வட கொரியாவினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்கவும், மேலும்; அந்நாட்டுக்கு எதிராக மேலும் சில புதிய தடைகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்துள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராகவும், தொடர்ந்து ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் வட கொரியாவுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்போம் என அறிவித்துள்ளதன் மூலமாக பிராந்தியத்தில் பதற்றத்தையும் ஆயுதப் போட்டியையும் வட கொரியா அதிகரிக்க செய்துள்ளமை தொடர்பில் ஆலோசிப்பதற்காக பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா , ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.