வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி குறித்த பகுதிகளில் வீட்டுக் கடன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது எனவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளை நடத்தி அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் பெரும் சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் அவர்களின் படுகடன் தொகை வெகுவாக உயர்வடைந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக அண்மைய மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.