திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த பிக்குகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தலைமையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மததலைவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். அங்கு அனைத்து தரப்பினரும் இணைந்து குழு ஒன்று அமைக்கப்பட்டு சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முடிவு எட்டப்பட சம்மந்தப்பட்ட தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அங்கு வசிக்கும் மக்களுக்கும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்த 1959ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தநிலையில் குறித்த காணிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு நேற்றைய தினம் அங்கு சென்ற பௌத்த பிக்குகளும் இளைஞர்கள் சிலரும் தெரிவித்ததோடு அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியும் உடைத்தெறியப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் வெளியேறாததைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் குடியிருப்புகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தோப்பூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலில் குறித்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.