Home இலங்கை முக்கொலைகளையும் நானே செய்தேன்- மகனை பார்க்க முடியாத மனவுளைச்சல், தவறான புரிதலே அதற்கு காரணம்

முக்கொலைகளையும் நானே செய்தேன்- மகனை பார்க்க முடியாத மனவுளைச்சல், தவறான புரிதலே அதற்கு காரணம்

by admin

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை  மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இடம்பெற்ற சாட்சி பதிவின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது. குறித்த வழக்கில் எதிரியான பென்னம்பலம் தனஞ்செயன் சாட்சி கூண்டில் நின்று சாட்சியம் அளிக்கையில் ,

மகனை பார்க்க அனுமதிக்கவில்லை. 
சில குடும்ப பிணக்குகள் காரணமா, நானும் மனைவியும் பிரிந்திருந்தோம். எனது மகன் எனது மனைவியுடனேயே இருந்தார். பலமுறை மகனை பார்ப்பதற்கு முயற்சித்த போதும் எனக்கு அச் சந்தர்ப்பத்தை யாரும் ஏற்படுத்தி தரவில்லை.
இவ்வாறான நிலையில் எனது மகனை திருட்டு தனமாக பார்ப்பதற்காக கடந்த 2014.05.03ஆம் திகதி இரவு 10 மணிக்கும் 10.30மணிக்கும் இடைப்பட நேரத்தில் எனது நண்பனது முச்சக்கரவண்டியில் குறித்த சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே சென்று நான் வீட்டில் ஓட்டைகல் வழியாக பார்த்த போது அறையில் எனது குழந்தை நடுவிலும் அவருக்கு இரு பக்கமும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்ததை கண்டேன். அப்போது உண்மையில் அதில் எனது குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தது யார் என என்னால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
தவாறன புரிதல். 
ஆனால் இக் காட்சியை கண்டதும் எனக்கு முன்பு ஒருமுறை எனது மாமி அதாவது மனைவியின் தாய், உனக்கு தர்மிகா (எனது மனைவி) விவாகரத்து பத்திரம் தான் அனுப்புவா என்று கூறியது ஞாபகம் வரவே நான் எனது குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தது எனது மனைவியும், அவரோடு மாமியார் கூறியது போல வேறொருவரை திருமணம் செய்து வைத்துவிட்டார்களோ என்ற தவாறான சிந்தனையும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் அவர்களது கதவினை ஆக்ரோசத்துடன் தட்டினேன்.
அப்போது நான் தட்டிய கதவுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு கதவினுடாக வெளிய வந்த எனது மனைவியின் தம்பியான சுபாங்கன் என்னை நோக்கி வாள் ஒன்றினை வீசினார். நான் அதனை தடுத்து பிடித்துவிட்டேன். இச் சந்தர்ப்பத்தில் எனது கண்ணாடியும் கீழே வீழ்ந்துவிட்டது. அதனால் எனக்கு இருட்டில் சரியாக நிதானம் இல்லாது சுபாங்கனும் நானும் வாளினை பறிப்பது தொடர்பில் முரண்பட்டுக்கொண்டோம். இதன்போது அங்கு எனது மாமியாரும் வந்துவிட்டார்.
ஆக்ரோசத்தில் வாளினை விசுக்கி தாறுமாறாக வீசினேன்.
இதன்போதே நான் ஆக்ரோசத்தில் வாளினை விசுக்கி தாறுமாறாக வெட்டினேன். அந்த இடத்தில் அப்போது மாமியார் மீதும் வெட்டு வீழ்ந்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து நான் எனது குழந்தை படுத்திருந்த அறைக்குள் இருந்து ஆண் ஒருவர் வெளியே வந்தார். அவர் கையில் பார்கட்டை இருந்தது. அவர் பார்கட்டையை என்னை நோக்கி அடிப்பதற்காக ஒங்கினார். அதனால் நான் என்கையில் இருந்த வாளினால் வெட்டினேன்.
அப்போது அவர் பார்கட்டையை கீழே போடாதால் அவர் தலையில் வெட்டினேன். இதன்போது கத்திக்கொண்டு அந்த அறையில் இருந்து எனது மனைவியின் சகோதரி வெளியே வந்தார். மற்றைய அறையில் இருந்து மனைவியும் வெளியே வந்தார். நான் வெட்டிய வெட்டு எனது மனைவியின் சகோதரிக்கும் பட்டிருந்தது. அப்போது தான் எனக்கு தெரியும் நான் நினைத்தது தவறு தவாறாக விளங்கிக்கொண்டுவிட்டேன் என்பதை புரிந்துகொண்டேன்.
இதன்பின்னர் நான் வெளியே வந்து எனது வீழ்ந்து கிடந்த எனது மனைவியை தூக்கினேன். அப்போது அவரது முகத்தில் கையில் இரத்தம் வந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் தாறுமாறாக வெட்டும் போது எனது மனைவி ஒடி வரும் போது அவருக்கும் வெட்டு வீழ்ந்திருக்கின்றது என்பதை உணர்ந்தேன். உடனே நான் அவ்விடத்தில் இருந்து குறித்த வாளினையும் எடுத்துக்கொண்டு நான் வந்த முச்சக்கரவண்டியையும் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றேன்.
அவ்வாறு செல்லும் போது வழியில் எனது முச்சக்கரவண்டி எரிபொருள் இல்லாம்  நின்றுவிட்டது. எனவே முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே ஒரமாக விட்டுவிட்டு தோட்டப் பகுதி ஊடாக எனது வீடு நோக்கி நடந்து சென்றேன். செல்லும் போதே வாழைத் தோட்டத்துக்குள் வாளினை குத்திவைத்து விட்டு சென்றேன்.
 
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன். 
பின்னர் ஊரேழுவில் உள்ள எனது வீட்டிற்கு சென்று அங்கு உடைகளை மாற்றிவிட்டு சுன்னாகத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு அதிகாலை 4மணியளவில் சென்று நடந்ததை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைய போவதாக கூறினேன். ஆனால் எனக்கு சம்பவம் நடக்கும் போது அவர்கள் இறந்துவிட்டார்களா இல்லையா என்பது தெரியாது. பின்னர் எனது நண்பர் ஊடாகவே அறிந்தேன் மூவர் இறந்துவிட்டதாக. பின்னர் நான் சென்று எனது பிரதேசத்திற்கு பொறுப்பான கோப்பாய் பொலிஸ் நிலையததில் காலை சரணடைந்தேன்.
 கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த என்னை பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் பாரப்படுத்தியிருந்தனர். அத்தோடு நானே நான் வெட்டுவதற்கு பயன்படுத்திய வாளையும் பொலிஸாருக்கு எடுத்துக்கொடுத்தேன்.நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை. என தனது சாட்சியமளித்தார்.
இதனை தொடர்ந்து இவரது சாட்சியத்தை குறுக்குவிசாரனை செய்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் குறித்த சம்பவத்தில் மூவர் கொலை செய்யததையும், இருவரை கொலை செய்ய முயற்சித்தமையையும் ஏற்றுக்கொள்ளுகிறீரா ? என   வினாவியதற்கு,
குறித்த எதிரி குறித்த மூவரது மரணத்திற்கும் தாமே காரணம் எனவும் அதற்கு காரணம் தமக்கு இருந்த மன உழைச்சலும், அன்றைய தினம் தாம் கண்ட காட்சியை தவாறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட ஆக்ரோசமுமே காரணம் என பதிலளித்தார்.
கண்ணீர்மல்க  நன்றி.
இதனை தொடர்ந்து குறித்த சாட்சி குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதில் இருந்து  தனது குழந்தையை பார்க்க முடியாது இருந்ததாகவும் எனினும் தமது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, நீதிமன்றில் வைத்து தனது குழந்தையை பார்ப்பதற்கு நீதிபதி அனுமதியளித்திருந்தமைக்கும் திறந்த நீதிமன்றில் கைகூப்பி கண்ணீர்மல்க தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
அப்பா செத்துவிட்டார்.
இதேவேளை குறித்த ஜந்து வயதுடைய குழந்தையிடம் நீதிபதி குறித்த தந்தையான எதிரியை காட்டி இது யார் என வினவிய போது குறித்த குழந்தை பதிலளிக்காது நின்றது. அதன் போது, நீதிபதி உங்களது அப்பா எங்கே என கேட்ட போது அக் குழந்தை அப்பா செத்துவிட்டார் என பதிலளித்தது. அந்த பதிலை கேட்டதும்  நீதிமன்றில் ஒரு விதமான அமைதி நிலவியது.
