எமது வடமாகாணசபை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடாத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சோக நாள் இன்று. 2009ம் ஆண்டில் இறுதி யுத்தத்தின் போது போராளிகள் சிலரையும் அப்பாவி மக்கள் பலரையும் பாகுபாடின்றி கொன்றொழித்த ஒரு துயர நாளின் நினைவு நாளே இன்று. இந் நாள் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்விலும் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத துயரம் தோய்ந்த துன்பியல் நாள். இந் நாள் தொடர்ந்து எம் மக்களிடையே ஒரு துக்க நாளாக அனுஷ;டிக்கப்படவேண்டும். எமது துயரத்தை வேதனையை பிரதிபலிக்கும் இந் நாள் அதே நேரம் எமது ஒற்றுமையையும் ஒருமித்த எதிர்பார்ப்புக்களையும் உலகறிய உதவும் நாளாகவும் பரிணமிக்க வேண்டும். எமது உறவுகளின் அநியாய இன அழிப்பே எமது இனத்தின் ஒற்றுமைக்கான வித்தாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை நான் அண்மைக்காலங்களில் வலியுறுத்திவருகின்றேன். எமக்குள் கட்சி பேதம் உண்டு; வர்க்க பேதம் உண்டு; சாதி பேதம் உண்டு; சமய பேதம் உண்டு; இன்னும் பல முரண்பாடுகள் உண்டு. ஆனாலும் நாம் யாவரும் தமிழ்மொழியைப் பேசுகின்றவர்கள் அல்லது அதைப் பேசியவர்கள் வழிவந்தவர்கள் என்ற பொதுவான அடையாளம் எமக்குண்டு. உள் நாட்டிலும் புலம் கடந்தும் நாம் பிரிபட்டு நிற்கின்றோம். ஆனாலும் எம்மை எல்லாம் ஒற்றுமைப்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு இந்த நினைவேந்தல் நிகழ்வே என்பது எனது கருத்து. ஏனென்றால் அநியாயமாக காரணமின்றி அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நாள் இது. அவர்கள் எல்லோரும் போராளிகள் என்று பிதற்றுவோரும் உண்டு. அவர்களுக்கு எமது அனுதாபங்கள். கைக்குழந்தைகளும் வலுவிழந்த வயோதிபர்களும் போராளிகளே என்று கூற இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ! சமய ரீதியான சம்பவங்கள் உண்டு. அவை மதம் சார்ந்தவை. சமூகரீதியான சில பண்டிகைகள் உண்டு. அவை யாவரையும் உள்ளடக்கமாட்டா. ஆனால் எமது மக்களின் உறவுகள் அநியாயமாக உயிர் நீத்த இந்ந நாள் எம்மெல்லோர் நினைவிலும் என்றென்றும் இருக்க வேண்டிய சோக நாள். எமது சிந்தையில் கரும்புள்ளியொன்றை இட்டுச்சென்ற இந்த நாள், எம் எல்லோர் மனதையும் உலுக்கிய இந் நாள், சோகம் தந்த இந் நாள் எம்மெல்லோரையுஞ் சேர்க்கும் நாளாக அமைய வேண்டும். எமது வேதனைகளின் அடிப்படையில் எமது பரந்து வாழும் தமிழ்ச்சமூகம் தமிழ் மொழி பேசும் சமூகங்கள் ஒன்றுபடவேண்டும்.
2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் புதிய உற்சாகமும் உத்வேகமும் எமது மக்கள் மனதில் ஏற்பட்டது. காரணம் அவரின் தேர்வுக்கு நாமும் ஒரு முக்கிய காரணமாகவிருந்தோம். எனவே அவ்வருடத்தைத் தொடர்ந்து வந்த மே மாதம் 18ந் திகதி முன்னையவருட அந்நாள் போலல்லாது அவ் வருடம் எம்மவர் எல்லோரையுஞ் சேர்த்து முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலில் ஈடுபடவைக்க வேண்டும் என்ற கருத்து எம்முள் மேலோங்கியது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல் நாள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திரு.லலித் ஜயசிங்கவை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டேன். ‘நாளை நான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா?’ எனக் கேட்டேன். ‘உண்டு’ என்றார். ஏனென்றால் ‘முல்லைத்தீவு நீதிமன்றம் கூட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது’ என்றார். ‘கூட்டங்களுக்கு அல்லவே’ என்றேன். தன்னிடம் நீதிமன்றக் கட்டளை இருப்பதாக கூறினார். என்னிடமும் இருப்பதாகக் கூறினேன். ஆராய்ச்சி செய்த போது ‘பெலபாளி’ என்ற பேரணிக்கான சிங்களச் சொல்லுக்குப் பதில் ‘ரஸ்வீம்’ என்ற கூட்டங்களைக்குறிக்கும் சொல் பிழையாக மொழிபெயர்ப்பில் இடம்பெற்றமை தெரியவந்தது. திரு.ஜயசிங்க அவர்கள் இதைத் தெரிந்து கொண்டபோது எமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.
அவ்வாறு தான் வடமாகாணத்தின் முதல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 1500 பொலிசார் முல்லைத்தீவில் எம்முடன் முரண்பட ஆயத்தமாக்கப்பட்டு கொண்டுவந்து குவிக்கப்பட்டும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் கட்டளை எம்மை அவர்கள் வழிவிட அடிசமைத்தது. ஒரு சொல்லின் சரியான மொழி பெயர்ப்பில் இருந்தே அந்த முதல் நினைவேந்தல் நிகழ்ச்சி பிரச்சனை இன்றி நடைபெற்றது. சென்ற வருடம்; முள்ளிவாய்க்கால் சூழலில் மட்டும் பொலிசார் நின்றார்கள். வழிநெடுக பொலிசாரைக் கொண்டுவந்து குவிக்கவில்லை. ஆகவே உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன்.
எனவே இந்த நிகழ்வு வருடந்தோறும் எமது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக மாறவேண்டும். அஹிம்சை முறையில் எமது எண்ணப்பாடைத் தெரிவிக்கும் ஒரு நாளாக மாறவேண்டும். அந்த வகையில் எமது வருத்தந்தெரிவிக்கும் ஏகோபித்த எண்ணக் கிடக்கைகளை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவும் இந் நாளை அடையாளம் காண்பதில் ஒரு பிழையும் இல்லை என்று கருதுகின்றேன்.
இன்று எம் மக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். காணிகளைத் திருப்பித்தாருங்கள் என்கின்றார்கள். காணாதவர்களின் கதி என்னவென்று உரக்கக் கேட்கின்றார்கள். சிறையில் வாடும் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோருகின்றார்கள். வேலையற்றவர்கள் வேலைகோரி நிற்கின்றார்கள். மீனவர்கள் கடற்படையினரின் காரியங்கள் பற்றி காரசாரமாய்க் கதைக்கின்றார்கள். இவற்றிற்கு அடிப்படைக்காரணம் என்ன என்று பார்த்தால் போர் முடிந்து எட்டு வருடங்களுக்குப்பின்னரும் எந்தவித அரசியல் ரீதியான வன்முறைகள் தலைதூக்காத நிலையிலும் 150000க்கு மேலான படையினர் வடமாகாணத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இந்த இடத்திற்கு பிரார்த்தனைக்காக வந்த கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தின் நகர பிதா துழாn வுழசலஇ தான் செல்லும் வழியில் இருக்கும் ஒவ்வொரு இராணுவ முகாம்களையும் அடையாளப்படுத்திச் சென்றார். போருக்;குப் பின் ஏன் இத்தனை படை முகாம்கள் என்று இங்குங் கேட்டார் கனடாவிலும் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் இப்பொழுது கனிந்துள்ளது. போரின் போது அல்லது போர் முடிவின் போது இழைக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு மாறான போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் படையினர். போர் முடிந்து நாட்டின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தப் போகின்றோம் என்று கூறும் அரசாங்கம் தொடர்ந்து படைவீரர்களை இங்கு நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?
அண்மையில் நாம் பழைய வடமாகாண இராணுவத் தளபதியிடம்; இந்த எட்டு வருடங்களில் அரசியல் ரீதியான முறையில் எமது மக்கள் ஏதாவது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு அறிய வந்துள்ளதா என்று கேட்டோம். ‘இல்லை! ஆனால் பிரான்சிலும் நோர்வேயிலும் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக புலிகள் இன்னமும் சுறுசுறுப்பாக உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது’ என்றார். ‘அந்தத் தொலைபேசி பரிமாற்றங்கள் தான் உங்களை இங்கு தொடர்ந்து வைத்துள்ளதா?’ என்று கேட்டோம். ‘ஏதேனும் வருமெனில் அவற்றைத் தடுக்க நாம் இங்கிருக்க வேண்டும்’ என்றார். இத்தனை ஆயிரம் போர் வீரர்கள் அதற்காகவா இங்கிருக்கின்றார்கள் எனக் கேட்டதற்கு ‘ஆம்’ என்றார்.
