மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் கடல் பிராந்தியங்களில் காற்று பலமாக வீசிவருவதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டு, மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பினால் பாரிய அலைகள் ஏற்பட்டு, கடல் நீர் கிராமத்தை முன்நோக்கி நகருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடி வள்ளங்கள் மற்றும் படகுகள் கடந்த சில நாட்களாக கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் மீன் வாடிகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உள்ளிட்ட பிரதேச மீனவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காற்று தொடர்ந்தும் வீரியத்துடன் வீசி வருகின்ற நிலையில், கடல் கொந்தளிப்பு நீடிக்குமென மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.