இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 18 ஆம் திகதிவரை குறைப்பு – நிதி அமைச்சர்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதோச நிறுவனங்களில்  நேற்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சி பொறுப்பினை கையளிக்கும் போது அரிசி கிலோ ஒன்றின் விலை 110 ரூபாயாக காணப்பட்ட நிலையில் தற்போது 75 ரூபாயாகவும் பருப்பு கிலோவொன்றின் விலை 230 தொடக்கம் 240 ரூபாய் வரையிலும் காணப்பட்டது. எனினும் தற்போது 157 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பால்மா பக்கற்றொன்றின் விலை கடந்த காலத்தில் 425 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 210 ரூபாய் முதல் 270 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. பெற்றோல் டிசல் லீற்றறொன்றின் விலையும் கடந்த காலத்தில் அதிகரித்தே கானப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் சமையல் எரிவாயு வொன்றின் விலை 2635 ரூபாயாக கடந்த ஆட்சிக்காலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1350 ரூபாவாகவும் மண்ணெண்ணை லீற்றரொன்றின் விலை கடந்த காலத்தில் 80 ரூபாயாக காணப்பட்ட நிலையில் தற்போது 45 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கடந்த ஆட்சிக்காலத்தை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாகவும் இந்நிலையிலேயே விலைகள் அதிகரித்து காணப்படுவதாக அரசாங்கத்தின் மீது வீண்புரளிகளை சிலர் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை காட்டிலும் மேலும் விலை குறைப்பு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உட்பட ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் சகலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைவாக தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் குறைப்பு செய்வதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply