Home இலங்கை தேசிய கொடியேற்றுதல் மட்டும்தான் சுதந்திரமோ? பி.மாணிக்கவாசகம்

தேசிய கொடியேற்றுதல் மட்டும்தான் சுதந்திரமோ? பி.மாணிக்கவாசகம்

by admin

இலங்கை சுதந்திரமடைந்து 69 வருடங்களாகின்றன. எனவே, இது 69 ஆவது சுதந்திர தினமாகும். நல்லாட்சிக்கான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது.
இந்த நிலையில், நாட்டில் உண்மையான சுதந்திரம் நிலவுகின்றதா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, சுதந்திரமாக வாழ வழி கிடைத்திருக்கின்றதா என்ற கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாதிருக்கின்றது.
வடக்காக இருந்தாலும்சரி,  தெற்காக இருந்தாலும்சரி, அங்கு ஆர்ப்பாட்டம் இங்கு போராட்டம், போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது, பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டன என்ற செய்திகளே நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.
எனவே போராட்டங்கள் நடத்துவதுதான் இந்த நாட்டில் நல்லாட்சியின் கீழ் கிடைத்துள்ள சுதந்திரமோ என்று இப்போதைய நிலைமைகள் மயக்கம் தருகின்ற வகையில் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளியிட்டு நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தை மக்கள் ஆட்சி பீடமேற்றினார்கள். அதில் சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் புதிய ஆட்சி;யின் கீழ் அவர்களுக்குக் கிடைத்ததென்ன?
அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டனவா, அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதா என்றால், எதுவுமே நடக்கவில்லை என்ற பதிலைத்தான் பலரும் கூறுகின்றார்கள்.
அப்படியானால் இந்த இரண்டு வருட காலத்தில் நடந்தது என்ன? எத்தகைய முன்னேற்றத்தை இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு – குறிப்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தந்திருக்கின்றது என்ற கேள்வி சடுதியாக எழுகின்றது.
இந்த இரண்டு வருடங்களிலும் எதுவுமே நடக்கவில்லை என கூற முடியாது. பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இராணுவ அச்சுறுத்தல்கள் குறைந்திருக்கின்றன. அடக்குமுறை நடவடிக்கைகள் ஓய்ந்திருக்கின்றன. இராணுவ புலனாய்வாளர்களின் வெளிப்படையான நடவடிக்கைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
அச்சமின்றி மக்கள் நடமாடவும், வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு போராடவும் வழியேற்பட்டிருக்கின்றது. இராணுவ முகாம்களுக்கு எதிரில் கூட நின்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்துவதற்குமான சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் கவனிக்கப்பட வேண்டிய பல விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தாத ஒரு போக்கிலேயே சென்றுகொண்டிருக்கின்றது.
அரசாங்கம் தீவிரமான அக்கறையைச் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற பல விடயங்கள் தொடர்பில் மக்களுடைய உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
இதனை உண்மையான சுதந்திரத்தின் அடையாளமாகக் கொள்ள முடியாது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ம
.இத்தகைய ஒரு பின்னணியில்தான் இந்த அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு சுதந்திர தினம்  கொண்டாடப்படுகின்றது. தேசிய ஐக்கியம் என்பதே இந்த சுதந்திர தினத்தின் தொனிப் பொருளாகும்.
சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வை, மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு அமைச்சர்களின் பொறுப்பில் அல்லது அவர்களுடைய பங்களிப்பில் பல்வேறு மதங்களைச் சார்ந்த வணக்கத்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்வதற்குரிய முன்னேற்பாடுகளும் விசேடமாக செய்யப்பட்டிருக்கின்றன.
கொடியேற்றுதல் தான் சுதந்திரத்தின் அடையாளமோ?
