ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சிச் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸின் நீதி செயற்பாட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் பொப் குட்லட் உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
குடந்த 30 வருடங்களாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் அமெரிக்க உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், இலங்கை ஜனாதிபதியிடும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.