குழந்தையின் தலை முதல் பாதம் வரை தடவி பார்த்தேன்.
குறித்த வழக்கில் 10ஆவது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த நிலைய பொறுப்பதிகாரி சமன் நிலந்த குமார ஜெயசிங்க சாட்சியமளிக்கையில்,
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 2014.05.04ஆம் திகதி அதிகாலை 2மணிக்கு எனக்கு தகவல் கிடைக்கப்பட்டிருந்தது. இதன்படி நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே காணப்பட்ட வீட்டில் பெண் ஒருவர் காயப்பட்டு இருந்தார். அவர் முழுமையாக இரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்தார். உடனடியாக நான் அப் பெண்ணை பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு சேர்ப்பித்தேன்.
அதன் பின்னர் அங்கே அவதானித்த போது வீட்டின் மற்றுமொரு அறையில் இருந்து ஒருவர் அனுங்குவது போன்றதான சத்தம் கேட்டது. நான் சத்தம் கேட்ட அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இரத்த வெள்ளத்தில் காயப்பட்டு கிடந்தார்கள். அவர்கள் இருந்த அறை முழுவதும் இரத்தம் தேங்கியிருந்தது. நான் அவர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பினேன்.
மற்றைய அறையில் நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தையில் சுமார் இரண்டு வயதான குழந்தையொன்று நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. நான் அக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டேன். அப்போதும் அக் குழந்தை நன்றாக துங்கிக்கொண்டே இருந்தது. நான் அக் குழந்தையின் தலை முதல் பாதம் வரை தடவி பார்த்தேன் அவருக்கும் எதாவது காயங்கள் உண்டா என ஆனால் எதுவிதமான காயமும் இருக்கவில்லை.
நான் அக் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தேன். வைத்தியசாலைக்கு சென்ற போது முன்னர் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தார்கள். உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் வரை குறித்த குழந்தையை யாரும் பொறுப்பெடுக்க வரவில்லை. உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னரே உறவினர்கள் என கூறி அக் குழந்தையை பாரமெடுத்திருந்தார்கள்.
இதனை தொடர்ந்து கொலையாளியை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் இக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரை கைது செய்வதற்காகவும் அவர் தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவும் ஒமந்தை சோதனை சாவடி, கடற்படை, கட்டுநாயக்கா விமான நிலையம்  எனைய பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தேன்.
 குறித்த சந்தேநபர் இக் கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பே குறித்த கொலை செய்யப்பட்டவர்களோடு முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததையும் இவருக்கும் கொலை தொடர்பு இருக்கின்றது என்பதையும் விசாரனைகளினூடாகவும் இரகசிய தகவல்கள் ஊடாகவும் கண்டறிந்திருந்தேன்.
அதன் அடிப்படையிலே குறித்த பொன்னம்பலம் தனன்ஜயன் என்பவரை 2014.05.04ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கோப்பாய் சந்தியில் உள்ள பஸ்தரிப்பு நிலையமொன்றில் வைத்து கைது செய்திருந்தேன்.
தொடர்ந்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கொலை செய்ய பயன்படுத்திய வாள், இவர் பயணம் செய்ய பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் இவர் அணிந்திருந்த உடைகள் போன்றவற்றை கைப்பற்றியிருந்தேன். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானது கட்டளைக்கு ஏற்ப அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தியிருந்தேன். என சாட்சியமளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவரது சாட்டியத்தை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரனை செய்யும் போது இந்த சம்பவம் தொடர்பில் நீங்கள் சிறிகரன் என்பவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தீர்களா என வினவியபோது அதற்கு குறித்த சாட்சி இல்லையென பதிலளித்தார்.
தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி உங்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த எதிரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தாம் எதிரி சார்பில் கூறுவதாக கூறியிருந்தார். இதற்கு குறித்த  பொலிஸ் அதிகாரியான சாட்சி தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து குறித்த சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
தர்மிகாவின் உடலில் 15வெட்டுக் காயங்கள்.
