சிவசேனா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர இந்திய விமான ஊழியரை காலணியால் அடித்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பயணம் செய்ய இந்தியாவின் 4 உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தடை விதித்தன.
எயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இண்டிகோ, ஜெட் எயர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ எயார் ஆகிய நிறுவனங்கள் எயார் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளன.
தங்கள் ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தங்கள் அனைவரின் மீதான, நாட்டில் சட்டத்திற்கு இணங்கி வாழ்வாதாரத்திற்கு கடினமாக உழைக்கும் சாமானியர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் ஊழியர்கள் மன உறுதியை தக்கவைக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை என உணர்வதாகவும் தங்களின் சக ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் நலன்களையும் பாதுகாப்பையும் கருதி ‘நோ-ஃபிளை’ பட்டியலை வெளியிடுகிறோம் எனவும் அந்த எயார் இந்தியா மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மோசமான வாடிக்கையாளர்கள் தங்கள் விமானத்தில் பயணம் செய்வதை தாங்கள் வரவேற்கவில்லை எனவும் எனவே தடை செய்யப்படும் பயணிகள் பட்டியலை உருவாக்க அரசும், பாதுகாப்பு முகமைகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் அவர்களால் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, வியாழக்கிழமை எயார் இந்தியா ஊழியர் ஆர்.சுகுமார் என்பவரை சிவசேனா நாடாளுமனட்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கை தொடர்பான பிரச்சினை காரணைமாக ஊழியரை 25 முறை செருப்பால் அடித்தேன் என்று ரவீந்திர கெய்க்வாட் ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.