விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் நிலக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்பவர் 2009 பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வேலை செய்துள்ள நிலையில் அவர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் குறித்த நபர் 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார் எனவும் அவர் மீண்டும் வரவில்லை எனவும் இராணுவத்தரப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் நீதிமன்றின் அனுமதியுடன் மன்றின் நீதிபதி எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் அகழ்வானது இன்றுடன் நான்காவது தடவையாக நடைபெற்றுள்ள போதும் தடையங்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது