வடக்கு கிழக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக சுன்னாகம் பொலிசாரினால் இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் தொகுப்புரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் குறித்த வழக்கின் வழக்கு தொடுனர் சார்பு சட்டத்தரணியான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றுக்கு இன்றைய தினம் சமூகமளிக்க முடியவில்லை. நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையால் அவரால் இன்றைய தினம் மன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை. எனவே தொகுப்புரைக்காக குறித்த வழக்கினை பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு மன்றில் விண்ணப்பம் செய்யதார்.
அதற்கு எதிரி தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவிக்காததால் குறித்த வழக்கினை மேல் நீதிபதி எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.
அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த அப்போதைய நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.
அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.