173
நிலைமாறு கால நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் உளப்பூர்வமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது.
அதன் காரணமாக ஐநா மனித உரிமைப் பேரவையில் அரசு சிக்கல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அங்கு எழுப்பப்படுகின்ற பல்வேறு வினாக்களுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாற நேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதாக 2015 ஆம் ஆண்டு அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் அந்த உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்று பலதரப்பட்டவர்களினாலும், பல மட்டங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியான சூழல் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள போதிலும், அரசு மீதான அந்த அழுத்தத்தை, தமிழ் தரப்பின் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திச் செயற்பட முனைந்திருப்பதாகத் தெரியவில்லை.
அரசியல் ரீதியாக எதிர்த்தரப்பில் உள்ள அரசாங்கத்தை அழுத்தங்களின் மூலமாக வழிக்குக் கொண்டு வந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு 2017 ஆம் ஆண்டின் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நல்லதொரு சந்தர்ப்பமாக வந்துள்ளது என்பது இராஜதந்திர நுட்பம் தெரிந்தவர்களின் கருத்தாக உள்ளது.
பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இது விடயத்தில் சமயோசிதமாக நடந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
ஐநா மனித உரிமைப்பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துவிட்டு கடந்த சுமார் ஒன்றரை வருடங்களாகக் காலத்தைக் கடத்திய உத்தியைத்தான் பயன்படுத்தியிருக்கி;ன்றதே என்று ஆதங்கப்படும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வந்திருக்கின்றது.
அரசாங்கத்தின் அத்தகைய போக்கிற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போயிருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் சில சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் கூட்டமைப்பின் தலைமையிடமிருந்து தொடர்ச்சியாகக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் தன்மையில் அமையவில்லை என்று அதிருப்தி குரல்கள் எழுந்தபோதெல்லாம், அவற்றை அடக்கி வாசிக்கச் செய்வதற்கே தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் தலைமை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அந்த முயற்சியானது, பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தைத் தூண்டவில்லை.
மாறாக அந்த அதிருப்தி கூட்டமைப்புத் தலைமையின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாகத்தான், கூட்டமைப்புத் தலைமையை நம்பி இனி பயனில்லை என்ற நிலைப்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டார்கள்.
அது மட்டுமல்லாமல், தாங்களாகவே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் இந்தத் தன்னுணர்வு எழுச்சிப் போராட்டத்தின் ஊடாகவே முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிலவுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்களும் தங்களுடைய காணிகளை மீளப் பெற முடிந்திருக்கின்றது.
இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து, விமானப்படைத் தளபதி, இராணுவத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடி, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
கூட்டமைப்புத் தலைமை ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுக்களையடுத்தே காணிகள் விடுவிக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், அதற்கான தூண்டுதலையும், அழுத்தத்தையும் பிலவுக்குடியிருப்பு மக்களின் விடாப்பிடியான ஒரு மாதகால – இரவு பகல் பாராத போராட்டமே அளித்திருந்தது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான தலைமை இருக்கவில்லை என்பதும், அரசியல் ரீதியான வழிகாட்டல்கள் இருக்கவில்லை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பிலவுக்குடியிருப்பு காணிகளை விமானப்படையினரிடமிருந்து மீட்பதற்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய மன உறுதியும், பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் விட்டுக்கொடுக்காத தன்மையும், கட்டுக்கோப்பான போராட்டச் செயற்பாடுமே வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
இதே வழியைப் பின்பற்றி கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த 135 குடும்பங்கள் தமது 480 ஏக்கர் குடியிருப்பு காணிகளை இராணுவத்தினரிடமிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
பிலவுக்குடியிருப்பு காணிகள் மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 11 மணிக்கு விடுவிக்கப்பட்ட அதேநேரம் தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கேப்பாப்பிலவு மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி சந்திரலீலா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு அரைகுறை நிலையில் தீர்வு வழங்கப்பட்டதனால் போராட்டம் கைவிடப்படவில்லை. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அங்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் போராட்டத்திற்கும் அரசியல் தலைமை இல்லை. அரசியல் ரீதியான வழிகாட்டல் இல்லை. தன்னுணர்வு எழுச்சியையே இந்தப் போராட்டத்திலும் காணமுடிகின்றது.
பிலவுக்குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டபோது, கேப்பாப்பிலவு காணிகள் தொடர்பில் பேசப்பட்டதா, அது பற்றிய கரிசனைகள் ஜனாதிபதியிடம் வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டம் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே காணிகளை மீட்பதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தையடுத்து அரசாங்கம் அவ்வப்போது வலிகாமம் வடகில் சில சில பிரதேசங்களை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவித்து வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனாலும், வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் 1990 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அந்தப் பிரச்சினை நீடித்திருக்கின்றது.
இதேபோன்று கிளிநொச்சி நகரில் பரவிப்பாய்ஞ்சான் பகுதியில் இராணுவம் கையகப்படுத்தியிருந்த பொதுமக்களுடைய காணிகளை விடுவிப்பதற்காக அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு இராணுவத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகித்ததன் காரணமாகவே அந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டன என்பதையும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது.
ஆயினும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகமாகச் செயற்பட்ட அலுவலகம் அமைந்திருந்த காணி, விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்;திற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த செயலகக் காணி, விடுதலைப்புலிகளின் வைப்பகத்திற்கான கட்டிடம் அமைந்துள்ள காணி ஆகியவற்றை விடுவிக்க முடியாது என்று இராணுவத்தினர் பிடிவாதமாகத் தெரிவித்து தொடர்ந்தும் அங்கு நிலைகொண்டிருக்கின்றார்கள்.
