கள் காணி கையளிக்கப்படும் வரையில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என உறுதியாகக் கூறி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்  இந்தப் போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் வழிநடத்தல் இல்லை. மாறாக அரசியல் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பின்னால் அணிதிரண்டிருப்பதையே காண முடிகின்றது.
காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதற்கான வவுனியா உண்ணாவிரதப் போராட்டமும், கேப்பாப்பிலவு காணி உரிமைக்காக போராட்டமும் முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாகவே பரிணமித்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ள நல்hhட்சி அரசாங்கத்தில், தமிழ் அரசியல் தலைவர்களினால் மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் போராட்டங்களுக்கும் நல்லிண்ககத்தின் அடிப்படையில் தீர்வு காண முடியாத அவல நிலைமையையே இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link