இந்த சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றுகின்ற நிகழ்வு மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
வாள் ஏந்திய சிங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட சிங்கக் கொடி கம்பீரமாகப் பறக்கவிடப்படுவதற்காக நாட்டின் பல இடங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் தேசிய கொடி ஏற்றுவதே சுதந்திரமாகக் கருதப்படுகின்றது என்ற தோற்றத்தையே இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் குறியீடாகக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் சுதந்திர தினக் கொடியேற்றம் என்பது வெறும் சடங்காகவே நோக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்றுள்ள மக்கள் தமது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்படும்போது கொண்டிருக்க வேண்டிய உணர்வுபூர்வமான மன எழுச்சியையோ அல்லது சுதந்திரம் அடைந்திருக்கின்றோம் என்ற பொறுப்புணர்வுடன் கூடிய மனப்பாங்கையோ சுதந்திர தினத்தில் தமிழ் மக்களிடம் காணப்படுவதில்லை.
தேசிய ரீதியில் அவர்கள் சமமானவர்களாக சம அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்படாமையே இதற்குரிய முக்கிய காரணமாகும்.
அது மட்டுமல்லாமல் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்படும்போது உணர்வுபூர்வமாக பாடப்படுகின்ற தேசிய கீதத்தையும் அவர்கள் அதற்கே உரிய உணர்வுபூர்வமாக கேட்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
சுதந்திரத்தின் அடையாளமாக பாடப்படுகின்ற தேசிய கீதத்தைத் தமிழில் பாடக் கூடாது. அதனை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்ற பேரினவாதிகளின் பிடிவாதம் காரணமாக தமிழ் மக்கள் தேசிய கீதத்தின் மீது பற்று கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தேசிய கீதத்தைத் தமிழில் பாடலாமா முடியாதா என்பது குறித்து தேசிய மட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதையும், அரசியல் ரீதியாக பல்வேறு வியாக்கியானங்கள் வெளியிடப்பட்டதையும் யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
ஆனால் நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ், அதனுடைய முதலாவது பிரதான சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது கடந்த வருடம் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு, இதனைக் கேட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் கசிந்துருகி கண்ணீர் மல்கினார்கள். ஆனால் தமிழ் மக்கள் மனங்களில் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை.
தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருந்த சூழலில்,  முதன் முதலாக இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் காலத்திலேயே தமிழில் தேசிய கீதம் பாடப்;பட்டது. இதனை  ஒரு வரலாற்று சாதனையாகவே அரசியல்வாதிகள் கருதினார்கள். சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் அதனை வன்மையாகக் கண்டித்திருந்தார்கள்.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்ததும், முதலாவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனையடுத்து, 68 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்விலேயே, இரண்டாவது தடவையாக இவ்வாறு தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விசேட அம்சம் என்னவென்றால், அந்த நிகழ்வுக்குப் பின்னர் எந்தவொரு தேசிய நிகழ்விலும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது ஒரு தேசிய பிரச்சினையாகவே நோக்கப்பட்டதன் காரணமாக பல முக்கிய நிகழ்வுகளில் தேசிய கீதம் பாடப்படுவதற்குப் பதிலாக இசை மெட்டாக அதனை ஒலிபரப்புவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓர் உத்தியாகவே கையாண்டு வருகின்றார்கள்.
தேசிய கீதத்தின் மெட்டை இசைக்கும் போது அது தமிழா அல்லது சிங்களமா என்ற வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியாது. அதனால் அது சிங்களத்தில் பாடப்பட்டதா தமிழில் பாடப்பட்டதா என்ற பட்டி மன்ற விவாதத்திற்கும் அதனையொட்டிய விவகாரத்திற்கும் இடமில்லாமல் செய்யப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னரான சுதந்திரம் சார்ந்த நிலைமைகள்  
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள்.
அவற்றில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பது, அந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்; அரசாங்கம் பொறுப்பு கூறுவதுடன், அது குறித்து நீதி வழங்க வேண்டியது போன்ற பிரச்சினைகள் மிகுந்த உணர்வுபூர்வமானவையாகத் திகழ்கின்றன.
இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தீவிரமான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்த உடனேயே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்;த்திருந்தார்கள். ஆனால்; முன்னைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளை முக்கிய பிரச்சினைகளாகக் கவனத்தில் கொள்ளவே இல்லை.
இராணுவம் நிலைகொண்டிருந்த சில காணிகள் உரியவர்களிடம் மீளக் கையளித்த போதிலும், இராணுவத்தின் பிடியில் இருந்த பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு அந்த அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற மென் அரசியல் போக்கைக் கொண்டிருந்த புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உண்மையிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு கானல் நீராகவே மாறியிருக்கின்றது.
