இலங்கை

சீனாவில் ‘லங்கா குமரு’ காட்டூன் திரைப்படம் ரணில் உள்ளிட்ட அதிதிகளின் தலைமையில் அறிமுகம்

சீன – இலங்கை இராஜதந்திரத் தொடர்புகளுக்கு 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பீஜிங் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்த பீஜிங் ககு மீடியா (Beijing KAKU Media) நிறுவனத்தினால் உருவாக்கப்படும் ‘லங்கா குமரு’ காட்டூன் திரைப்படத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிதிகளின் தலைமையில் பீஜிங் நகர கெரி ஹோட்டலின் பூதொன் மண்டபத்தில் இடம்பெற்றது.

முற்காலத்தில் இலங்கையிலிருந்து சீன தேசத்திற்குச் சென்ற ஓர் அரச குமாரன் தொடர்பான உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு 30 பாகங்களைக் கொண்ட இத்திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது.

தற்போது திரைக்கதை மற்றும் ஏனைய ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், இன்னும் ஆறு மாத காலப்பகுதியினுள் தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்வது ககு மீடியா நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

பீஜிங் ககு மீடியா நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் சொங்யி அவர்கள், இலங்கை மற்றும் சீனாவுக்கிடையே மென்மேலும் தொலைக்காட்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்வது தமது எதிர்கால எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டார். ‘லங்கா குமரு’ உருவாக்கத்தின் பின்பு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு உள்ளிட்ட இருதரப்புப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply