196
ஜனாதிபதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் இராணுவத்தினர் பல ஆயிர கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து நிலை கொண்டுள்ளனர். அதனால் மக்கள் தமது சொந்த காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. தற்போது காணி வேண்டி போராடுபவர்கள் மேலதிக காணி வேண்டியே போராடுகின்றார்கள். என திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசியுள்ளார்.
அதனால் நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் பகுதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ற ஜனாதிபதி உங்களை ஆறு மாத கால பகுதிக்குள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவேன் என வாக்குறுதிகளை தந்து சென்றார்.
ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் மீள் குடியேற்றம் பூரண படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதியின் அந்த கருத்தினை கேட்டு நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். ஜனாதிபதி இதே மனநிலையுடன் யாழ்ப்பாணம் வருவாராயின் மக்களை ஒன்று திரட்டி ஜனாதிபதிக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்
Spread the love