மான்செஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்திய சல்மான் அபெடி, குண்டுக்கான பாகனங்களை அவரே எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குண்டை உருவாக்குவதற்கான பெரும்பான்மையான பொருட்கள் அபெடியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அபெடி, தனித்து இயங்கியுள்ளதாக வடமேற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ருஸ் ஜெக்ஸன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஓர் வலையமைப்பாக இணைந்து இந்த தாக்குதல் பலரின் உதவியுடன் நடத்தப்பட்டிருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அபெடியின் நடமாட்டங்கள் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைபேசி அழைப்பு விபரங்களையும் காவல்துறையினர் திரட்டியுள்ளனர். குண்டுத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை அபெடி தாமாகவே கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.