மதுபானக்கடைகளை ஊருக்குள் திறக்கக் கூடாது எனவும் தமிழக அரசு வியாபார நோக்கத்துடன் செயல்படக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை அதிகப்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு கேடுதான் ஏற்படும் என தமிழக அரசின் மறுஆய்வு மனுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவினையடுத்து, 3321 மதுக்கடைகள் ஒரே இரவில் தமிழக அரசு அகற்றியது.
எனினும் தேசிய நெடுஞ்சாலைகளில் அகற்றிய மதுபானக்கடைகளை ஊருக்குள் கொண்டு சென்றது. அதற்கு தமிழகம் முழுவதும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களையும் மேற்கொண்டதுடன் உயர்நீதிமன்றில் வழக்குகளையும் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவிட்டதுடன் அமைதியான வழியில் போராடுகிறவர்களை கைது செய்யக் கூடாது எனவும் அவர்கள் மீது தடியடி நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யகோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யபப்ட்ட மனுவை விசாரித்த போதே நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஜனநாயகம் எனத் தெரிவித்த நீதிபதிகள் பொதுமக்களின் எதிர்ப்புக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.