தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன.
புதிய ஊதிய ஒப்பந்தம் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க 1250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்த போதும் இந்த தொகை போதாது என அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.கடந்த 20 ஆண்டுகளாக ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் 1250 கோடி ருபா மட்டுமே அரசு வழங்குவதாக தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இன்று அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்றே ஆரம்பித்ததால் சென்னை, தஞ்சை, அரியலூர், திருவாரூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.