Home இலங்கை சுன்னாகம் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமணனின் பெயர் V அறிக்கையில் இல்லை

சுன்னாகம் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமணனின் பெயர் V அறிக்கையில் இல்லை

by admin

புன்னாலை கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் பெயரை , கொள்ளை சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த V அறிக்கையில் குறிப்பிடவில்லை என சாட்சியம் அளிக்கப்பட்டு உள்ளது.

சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபப்ட்டு உள்ள 7 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் ஒரு சந்தேக நபருக்கு எதிராக மன்றினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   குறித்த வழக்கு விசாரணையின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது. குறித்த வழக்கில் மேலும் சாட்சியங்கள் அளிக்கபடுகையில்,

குறித்த வழக்கின் ஒன்பதாவது சாட்சியமான காவல்துறை பரிசோதகர் பிரதீப் நிஷாந்த குமார தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,

  1. 02. 11. முதல் 2013.01.08 வரையிலான கால பகுதியில் சுன்னாகம் காவல் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றினேன். குறித்த சம்பவம் இடம்பெற்ற கால பகுதியான 2011.11.25 ஆம் திகதி மற்றும் 26 ஆம் திகதி நான் விடுமுறையில் வீட்டில் இருந்தேன். அவ்வேளை 28 ஆம் திகதி காங்கேசன்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் உடனடியாக என்னை கடமைக்கு திரும்புமாறு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டு கூறினார்.

 அதனால் நான் விடுமுறை காலம் முடிவடைய முன்னரே கடமைக்கு திரும்பினேன். கைது செய்யபப்ட்ட சந்தேக நபர் தொடர்பான விசாரணைக்காக என கூறி தகவல் புத்தகங்கள், அவை தொடர்பான ஆவணங்கள் என்பவற்றை உதவி காலவ்துறை அத்தியட்சகரிடம் பாரம் கொடுத்தேன்.

நால்வர் கைது. 

அதில் சிறு குற்ற பிரிவு தகவல் புத்தகத்தில் 2011.11.25.ஆம் திகதி சுன்னாகம் காவல் நிலைய சார்ஜென்ட் குணரட்ன என்பவரின் தலைமையிலான காவல்துறையினர் இராசதுரை சுரேஷ் , அருமைநாயகம் விஜயன் , துரைராசா லோகேஸ்வரன் , இராசகுமார் சுரேஷ்குமார் ஆகிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்து உள்ளதாகவும் , அவர்களை அன்றைய தினம் இரவு 20.10 மணிக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

33 இலட்சம் கொள்ளை. 

அதேவேளை கடும் குற்ற பிரிவு புத்தகத்தில் 2011. 11.22 ஆம் திகதி காலை 6.15 மணியளவில் புன்னாலைக் கட்டுவான் தெற்கை சேர்ந்த பரிமேழலகன் உமாசாந்தி எனும் பெண் தனது வீட்டில் 33 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் அன்றைய தினம் (22 ஆம் திகதி ) காலை 7 மணியளவில் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார தலைமையில் , சார்ஜென்ட் குணரட்ன , கன்ஸ்டபிள்ஸ் மயூரன் மற்றும் வாகன சாரதி லலித் ஆகியோர் விசாரணைக்காக வெளியே சென்று இருந்தனர்.

அவர்கள் மாலை 16.00 மணிக்கே மீண்டும் காவல் நிலையம் திரும்பினர். மீண்டும் 25ஆம் திகதி காலை 06.15 மணியளவில் மேலதிக விசாரணைக்காக பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார  தலைமையில் , சார்ஜென்ட் ராஜபக்ஷே , கான்ஸ்டபிள் ஜெயந்த , வீரசிங்க  , மயூரன் , கோபிகிருஷ்ணா , மற்றும் சாரதி லலித் ஆகியவர்கள் சென்று இருந்தனர்.

கைது செய்து 1 மணி 20 நிமிடங்களுக்கு பின்னரே காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

விசாரணைக்கு சென்றவர்கள் காலை 10.30 மணிக்கு ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் 28 வயது இளைஞனை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனை மதியம் 11.50 மணியளவில் சுன்னாகம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.

பின்னர் மறுநாள் (26ஆம் திகதி) மேலதிக விசாரணைக்கு என காலை 6.50 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.

கைது செய்து 2 மணி 30 நிமிடங்களுக்கு பின்னர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள். 

காவல் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு உள்ளோர் தொடர்பான பதிவு புத்தகத்தில் 25 ஆம் திகதி இரவு 20.30 மணியளவில்  சுமணன் உடன் மேலும் நான்கு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கபப்ட்டு இருந்ததாகவும் அவர்களை அன்றைய தினம் மாலை 18.00 மணியளவில் கைது செய்யபப்ட்டதகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 புன்னாலை கட்டுவான் தெற்கில் 22 ஆம் திகதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யபட்டதாக இராசதுரை சுரேஷ் , அருமைநாயகம் விஜயன் , துரைராசா லோகேஸ்வரன் , இராசகுமார் சுரேஷ்குமார் ஆகிய நால்வர் மீதும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் உப காவல்துறை பரிசோதகர் ஜெயரட்ன என்பவர் V அறிக்கை தாக்கல் செய்தார்.

V அறிக்கையில் சுமணனின் பெயர் இல்லை. 

அதில் சுமணனின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. எதற்காக V அறிக்கையில் சுமணனின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை என்பது தொடர்பில் எங்கும் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அதன் போது எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , குறித்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தமது சாட்சியத்தில் தம்மை 21ஆம் திகதியே கைது செய்ததாக தமது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளனரே என வினவிய போது , நான் பதிவேட்டில் உள்ள பதிவுகளின் பிரகாரமே திகதிகளை குறிப்பிட்டேன் என தெரிவித்தார். அத்துடன் ஒன்பதாவது சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தபட்டன.

அதனை தொடர்ந்து 12 ஆவது சாட்சியமான சுதேசிகா தொடகொட்ட என்பவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில்,

சுன்னாகம் காவல்நிலையத்தில் மகளிர்  பிரிவு தொடர்பில் கடமையாற்றினேன். 25 ஆம் திகதி காலை நான் கடமையை பொறுபேற்கும் போது காவல் நிலையத்தில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை. அன்றைய தினம் மதியம் 11.50 மணியளவில் பொறுப்பதிகாரி சுமணனை  கைது செய்து கொண்டுவந்து தடுத்து வைத்தார். அன்றைய தினம் மாலை நான் கடமையை நிறைவு செய்யும் போதும் தடுத்து வைக்கபப்ட்டு இருந்தார்.

மறுநாள் 26 ஆம் திகதி இணுவில் ஆரம்ப பாடசாலையில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது அதற்காக நான் செல்லும் போது சுமணன் காவல்நிலைய சிறைகூண்டில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டேன்.என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பத்தாவது சாட்சியமான லலித் வீரசிங்க என்பவர் சாட்சியம் அளிக்கையில் ,

நான் சுன்னாகம் காவல் நிலையத்தில் நான்கு வருடங்கள் கடமையாற்றினேன். 2011. 11.25 அன்று காலை தொடக்கம் மாலை வரை காவல்நிலையத்தில் கடமையில் இருந்தேன். அவ்வேளை பொறுப்பதிகாரி மதியம் 11.50 மணியளவில் கைது செய்து கொண்டுவந்து என்னிடம் பாரப்படுத்தினார்.

நான் அந்த சந்தேக நபரை காவல்நிலைய சிறைக்கூடத்தில் தடுத்து வைத்தேன். மாலை நான் கடமையை முடித்து செல்லும் வேளை அந்த சந்தேக நபரை பிரான்சிஸ் வீரசிங்க என்பவரிடம் பாரம் கொடுத்தேன்.

மீண்டும் மறுநாள் 26 ஆம் திகதி நான் கடமையை பொறுபேற்கும் போது சுமணன் எனும் சந்தேக நபர் காவல்நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கபப்ட்டு இருந்தார். அவ்வேளை நான் அவரை பரிசோதித்த போது அவரது உடலில் காயங்களோ , சுகவீனமற்ற நிலையிலையோ அவர் காணப்படவில்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதனை அடுத்து அவரது சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 15 ஆவது சாட்சியமான பிரான்சிஸ் வீரசிங்க என்பவர் சாட்சியம் அளிக்கையில் , 

நான் 25.11.2011 ஆம் திகதி இரவு நேர கடமையில் இருந்தேன். அன்றைய தினம் மாலை 5.45 மணிக்கு கடமையை பொறுப்பேற்றேன்.

அவ்வேளை காவல் நிலைய சிறைக்கூடத்தில் சுமணன் எனும் நபர் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். அன்றைய தினம் இரவு 20.30 மணியளவில் மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலைய சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணி 15 நிமிடங்கள் சுமனனிடம் விசாரணை. 

அவர்களுக்கான இரவு உணவு வழங்கினேன். பின்னர் இரவு 23.15 மணியளவில் விசாரணைக்கு என நிலைய பொறுப்பதிகாரி சுமணன் எனும் நபரை அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் நள்ளிரவு 00.30 மணியளவில் காவல் நிலைய சிறை கூடத்தில் கொண்டு வந்து தடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மறுநாள் 26ம் திகதி காலை நான் எனது கடமைகளை நிறைவு செய்து லலித் வீரசிங்க என்பரிடம் பாரப்படுத்தினேன்.

பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலை கடமையை பொறுபேற்கும் போது சுமணன் எனும் இளைஞனை பொறுப்பதிகாரி தலைமையிலான குழு விசாரணைக்கு என கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து சென்றதாகவும் , அதன் போது குறித்த இளைஞன் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்து தப்பியோடி குளத்தில் வீழ்த்து இறந்தாக அறிந்து கொண்டேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டது.

எட்டு சாட்சியங்கள் வழக்கில் இருந்து விடுவிப்பு. 

அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் 11ம் , 13ம்  , 14ம்   , 16ம்  , 17ம்  , 18ம் , 19ம்  , மற்றும் 20 ஆம் சாட்சியங்களை விடுவிக்குமாறு மன்றில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து குறித்த சாட்சியங்களை மன்று விடுவிப்பதாக மேல் நீதிபதி கட்டளையிட்டார்.

அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை நாளை (புதன் கிழமை) காலை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

வழக்கின் பின்னணி. 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய    8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More