பத்மநாபசுவாமி கோவில்லில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது 2 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறையில் குவியல் குவியலாக தங்க, வைர, வைடூரிய நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த கோவிலுக்கு மத்திய பொலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் இருந்த கோவிலின் நிர்வாகம் தற்போது உயர் நீதிமன்றம் நியமித்த குழுவினரிடம் உள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறன. இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் கரும்புகை கிளம்பியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ விரைவாக பரவியது. இது குறித்து திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் பாதுகாவலர்களும் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் கோவில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். வடக்கு வாசல் பகுதியில் பழைய பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.