முன்னாள் போராளிகளான பன்னீராயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச தானாகவே விடுதலை செய்தார். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர் அக்கறை காட்டவே இல்லை.
அவர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டிருக்கலாம். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி விட்டார்கள் என்று அந்த அரசாங்கம் கூறியது. இராணுவமோ அரசாங்கமோ எவரையுமே காணாமல் ஆக்கவில்லை என்று திட்டவட்டமாக அப்போதைய ஆட்சியாளர்கள் மறுத்திருந்தார்கள்
.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுதலை செய்ததைப் போலவே சில அரசியல் கைதிகளையும் அரசியல் சார்பு நிலையிலும், கடுமையான நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவும் அந்த அரசாங்கம் விடுதலை செய்திருந்தது.
எஞ்சியிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை அந்த அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தானாகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வரவில்லை. அல்லது அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை.
இதனால் தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகளின்றி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, போராட்டங்களை நடத்தினார்கள். சாகும்வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்கள்.
அதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஊடாக எழுத்து மூலமாக ஓர் உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.
ஆனால் அந்த உறுதிமொழிக்கு அமைவாக உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ முன்வரவே இல்லை. ஒரு சிலரை இழுத்தடிப்பின் கீழ் மாற்று வழிகளில் தாமதமும் சிக்கலும் நிறைந்த வகையில் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்கள். அவர்களுக்கும் உரிய முறையில் உடனடியாக சுதந்திரம் வழங்கப்படவில்லை.
சில நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைமைக்கு அந்தக் கைதிகள் தள்ளப்பட்டிருந்தார்கள். போராட்டங்கள் நடத்திய பின்னரும்கூட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு சுதந்திரம் வழங்க முன்வரவில்லை.
சுதந்திர வாழ்க்கைக்கன காணி விடுவிப்பு
பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி, அந்தக் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளித்து அவர்கள் சுதந்திரமாக மீள் குடியேறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதிலும் நல்லாட்சி அரசாங்கம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான கிராமங்களில் இருந்து மக்களை வலிந்து வெளியேற்றிய இராணுவம் அந்த மக்களுடைய குடியிருப்பு காணிகளையும், விளைநிலங்களையும் ஆக்கிரமித்திருந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வாறு ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமும் விரும்பவில்லை. அரசாங்கமும் அதற்கு முன்வரவில்லை.
இதனால் சொந்தக் காணிகளில் குடியேறி வாழ்வதற்குரிய சுதந்திரத்தை இழந்தவர்களாக வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் முகாம்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் இன்னும் வசித்து வருகின்றார்கள்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராம மக்களும் தமது சொந்தக் கிராமத்திற்குள் சென்று குடியேறுவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதுபோன்று வடகிழக்கு மாகாணங்களில் எண்ணற்ற  குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். காணி உரிமை என்ற பிறப்பு உரிமை சார்ந்த சுதந்திரத்தை இழந்திருக்கின்றார்கள். எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியும்கூட அரசாங்கம் விட்டுக் கொடுப்புக்குத் தயாராகவில்லை.
ஆனால் கிள்ளிக் கொடுப்பது போன்று நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை மாத்திரம் அவ்வப்போது அவற்றின் உரிமையாளர்களிடம் இந்த நல்லாட்சி அரசாங்கம் கையளித்திருக்கின்றது.
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் பகுதியில் அகதி முகாம்களில் ஒட்டைக் குடிசைகளில் வசிக்கின்ற மக்களைச் சென்று சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய காணிகள் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளித்திருந்தார். ஆனால் அந்த உறுதி மொழியை அவர் சரியான முறையில் நிறைவேற்றவில்லை.
இதனால் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக சொந்தக்காணிகளுக்குத் திரும்பிச்சென்று வாழ முடியாமல் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மற்றுமொரு வேடிக்கையான சம்பவமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து சுதந்திரமாக வாழ்ந்து வந்த மக்களுடைய காணிகளை தேசிய பாதுகாப்பைக் காட்டி, அத்துமீறி கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்திடமிருந்து அந்தக் காணிகளை விடுவித்து உரிமையாளர்களிடம் கையளிப்பiதை கோலாகலமான அரச நிகழ்வாகவும், அரசியல் நிகழ்வாகவுமே அரசாங்கம் நடத்தி வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனையோ தடவைகள் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய பின்பே, இவ்வாறு இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு ஏன் விழா நடத்த வேண்டும் என்ற கேள்வியுடனேயே மக்கள் தமது காணிகளைப் பொறுப்பேற்கின்றார்கள்.
இராணுவம் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடமே கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால் அந்த கைங்கரியத்தை பெரும் பணம் செலவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாடி வருவதைக் காண முடிகின்றது.
 காணிகள் கையளிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த விழாக்கோல நடவடிக்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது.
அரச ஊழல்களையும், ஊதாரித்தனத்தையும் இல்லாமல் செய்வதாக உறுதியளித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள மைத்திரி ரணில் விக்கிரமசிங்க கூட்டாட்சியினர், காணிகளை விடுவிக்கும் நிகழ்வுக்கு செலவு செய்கின்ற நிதியை அந்தக் காணி உரிமையளார்களுக்குப் பகிர்ந்தளித்து, அவர்கள் சுதந்திரமாக மீள் குடியேறுவதற்கு ஊக்குவிக்கலாம் அல்லவா?
ஆனால் அத்தகைய சிந்தனை அற்றவர்களாகவே அரச தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சுதந்திர வாழ்க்கைக்கான ஊக்குவிப்புச் செயற்பாடுகள்
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்த கிழக்குத் தீமோர், சூடான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அந்த நாடுகளின் அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களுடைய மறு வாழ்வுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆறச் செய்வதுடன், யுத்தத்தினால் அழிவுக்குள்ளாகிய தமது வாழ்க்கையை புனரமைத்துக் கொள்வதற்கு சுதந்திரமாகவும், உற்சாகமாகவும் செயற்பட வழி வகுத்திருக்கின்றது.
ஆனால் இலங்கையில் அத்தகைய சலுகைகளோ அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகiளோ பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தத் தக்க வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பட்டும் படாத வகையிலேயே உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சீராக நன்கு திட்டமிட்ட புனர்வாழ்வு நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், யுத்தப் பாதிப்பு காரணமாக தங்களுடைய சுதந்திரத்தை இழந்திருந்தார்கள். அந்த நிலையில் அவர்களின் மறுவாழ்வுக்காகப் புதிய திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நல்ல நோக்கம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
அவ்வாறான நோக்கம் இருந்திருக்குமேயானால், யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல்வேறு தொழிற்சாலைகள், பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான விசேட வேலைவாய்ப்புக்கள் மற்றும் உயர் கல்விக்கான புதிய உயர் கல்வி நிலையங்கள் போன்றவற்றை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான சலுகைகளோ வசதிகளோ செய்யப்படவில்லை.
மாறாக மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நடமாட்டச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவற்றைப் பறித்தெடுத்த வகையில் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான இராணுவ கண்காணிப்பிலேயே முன்னைய அரசு அந்த மக்களை அடக்கி வைத்திருந்தது.
இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைத் தளர்த்தி சிறிது சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்குப் புதிய அரசாங்கம் விநோதமான சுதந்திரத்தையே அந்த மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.
முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், மக்கள் எவரும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தலாம். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம். கோஷங்கள் எழுப்பலாம். கூக்குரல் இடலாம். வேண்டுமானால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போரரட்டத்தை நடத்தி உயிரையும் மாய்த்துக் கொள்ளலாம். இதற்கான சுதந்திரம் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இந்தப் போராட்டங்களை நடத்துகின்ற – பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேதனைகளையும், துயரங்களையும் உணர்ந்தறிந்து, அந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு அவர்களைத் தூண்டியிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
வீதிகளில் இறங்கி போராடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் நல்லாட்சியில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.
வீதிகளில் இறங்கிப் போராட முடியும்> தங்களுடைய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க முடியும் என்பது உண்மையான சுதந்திரமல்ல.
பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களை நிம்மதியாக வாழ வழி செய்வதே உண்மையான சுதந்திரமாகும்.
இந்த சுதந்திரத்தை நல்லாட்சி அரசாங்கம் தனது மூன்றாவது ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்பாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More