இலங்கை

வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைப் பாதுகாப்பது குறித்து இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு ஆலோசனை


உலகில் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைப் பாதுகாக்க விண்டோஸ் மென்பொருளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் குறுகிய காலத்தில் உலகின் நூற்றுக்கணக்கான  நாடுகளில் பரவிய இந்தக் கணணி வைரஸின் காரணமாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா,சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளின் கணனிப் பயன்பாடு பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானது. வேறு கணணி வைரஸ் போல் அல்லாது சைபர் தாக்குதலின் மூலம் கணனி பயன்படுத்துவோரிடமிருந்து கப்பம் கோரப்படுன்றது.

மேலும் இந்த வைரஸ்  இலங்கையில் கணனிகளில் உட்புகுந்துள்ளதாக இதுவரை தகவல் வெளியாக வில்லையென கணினி அவசர செயல்பாட்டு ஒன்றியத்தின் பொறியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸிலிருந்து தப்புவதற்கு  அறிமுகமற்ற மின்னஞ்சல் தகவல்களை பார்வையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியாக தமது கணனிகளின் வைரஸ்  மென்பொருளை புதுப்பித்துக் கொள்வது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கணனியில் உள்ள தகவல்களையும் தரவுகளையும் புறம்பாக வெளியில் வேறு சாதனங்களில் சேமித்து வைக்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறான கருவிகளை கணனி இணைப்பிலிருந்து தவிர்த்து வேறாக வைப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இந்த வைரஸ் உலகம் முழுவதும் விண்டோஸ் ரக  செயல்பாட்டு கட்டமைப்பு உள்ள கணனிகளை மாத்திரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸிலிருந்து கணனிகளை மீட்பதற்காக மாற்று வைரஸ் மென்பொருள் நிறுவனம்  நடவடிக்கைகளை எடுத்துவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply