பொது மக்களுக்கு தேவையான உணவு. வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்காக சகல அரசாங்கங்களும் முன்னுரிமையளித்து செயற்படுதல் அவசியமானது என்பதுடன் சில அரசாங்கங்கள் அதனை சரியாக இனங்கண்டுக்கொள்ளாமல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மாத்திரம் செயற்படுவதனால் எமது நாட்டில் குறைந்த வருமானமுடைய மக்கள் தமது வாழ்வாதாரம் தொடர்பாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று கொலன்னாவ சாலமுள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 396 வீடுகளை கொண்ட ‘லக்சந்த செவன’ வீடமைப்புத் தொகுதியின் இரண்டாம் கட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
புதிய பெருந்தெருக்கல் மற்றும் வானளாவ உயர்ந்த அலங்கார கட்டிடங்களில் அவதானிக்கும் செழிப்பு கொழும்பு நகரில் வாழும் மக்களின் வாழ்க்கையிலும் காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி பௌதீக வளங்களின் அபிவிருத்தியினால் கண்கள் குளிர்ச்சியடைந்தாலும் மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த முடியாவிடின் அந்த அபிவிருத்தி செயற்பாடுகளினால் பயனேதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் 2020ஆம் ஆண்டளவில் நாட்டில் வீடு, நகர அபிவிருத்தி, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்வதற்கு அரசினால் முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.