இந்த மூன்று காணிகளும் பொதுமக்கள் அடர்த்தியாகக் குடியிருக்கின்ற பிரதேசத்தில் இருக்கின்றன. இதனால், அங்கு நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தின் பிரசன்னம் அந்த மக்களுடைய சமூக வாழ்க்கைக்கும் இயல்பான வாழ்க்கைக்கும் இடையூறாகவே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அதேநேரம் யுத்த மோதல்களோ அல்லது அதற்கு ஒப்பான வகையில் இராணுவம் கட்டாயமாகப் பிரசன்னமாக இருக்க வேண்டிய சூழலோ, தேவையோ இல்லாத நிலையில் பொதுமக்கள் மத்தியில் இராணுவத்தினரை நிலை கொள்ளச் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
அரசாங்கத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகள் நிலைகொண்டு செயற்பட்டிருந்தார்கள் என்பதற்காக அவர்கள் வசமிருந்த காணிகளையும் கட்டிடங்களையும் இராணுவம் பயன்படுத்த வேண்டும் என்ற கூற்றில் அல்லது நிலைப்பாட்டில், சமூக நீதி சார்ந்த நிலையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற ஒரு பிரதேசத்தில், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டுமானால், அங்கிருந்து இராணுவம் வெளியேற வேண்டியது அவசியம். இதில் உள்ள நியாயத் தன்மையை உணர்ந்;து அரசாங்கம் உரிய முறையில் செயற்பட வேண்டும்.
பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி அங்கு இராணுவம் நிலை கொண்டிருப்பதனாலும், இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேறியிருக்கின்ற சூழலில்; இராணுவம் இடையிடையே நிலைகொண்டிருப்பதாலும், பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமைக்கு முடிவு காண்பதற்கோ அல்லது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை ஆக்கபூர்வமாகச் செற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை என்ற குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
காணிப் பிரச்சினையைப் போலவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான பிரச்சினைகளும், தீர்;க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூன்று விடயங்களும் இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழர் தரப்பின் எரியும் பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு நம்பத்தகுந்த வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.
போர்க்காலச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்றது. அந்த வகையில், இந்த விடயங்களிலாவது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத்தக்க வகையில் சில நகர்வுகளை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் நிலலப்பாடாகும்.
இத்தகைய பின்னணியில்தான், ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச மட்டத்தில் முன் வைக்கப்பட்டிருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலளிக்க முடியாமல் அரசாங்கத் தரப்பினர் தடுமாற நேர்ந்திருக்கின்றது.
அத்தகைய ஒரு நிலையிலும், ஐநா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருடம் கால அவகாசம் தேவை என இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றது.
இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது. இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவதைக் கைவிட்டு, இலங்கை விவகாரத்தை ஐநா மன்றத்தின் பொதுச் சபைக்கும். ஐநா மன்றத்தின் பாதுகாப்புச் சபைக்கும் பாரப்படுத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவான போக்கில் அரசாங்கம் கோருகின்ற கால அவகாசம் கண்காணிப்புடன் கூடியதாக வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் இந்தக் கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கின்றார்.
ஆனால், அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டடையே கூட்டமைப்பில் உள்ள ஏனைய பலர் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட ஆறு அமைப்புக்களும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த பன்னிரண்டு சிவில் அமைப்புக்களும் இந்த அறிக்கையில் இணைந்திருக்கின்றன.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ..சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ஜி.சிறிநேசன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, டாக்டர் சிவமோகன், எஸ்.வியாழேந்திரன், கே.கோடீஸ்வரன் ஆகிய பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, அரயநேந்திரன் பாக்கியசெல்வம், சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் 16 பேர் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் 5 பேரைத் தவிர ஏனையோர் அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குவதை எதிர்த்திருக்கின்றனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்க
பிரேரணையை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இணங்கி உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கின்றது.
கால நீடிப்பும் சலுகைகளும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு விடயத்திலும் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
வடகொரியாவின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் பின்பற்ற நடைமுறைக்கு அமைவாக, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல் விடயத்தை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அல்லது, அதற்கு ஒப்பான ஒரு தீர்ப்பாயத்திற்குப் பாரப்படுத்தும் வகையிலான பரிந்துரையை ஐநா மன்றத்தின் பொதுச் சபை ஊடாக ஐநா மன்றத்தின் பாதுகாப்புச் சபைக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு நடவடிக்கையின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் முடியும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின் றது.
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொள்கின்ற நடவடிக்கையில் பிளவுபட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிச் செயற்பட்டு வருகின்றபோதிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் போதிய ஈடுபாட்டுடன் செயற்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் தாங்களாகவே இறங்கியிருக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வவுனியாவில் நடத்தப்பட்ட நான்கு நாள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்க உயர்மட்டத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்கள் அழைக்கப்பட்டிருந்த போது, அந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டக்காரர்கள் பிடிவாதமாக மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, வவுனியாவில் மீண்டும் சுழற்சி முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதேபோன்று கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்து செயற்படுவதை விடுத்து, பிளவுபட்ட நிலையில் அரசியல் நடத்துவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை இழப்பதற்கும், அதன் காரணமாக மேலும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்குமே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதனை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் அரசியல் தலைவர்கள் குறிப்பாக இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கின்றனர்.
எனவே, பல கட்சிகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புக்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒரு குரலில் பேச வேண்டும். இது இன்றைய இலங்கையின் உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது.
Spread the love