தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து காணிகளையும் கைதிகளையும் எப்போது எப்படி விடுவிக்கப் போகிறீர்கள் என கேட்டமைக்கு அது பற்றி படைத் தளபதிகளுடன் மீண்டும் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை திங்கட்கிழமை காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைத் தளபதிகள், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னோடி யாகவே ஜனாதிபதியை சந்தித்ததாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தமை தொடர்பிலும் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிக்கு தெரியப்படுத்தினார் எனவும் அதனை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது