மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் தருணத்தில் செல்லிடப்பேசியில் உரையாடியமைக்காக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்க பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் வசந்த குமார அல்விஸிடம் நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட்ட போது அர்ஜூன் மகேந்திரன் செல்லிடப்பேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படும் பகுதியில் செல்லிடப் பேசி பயன்படுத்த வேண்டாம் என ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.ரீ. கித்சிறி இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணைகளை பார்வையிடுவதற்கு அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.