இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் காரணமாக புலனாய்வுப் பிரிவினர் விசேட கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் மாதம் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் நரேந்திர மோடி இலங்கைக்கு வர உள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களும் இலங்கை பாதுகாப்புத் தரப்புக்களும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.
மோடியின் இலங்கைப் பயணத்தின் போது, கூட்டு எதிர்க்கட்சியினர் பாரியளவில் போராட்டமொன்றை நடாத்த உத்தேசித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க தலைமையிலான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய பிரதமரின் பயணத்தின் போது குழப்பங்கள் விளைவிப்பதனை தடுக்க பாதுகாப்புப் பொறுப்புக்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.