Home இலங்கை கடும் மழை குளிரை பொருட்படுத்தாது ஏயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் படுத்துறங்கி போராட்டம்

கடும் மழை குளிரை பொருட்படுத்தாது ஏயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் படுத்துறங்கி போராட்டம்

by admin


கடும் காற்று மழை குளிருக்கு மத்தியில் இரண்டாவது நாளாகவும், கண்டி உன்னஸ்கிரியாவிலுள்ள ஏயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று காலை  ஆரம்பித்த இந்த போராட்டத்தில் நேற்று இரவு வீதியிலே மழை  குளிரில் நடுங்கி படுத்துறங்கியுள்ளனர். இன்று இரண்டாவது நாள் மஸ்கெலியாவிலிருந்து வந்துள்ள சுமார் 25 பேர் குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளளர்.

குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தெரிவிக்கையில் ,

கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் எயாபார்க் தோட்டம் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் (SLSPC) கீழ் இயங்கி வருகின்றது. இத் தோட்டத்தில் மொத்தம் ஆறு டிவிசன்கள் காணப்படுகின்றது. இங்குள்ள  மொத்த சனத்தொகை 1800 ஆகும். இதில் தோட்டத் தொழிலாளர்களாக 200 பேர் வேலை செய்கின்றார்கள்.

அதிகமான தொழிலாளர்கள் கடந்த காலங்களில் இத் தோட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படாத காரணத்தினால் வெளியிடங்களுக்கு வேலைத் தேடி சென்றுவிட்டார்கள். இத் தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக பல வருட காலங்களாக, இவர்களுக்கு ஒரு மாதத்தில் ஆக குறைந்தது 25 நாட்கள் வேலை வழங்குவது நிறுத்தப்பட்ட ஒரு விடயமாகும்.

2007ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இத் தோட்டம் ஒழுங்காக பராமறிக்கப்படாத நிலையில் இருப்பதோடு, இங்குள்ள தொழிலாளர்களுக்கு 5 தொடக்கம் 12 நாட்கள் வரையே வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வானது திட்டமிட்டு தொழிலாளர்களை அத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம்.

பல நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இத் தோட்டத்தில் இருந்து இந்த நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த தொழிலாளர்கள் இன்று நடுரோட்டிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

2007ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இம் மக்களின் பிரச்சினையை தீர்க்க பல கடிதங்கள் தொழில் திணைக்களத்திற்கும், இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கும் (ளுடுளுPஊ) தொழில் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் எமது சங்கம் அனுப்பிவைத்துள்ளது. அத்தோடு 50கும் மேற்பட்ட தடவைகள் கொழும்பு மற்றும் கண்டி தொழில் திணைக்களத்தில் இப் பிரச்சினை தொடர்பாக பேரம் பேச்சில் எமது சங்கம்  ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி அரசுக்கு அழுத்தம் கோரி பல தொழிலாள போராட்டங்கள் நடைப்பெற்றுள்ளன.  இறுதியாக எமது தொடர் போராட்டம், 27.09.2016 அன்று கொழும்பு, நாராயண்பிட தொழில் திணைக்களத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட போது, எமது தொழிலாளர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வரும் வரை குறிப்பிட்ட இடத்தைவிட்டு அசையமாட்டோம் என இருந்த வேலையில், தொழில் ஆணையாளரின் பணிப்பின் பேரில் தொழில் திணைக்கள பிரதிநிதிகள் போராட்ட இடத்திற்கு வந்து செங்கொடி சங்கத்தை பேரம் பேசலுக்கு அழைத்து சென்றனர்.

அதன் போது இப் பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வினை பெற்றுதருவதாக தெரிவித்ததோடு, அதற்கான செயற்பாடாக 05.10.2016 அன்று தொழில்அமைச்சர், அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனம்(ளுடுளுPஊ), மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை  எல்கடுவ பிலான்டேசன் ஆகியோருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.

அதற்கமைய அன்றைய தினத்தில் போராட்டத்தை நிறுத்தி வைத்ததோடு திட்டமிட்டபடி ஒக்டோபர் 5ஆம் திகதி கலந்துரையாடலுக்கு சங்கத்தின் பிரதிநிதிகள் சென்ற வேலை தொழில் அமைச்சரோ, அரச வளங்கள்; மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரோ பங்குபற்றாததோடு, இக் கலந்துரையாடலில் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.

மேலும் அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு சார்பில் பங்குபற்றிய பிரதி செயலாளர் எவ்வித மாற்று திட்டங்களையும் கொண்டுவந்திருக்காததோடு, சங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் நிலையில் இருக்க வில்லை. இறுதியாக சங்கம் முன்வைத்த மாற்று திட்ட பிரதியை தொழில் ஆணையாளரும், அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி  அபிவிருத்தி அமைச்சு பிரதிநிதியும் பெற்றுக் கொண்டதோடு, வெகுவிரைவில் தாங்கள் தங்களுடைய மாற்று திட்டத்தை  முன்வைப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் இன்று வரை அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மூலம் கலந்துரையாடலுக்கு ஒரு தினத்தை வழங்கவோ, பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இல்லை.

இது இவ்வாறு இருக்க 11.02.2017 அன்று உடதும்பர பிரதேசசபை உறுப்பினர் கொபோனில்ல டிவிசனை சேர்ந்த ஐந்து ஏக்கர் தேயிலை நிலத்துடனான பங்களாவை அளவீடு செய்து கொண்டிருக்கும் போது தொழிலாளர்கள் அவரிடம் என்ன நடக்கின்றது என்பதை கேட்ட போது ‘அவர் இவ்விடத்தில் வேறு திட்டம் ஒன்றை செய்யப்போவதாக’ கூறியுள்ளார். இதை தொடர்ந்து தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது ‘அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனம் ஆகிய நிறுவனங்களின் அனுமதியுடன் நில அளவை மேற்கொள்வதாக கடிதம் ஒன்றை காட்டியுள்ளார்கள்.

கடந்த 10 வருடங்களாக, எயாபார்க் தோட்ட மக்களின் 25 நாட்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கு, பல்வேறு வகையில், சட்டத்திற்கு உட்பட்ட முறையிலும,; நியாயமான முறையிலும் நீதி கோரி நின்று இத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்.

இந்த அரசு, இத் தொழிலாளர்களும் இந் நாட்டு பிரஜைகளே! என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று சுக்குநூராகி விட்டது. இந்த பிரச்சினையை யாரும் தீர்க்காத பட்சத்தில் நேரடியாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு பல தடவைகள் கடிதம் மூலம் அனுமதி கேட்டும் ஜனாதிபதியை சந்திக்கும் அனுமதி இவர்களுக்கு கிடைக்கவில்லை.

கடந்த ஆறுமாதங்களுக்குள் தனியார் போக்குவரத்து பிரச்சினை, லொத்தர் விற்பனையாளர் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, வடகிழக்கு காணிப்பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிகோரிய ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளின் போது, குறிப்பாக அரச தோட்ட தொழிலாளர்களின் இப் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதானது தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையில் ஜனாதிபதியின் அக்கறையை வெளிக்காட்டுகின்றது.

இந்த சூழலில் வேறு மாற்று திட்டங்கள் இல்லாத எயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள். இன்று இவர்கள் வீதிக்கு இறங்கியிருப்பது வெறுமனே ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக மட்டும் அல்ல, தங்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்குமாகவே. எத்தனை நாட்கள் வீதியில் இவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க போகின்றார்கள் என்பது, இவ் அரசு இவர்களின் பிரச்சினைக்கு கொடுக்கும் தீர்வை பொருத்தே தீர்மானிக்கப்படும்.

இப் போராட்டத்தில் இவர்கள்; முன்வைக்கும் கோரிக்கைகளாவன:.
எயாபர்க் தோட்டத்தில்  சகல தொழிலாள குடும்பங்களுக்கும் ஆக குறைந்தது 2 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு பிரித்து வழங்க வேண்டும்.

அரசு இக் காணிகளில, தொழிலாளர்கள் தேயிலை செய்வதற்கான முன் உதவிகளை (உரம், மருந்து, கன்றுகள் மற்றும் விதைகள்) குறிப்பிட்ட காலம் வரை மானியமாக வழங்க வேண்டும்.

இக் காணிகளில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே சென்று அரசு அல்லது அரச கம்பனிகள் கொள்வனவு செய்ய வேண்டும்.

தேயிலை செழிப்பற்ற காலங்களில் மாற்று பயிர்களில் பயன் பெறுமாறு, திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டும். என தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More