இன்று போர் முறைகள் மாற்றமடைந்துள்ளன. ஒரு அறைக்குள் இருந்து கொண்டே வடமாகாணம் பூராகவும் என்ன நடக்கின்றதென்பதை நவீனத் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். அதற்காக எமது காணிகளைச் சுவீகரித்து, வீடுகளைக் கையகப்படுத்தி, தொழில்களைத் தம்வசப்படுத்தி, எமது நீர் நிலைகளைக் கைப்பற்றி, வெளி மாகாண மீனவர்களை வருந்தியழைத்து எம்மக்களின் வாழ்வாதாரங்களை முடக்கச் செய்து, எம் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்களை கேள்விக்குறியாக்கி, வருந்தியழைத்து வெளி மாகாண மக்களை எம்மாகாணங்களில் குடியிருத்தி, பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்த உருவச்சிலைகளை உருவமைக்க உதவிசெய்துவர வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இராணுவமே வெளியேறு! கடற்படையே வெளியேறு! வான்படையினரே வெளியேறுங்கள்! என்று எம்மக்கள் சேர்ந்து குரலெழுப்பும் நன்நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எண்ணுகின்றேன். காரணமின்றி காழ்ப்புணர்ச்சியுடன் இங்கு அவர்கள் காலங்கடத்துவதைக் காரசாரமாக விவாதிக்கப்போகும் நாள் தொலைவில் இல்லை என்று நான் நம்புகின்றேன்.
உண்மையில் இராணுவத்திற்கும் கடற்படைக்கும் வான்படைக்கும் இங்கு வேலையில்லை. பாதுகாப்பைப் பொலிஸ் படையினர் செய்யலாம். வான் படையினர் வானூர்தி சேவைகளைத் தாம் நடாத்துவதற்குப் பதிலாக தனியார்களுக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர்கள் தமது தலைமையக முகாம்களுக்குச்
சென்று விடலாம். இராணுவத்தினர் காணிகளை விட்டுச்சென்றால், வீடுகளை விட்டுச் சென்றால், வர்த்தகங்களை எம்மவருக்கு வழிவிட்டுச் சென்றால், கடற்கரைகளை கடிந்து அவர்கள் விட்டுச்சென்றால் வேலையில்லா எம் இளைஞர்களுக்குக் கூட வேலைவாய்ப்புக்கள் கிடைப்பன. தமது சொந்தக் காணிகளில் பயிரிட முடியாதவர்கள் கூட எம்மைத் தேடி வேலை வாய்ப்புக்காக வருகின்றார்கள். ஆகவே இந்தத் தினத்தை நாம் கட்சி, மத, வர்க்க, பிராந்திய பேதங்கள் இன்றி ஒருமித்து நினைவேந்துவோம்!
எங்கள் ஒருமித்த குரல் ஒலிக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பதை மறவாதிருப்போமாக! வடமாகாணசபையாகிய எமக்கு அதிகாரங்கள் போதிய அளவு இருக்கின்றதோ இல்லையோ வடமாகாண மக்களின் வாக்குகளின் பிரதிபலிப்பே நாங்கள். ஜனநாயக ரீதியாக எமது மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பே வடமாகாணசபை. அதன் தலைமகன் என்ற முறையிலேயே நான் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டுள்ளேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் ஏகோபித்த குரலாக, கரமாக, அதிகாரமாக நான் செயற்பட்டே இந்தச் சுடரை ஏற்றியுள்ளேன். இதே போன்று இந்த நிகழ்வு தொடர்ந்தும் எம் மக்களின் துயரத்தையும் சோகத்தையும் அதே நேரம் எமது ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கும் நாளாக வருடாவருடம் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்றைய தினத்தில் 2009ம் ஆண்டு அநியாயமாக மரணத்தைத் தழுவ வேண்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட எமது உறவுகள் அத்தனை பேரினதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக! அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எமது உளமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களின் மனச்சுமைகளை நாம் சுமக்க முடியாதவிடத்தும் எமது பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை ஒரு அளவிற்கு நெகிழவைக்கும் என்று எதிர்பார்த்து சோகத்துடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம