இலங்கை கட்டுரைகள்

அதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் போராட்டத்தில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறியிருக்கின்றனர்;. காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதையும் அவர்கள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

கூட்டமைப்பினர் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களின் குற்றச்சாட்டாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுடைய கோரிக்கைக்கும், கூட்டமைப்பு அரசாஙகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இதன் காரணமாகவே தாங்கள் சாகும் வரையிலான போராட்டத்தைத் தாங்களே தமது கைகளில் எடுத்துப் போராடியதாகவும், அந்தப் போராட்டத்தின் ஊடாகவே அரச தரப்பில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக அலரி மாளிகைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்திருந்த அவர்கள், கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அரச தரப்பினருடனான பேச்சுக்களில் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் அங்கு இருக்கவே கூடாது என்று பிடிவாதமான ஒரு போக்கைக் கடைப்பிடித்திருந்தார்கள்.

தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே பெரும்பான்மையான தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையிலேயே பெரும்பான்மையானவர்கள் கூட்டமைப்பினருக்கு தேர்தல்களில் வாக்களி;த்திருக்கின்றனர். வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக்கண்டறியும் சங்கத்தினர் கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்கள்.

தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக கூட்டமைப்பினர் நடந்து கொள்கின்றார்களா என்ற கேள்விக்கு, வெளி அரசியல் களமொன்றில் பதிலளிக்கும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் கடைப்பிடித்திருந்த போக்கு அமைந்திருக்கின்றது.

கூட்டமைப்பின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத்தினர், எதிர்த்தரப்பினராகிய அரசாங்கத் தரப்பினருடைய முன்னிலையில் கடும் போக்கு நிலையில் வெளிப்படுத்தியிருப்பது கவலைக்குரியது.

அது மட்டுமல்ல. தீவிர சிந்தனைக்கும் உரியது என்றே கூற வேண்டும். சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த 14 பேரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு மட்டும் பொறுப்பு கூற வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தவில்லை.

அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள அனைவருடைய நிலைமையும் என்ன, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற கோரிக்கையை பிரதான கோரிக்கையாக முன்வைத்தே போராட்டம் நடத்தியிருந்தார்கள்.

ஆனால் அந்தப் போராட்டத்தை பதினான்கு பேருக்காக மட்டுமே நடத்தப்பட்ட போராட்டமாக அரச தரப்பினர் கருத்தில் கொண்டிருந்ததை, இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அந்த 14 பேருக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கலாம் என அவர்கள் முன்வைத்திருந்த ஆலோசனையின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வவுனியாவுக்கு வருகை தந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்த உறுதிமொழிக்கு அமைவாக கொழும்பு பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உறுதியான தீர்க்கமான முடிவு எதனையும் வெளிப்படுத்தவில்லை.

பாதுகாப்புக்கும், அரசியல்; கைதிகளுக்கும் பொறுப்பான துறைகளைச் சார்ந்தவர்களான அவருடன் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க, சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைசசர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர்களால் தீர்மானமாக எதனையும் கூற முடியாமல் போயிருந்த நிலையில், நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அவர்களால் தீர்மானமாக எதனையும் கூற முடியவில்லை. அந்த விடயத்திலும் தங்களுக்கு அதிகாரமில்லை என்பதையே அவர்கள் குறிப்பாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை தொடர்பில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையானது, முடிவுகள் மேற்கொள்ளத் தக்க அதிகாரம் கொண்டவர்களுடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும். உண்ணாவிரதத்தை முடித்து வைக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினருடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

அத்தகைய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இரண்டாம் நிலை அமைச்சர்களுடனான பேச்சுக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறுவது போன்ற மிகவும் தீவிரமான பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்பு அரசியல் தலைமைக்கு அப்பால் அடிமட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுடைய மனப்போக்கும், அவர்கள் அராசங்கத்தின் மீது என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினையிலும் அரசாங்கத் தரப்பினர் எதனையும் செய்யக்கூடிய வல்லமையற்றவர்கள் என்பதை இந்தப் பேச்சுவார்த்தை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றது என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதையும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அர்த்தபுஸ்டியான வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து நிலை மாற முடியாது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம். இப்போது அவர் பதவியில் இல்லை. வேறு ஒருவரே பதவியில் இருக்கின்றார்.

ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் கீழ் நடைபெறவில்லை. அதனால் இந்த அரசாங்கம் பொறுப்பு கூற முடியாது. அந்தப் பிரச்சினைக்க பொறுப்பேற்கவும் முடியாது என்று மறுத்துரைக்க முடியாது.

நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் அதிகாரத்தில் உள்ள அரசாங்கமே நடந்து முடிந்த குற்றங்சகளுக்கும் நடந்து முடிந்த சம்பவங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

இந்த நிலையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் இந்த அரசாங்கத்தினால் பொறுப்பு கூற முடியாது. இவர்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதுவுமே செய்ய முடியாது என்று புறந்தள்ளிவிட முடியாது. அத்தகைய ஒரு நிலைப்பாட்;டை வெளிப்படுத்துவதற்காகவே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கருதவும் முடியாது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, திரை மறைவில் இருந்து சாதுரியமாகக் கையாண்டவர்கள், அந்தப் போராட்டத்தைத் தோல்வியடையச் செய்திருக்கின்றார்கள்.

அதனைப் பயனற்றதாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நான்காவது நாளில் அந்தப் போராட்டத்தை முடிவுறுத்தாமல், தொடரச் செய்திருந்தால் போராட்டம் வெற்றியடைந்திருக்கும் என்ற கருத்தையும் சில தரப்பினர் வெளிப்படுத்தியிருந்தனர்.

எது எப்படியாயினும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருப்பதையே காண முடிகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அடுத்த கட்டமாக என்னவிதமான நடவடிக்கையை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய பேச்சுவார்த்தையில் ஆகக் குறைந்தது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் என விடுக்கப்பட்ட கோரி;க்கைக்கும் சரியான பதிலளிக்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையைப் போலவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய பிரச்சினையும் மிகவும் முக்கியமானது.

அந்தப் பிரச்சினையில் முன்னைய அரசு கடைப்பிடித்து வந்த பாராமுகமான போக்கையே நல்லாட்சிக்கான அரசாங்கமும் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லதல்ல.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பதை அரச தரப்பினர் ஒரு புதிய பிரச்சினை போலவும், அதனை தீண்டத்தகாத ஒரு பிரச்சினையாகவுமே நோக்குகின்ற போக்கைக் காண முடிகின்றது.

இந்தப் போக்கு மிகவும் தவறானது. ஏனெனில் தற்போது விடுதiயின்றி சிறைச்சாலைகளில் வாடுகின்றவர்களைப் போன்ற தமிழ் அரசியல் கைதிகள் முன்னரும் சிறைச்சாலைகளில் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு கட்டங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த சம்பவங்களில் அவர்கள் சாதாரணமாக விடுதலை செய்யப்படவில்லை. பொதுமன்னிப்பளிக்கப்பட்டு முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இத்தகைய விடுதலையளிப்புச் சம்பவங்கள் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வேளையிலும், யுத்தம் முடிவுக்கு வராமல் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த காலப்பகுதியிலும் இடம்பெற்றிருக்கின்றன என்பது கவனத்திற்குரியது.

எனவே, யுத்தம் முடிவடைந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், அதுவும் பயங்கரவாதம் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் இன்னும் தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டு அதுபற்றி கவனம் செலுத்தாமல் இருப்பது நியாயமானதொரு நடவடிக்கையாகத் தோன்றவில்லை.

அது மட்டுமல்ல. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தால் நாட்டில் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடும். நாட்டில் நிலவுகின்ற அமைதி நிலைமை குலைந்துவிடும் என்று அரசியல் ரீதியாகப் பூச்சாண்டி காட்டுகின்ற போக்கில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையானது, தேசிய நல்லிணக்கம், ஐக்கியம், சகவாழ்வு போன்றற்றை உருவாக்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகளின் உண்மைத் தன்மையை சந்தேகிக்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

வடக்கு கிழக்கில் ஆயுத போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக, தென்பகுதியில் ஜேவிபியினர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி அப்போதைய அரசாங்கத்தினால் இராணுவத்தைப் பயன்படுத்தி கொன்றொழிக்கப்பட்டார்கள்.

அதேவேளை, இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த அந்த ஆயுதப் போராட்டத்தில் அரச படைகள் முன்னெத்திருந்த உயிரழிப்பு நடவடிக்கைகளில் உயிர்தப்பியிருந்தவர்களுக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டிருந்தது.

தமிழ் இளைஞர் யுவதிகள் வடக்குகிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுத்திருந்த ஆயுதப் போராட்டத்திற்கும் ஜேவிபியினர் முன்னெடுத்திருந்து ஆயுதப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆயுதப் போராட்டத்தில் தட்டிக்கழிக்க முடியாத வகையில் அரசியல் ரீதியான நியாயங்களும் கோரிக்கைகளும் இருந்தன.

அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாத நிலையில் தமிழ்த்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியைத் தழுவியிருந்தன. அந்தப் போராட்டங்கள் ஆயுத முனையில் நசுக்கப்பட்டதையடுத்தே, தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்திப் போராட்டத்தில் குதித்திருந்தார்ககள்.

நியாயபூர்வமான அத்தகைய காரணங்கள் எதுவுமற்ற நிலையில் ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜேவிபியினருக்கு அரசாங்கங்கள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்து அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் அரசியல் செய்வதற்கான அங்கீகாரம் வழங்கபட்டது.