அதனை தொடர்ந்து இவ் வழக்கில் 15ஆவது சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த, இச் சம்பவத்தில் காயமடைந்திருந்த தனஞ்செயன் தர்மிகாவை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரியான கந்தையா ரட்ணசிங்கம் சாட்சியமளிக்கையில்,
காயமடைந்த பெண்ணான த. தர்மிகாவின் உடலில் 15வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. அதில் எட்டு காயங்கள் கொடூராமன காயங்களாக காணப்பட்டிருந்தன என சாட்சியமளித்திருந்தார். இதனை தொடர்ந்து இவரது சாட்சியமும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
வெட்டுக்காயங்களால் குருதி பெருக்கு ஏற்பட்டு, அதனால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் மரணம். 
இதன்பின்னர் இவ் வழக்கின் 07ஆவது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த சட்டவைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியமளிக்கையில்,
என்னிடம் பிரேத பரிசோதனைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட மூன்று சடலத்தில் முதலாவது சடலமான நி.அருள்நாயகி என்பவரது சடலத்தில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. இவர் உயிரிழந்தமைக்கு காரணம் அவரது உடலில் காணப்பட்ட அதிகளவான வெட்டுக் காயங்களில் இருந்து அதிகளவான குருதி பெருக்கு ஏற்பட்டதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.
இதேபோன்று நி. சுபாங்கன் என்பவரது உடலில் 6 வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தது. இவரும் உடலில் இருந்து காயங்களூடாக வெளியேறிய அதிகளவான குருதி பெருக்கத்தால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.
மூன்றாவதாக உயிரிழந்த நபரான யசோதரன் மதுஷாவின் உடலிலும் எட்டுக் வெட்டுக்காயங்கள் காணப்பட்டிருந்தது. இவரும் உடலில் இருந்து அதிளவான இரத்தம் வெளியேறியதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.
இதனை விட நான் படுகாயமடைந்திருந்த தங்கவேல் யசோதரனது உடலை பரிசோதனை செய்த போது அவரது உடலில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. அத்துடன் கொலை செய்யப்பட்ட மூவரது உடலில் இருந்த காயங்களும் காயமடைந்த நபரது உடலில் இருந்த காயங்களும் கூரான ஆயுதத்தால் வெட்டும் போதே ஏற்படுத்தப்பட்டிருக்கும். என சாட்சியமளித்திருந்தார்.
எதிரியின் உடலில் 6உடனடி காயம். 
அத்துடன் பொன்னம்பலம் தனஞ்செயனை 2014.05.05ஆம் திகதி   11.55க்கு பரிசோதனை செய்யும் போது அவரது உடலில் ஆறு உடனடி காயங்களும், 1பழைய காயமும் 1 காயத்திற்கான வடுவும் காணப்பட்டிருந்தது.
இதில் ஆறு புதுக்காயங்களில் நான்கு உரஞ்சல் காயமாகவும் இரண்டு வெடிப்புக் காயங்களாகவும் காணப்பட்டிருந்தது. மேலும் வெடிப்பு காயங்கள் மிக சிறிய கனம் குறைந்த ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டதாக எனது அனுபவத்தினூடாக அறிக்கின்றேன் என சாட்சியமளித்திருந்தார். இதனை தொடர்ந்து இவரது சாட்சியமும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தது.
வாளினை அடையாளம் காட்டினர். 
இதேவேளை குறித்த வழக்கின் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த 04ஆவது சாட்சியான த. தர்மிகா மற்றும் 05ஆவது சாட்சியன தங்கவேல் யசோதரன் ஆகியோர் தம் மீது வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாளினை அடையாளம் காட்டுவதற்காக மட்டும் புதன்கிழமை மன்றுக்கு அழைக்கப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து எடுத்துவரப்பட்டிருந்த குறித்த சான்றுப் பொருட்கள் திறந்த நீதிமன்றில் நீதிபதியால் பிரிக்கப்பட்டு குறித்த சாட்சிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இதன்போது குறித்த சாட்சிகள் அவ் வாளினை அடையாளம் காட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அடையாளம் காட்டிய வாளானது மன்றால் இலக்கமிடப்பட்டு சாட்சிப் பட்டியலில் சான்றாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது. இவற்றைவிட சட்டவைத்திய அதிகாரிகளது அறிக்கைகளும் சாட்சிப் பட்டியலில் மன்றால் இலக்கமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று (வியாழன்) தீர்ப்பு . 
குறித்த வழக்கின் தீர்ப்பானது வியாழகிழமை யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்படவுள்ளதாகவும் அதுவரை குறித்த வழக்கை ஒத்திவைக்கவும் எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கின் பின்னணி. 
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்ப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More