170
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து நாம் வெளியேறுவதா, அல்லது தமிழரசு கட்சியை வெளியேற்றுவதா , என்பது தொடர்பில் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்போம். என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்,
மேலும் தெரிவிக்கையில் ,
கூட்டமைப்பு உடைந்தால் அதற்கு காரணம் சம்பந்தனே.
தமிழரசுக் கட்சியினர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இந் நிலை தொடருமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார். கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் அதற்கான முடிவையும் எடுப்போம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பாரிய முரண்பாடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. சம்பந்தன் 2016 இற்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் அதுவரை அனைவரும் ஒற்றுமைகாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாங்களும் அவரது கருத்திற்கு மதிப்பளித்து பேசாது இருந்துவிட்டோம். ஆனால் இன்று அவர் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவிட்டார். அவர் மட்டுமல்ல தமிழ் மக்கள் கூட ஏமாற்றப்பட்டுவிட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி இதுவரை காலமும் இராஜதந்திர அரசியல் செய்கின்றோம் என்றது. ஆனால் இப்போது அவர்கள் ஏமாந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பங்கு இருக்கின்றது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யார் வெளியேறவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையான பாதையில் கொண்டு செல்பவர்கள் அதை விட்டு வெளியேறுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் அவர்களை விட்டு வெளியேறுவதா என்ற கேள்வி எழுகின்றது. எனவே தொடர்ச்சியாக இந் நிலை தொடருமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தியவர் என்ற பெயரை திரு சம்பந்தன் பெறுவார்.
கேப்பாபுலவு மக்களை கொழும்புக்கு அழைத்ததை கண்டிக்கிறோம்.
கேப்பாபிலவிலே மக்கள் மேற்கொண்டு வருகின்ற நில மீட்ப்பு போராட்டத்தின் மக்களை கொழும்புக்கு வாருங்கள் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளலாம் என மக்கள் பிரதிநிதிகள் கூறுவதை நாம் கண்டித்துள்ளோம்.
அதாவது மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களது வாக்குகளை பெற்ற தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை கொழும்புக்கு அழைத்து பேசுவதோ அங்கே வைத்து அவர்களை குழப்புவதோ, அதனை நிறுத்துவதோ தவறு என்றும், தமிழ் மக்களது பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களோடு அவர்களது பக்கமிருந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி மக்களது கோரிக்கைகளை வெற்றிபெற செய்வேண்டும். இவ்வாறான விடயங்களை நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அவர்களுக்கு சுட்டிக்காட்டி வருகின்றோம்.
தமிழ் மக்கள் பேரவையென்பது அரசியல் கட்சியல்ல.
தமிழ் மக்கள் பேரவையென்பது அரசியல் கட்சியல்ல அது அழுத்தம் கொடுக்கின்ற ஒர் குழுவாகவே செயற்படும் என அதன் இணைத் தலைவர்களால் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் இவ் அழுத்த குழுவினூடாக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலன் சார்ந்து எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவுமே இக் குழு அழுத்தத்தை மேற்கொண்டு வருகின்றது
என மேலும் தெரிவித்தார்.
Spread the love