பாராளுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். விமல் வீரவன்ச தனது 47ம் பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கேக் ஊட்டிவிட்டு விமல் வீரவன்ச பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ச தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த விமல் வீரவன்ச, கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். எனினும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் சட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளன. பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் விமல் வீரவன்சவிற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது நீதிமன்ற அனுமதியை துஸ்பிரயோகம் செய்ததாகவே கருதப்பட வேண்டுமென சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் முதல் தடவையாக சிறைச்சாலைக்கு வெளியில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்சவிற்கு எதிரான அடுத்த வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் குறித்து நீதிமன்றில் கேள்வி எழுப்பப்படக்கூடிய சாத்தியமுண்டு என தெரிவிக்கப்படுகிறது.