அதேபோன்று 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து, வெலிக்கடை மற்றும் பலாலி ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அன்றைய சூழலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கப்படவில்லை. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள். இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த மாகாண சபை முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுகூட தமிழ் தரப்பினரால் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதேபோன்று, 2002 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் செய்து கொண்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அந்தக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்திலும், மேல் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த 13 தமிழ் அரசியல் கைதிகள் அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் சிறைச்சாலைகளில் இருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு ஓமந்தையில் அப்போது செயற்பட்டிருந்த இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தார்கள்.
இதற்குப் பதிலாக தங்களிடம் போர்க்கைதிகளாக இருந்த 6 இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் விடுதலை செய்திருந்தனர்.

இது மட்டுமல்ல. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களைப் போன்று எல்லை கடந்து போதைப்பொருள் கடத்தி வந்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்தியர்களை அரசாங்கம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தது.

இதனையடுத்து, முன்னைய ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராகிய ஜெனிபனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஓராண்டு கால ஜனாதிபதி பதவியேற்பு தினத்தையொட்டி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நல்லெண்ண வெளிப்பாடு என தெரிவித்து பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.

முன்னைய ஜனாதிபதியைப் போன்று நீதிபதிகளுடன தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு நீதித்துறையில் அரசியல் ரீதியாகத் தலையீடு செய்ய மாட்டேன் என தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு வழக்கு விசாரணைiயை எதிர்கொண்டிருந்த ஜெனிபனை விடுதலை செய்திருந்தார்.

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் பலரும், ஏனைய மோசமான குற்றங்களைப் புரிந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காகவும், நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகவும், மற்ற தரப்பினருக்கு விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கான சமிக்ஞையாகவுமே பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்களாகிவிட்ட போதிலும், சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வராமல் இருப்பது எந்த வகையில் நியாயமானது என தெரியவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்தான் நீதி மறுக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா போன்றவர்களுக்கு முன்னைய அரசாங்ககத்தினால் வழங்கப்பட்டிருந்த தண்டனைகளும் குற்றச்சாட்டுக்களும் முழுமையாக நீக்கப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது.

நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு கடந்த ஆண்டில் மாத்திரம் மூன்று தடவைகள் மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களுடய மரண தண்டனை ஆயட்காலத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தது.

வெசாக் தினம் சிறைக்கைதிகள் தினம், சுதந்திர தினம், நல்லாட்சி மலர்ந்த தினம் எனக்கூறி சிறைக்கைதிகள் அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், ஒரு தமிழ் அரசியல் கைதிகூட அவ்வாறு விடுதலை செய்யப்படுவதில்லை.

கைதிகளுக்கான எந்தவொரு மன்னிப்பு நடவடிக்கையிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இதனால் இப்போது, ஆறு தொடக்கம் 24வருடங்கள் வரையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 130 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் வதைபடுகின்றார்கள்.

அரசியல்வாதிகள், அரசியல் அந்தஸ்து படைத்தவர்கள், வசதியானவர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கும் தமிழ் கைதிகளுக்கும் மற்றுமொரு நீதி என்ற வகையில் நீதி தவறிய வகையிலேயே நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொண்டிருக்கி;ன்றது என்று சிறைச்சாலைகளில் துன்புற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மனக் கொதிப்போடு கூறுகின்றார்கள்.
முன்னைய ஆட்சியில் நீதித்துறை அரசியல் மயப்பட்டிருந்தது. இதனை உலகமே நன்கறிந்திருந்தது.

அந்த ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அரசியல் அந்தஸ்து பெற்றவர்களுக்கு நிவாரணமாக நீதி வழங்க முடியுமானால், அந்த ஆட்சியில் அதே நீதிததுறையினால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் நீதி வழங்க முடியாது? ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது? – என்று தமிழ் அரசியல் கைதிகள் மனம் நொந்து வினவுகின்றார்கள்.

உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பலதரப்பட்டவர்களினாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கி;ன்றது.

இதனை ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கி ஒப்புக்கொண்டுள்ள அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இதுவரையிலும் அந்த விடயத்தைக் கண்டுகொள்ளாத போக்கிலேயே அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய போக்கில் இருந்து அரசாங்கம் மாற வேண்டும். ஐநாவின் 14 ஆவது சர்வதேச வெசாக் மாநாட்டை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இலங்கையில் நடத்துவதற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

நிலையான சமாதானம் என்ற தொனிப்பொருளில் பௌத்தத்தின் மகிமையை உலகறியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக உலக சமாதானத்திற்கு பௌத்த தர்மத்தின் போதனைகளைப் பிரசாரம் செய்யவும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

எனவே நல்லிணக்கம், சமாதானம் சகவாழ்வு என்பவற்றின் அடையாளமாக இந்தச் சந்தர்ப்பத்திலாவது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோருகின்றார்கள்.

இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக இந்தச் சந்தர்ப்பத்திலாவது அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பலதரப்பினரும் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் அரசியல் கைதிகள் முன்வைத்திருக்கின்றார்கள்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.