159
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, தமிழ் மக்களுடைய அரசியல் இரு முனைகளில் மிக மோசமாகக் கூர்மை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றது. மரபு வழியாகப் பேணப்பட்டு வந்த அரசியல் தலைமைக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சோதனையாகக் கூட இந்த நெருக்கடியை நோக்கலாம்.
தமிழ் மக்களின்அரசியல் தலைமையை முழு அளவில் ஏற்றுச் செயற்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் வந்திறங்கியது. விடுதலைப்புலிகளின் காலத்தில் நாடாளுமன்ற அரசியல் தலைமையாக – ஓர் அரசியல் அலங்கார நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் செயற்பட்டு வந்தது. தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் தீர்மானம் எடுக்கின்ற வல்லமை பெற்ற ஓர் அரசியல் சக்தியாக அந்த நேரம் அது பரிணமித்திருக்கவில்லை.
இராணுவ வழியில் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த காரணத்தினால், இராணுவ ரீதியாக சக்தி மிக்கவர்களாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளே அப்போது தமிழ் மக்களுடைய அரசியல் செல்நெறிப் போக்கைத் தீர்மானிப்பவர்களாகத் திகழ்ந்தார்கள். அரசியல் தீர்வு விடயத்தில் அரசுக்கு அவர்களே இராணுவ ரீதியாக அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். அரசியல் ரீதியாக, நாடாளுமன்றத்தின் ஊடாக அத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற ஒரு சூழல் அந்த நேரத்தில் காணப்படவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
கிட்டத்தட்ட ஒரு நிழல் அரசியல் சக்தியாகத் திகழ்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பே, விடுதலைப்புலிகளின் பின்னர், தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் – அரசியல் விவகாரங்களில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற ஒரு சக்தியாகப் பரிணமித்திருந்தது. விடுதலைப்புலிகள் காலத்தில் நாடாளுமன்ற அரசியலில் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஆதரித்திருந்தனரோ, அதே போக்கு விடுதலைப்புலிகளின் பின்னரும் தொடர்ந்தது. அந்த வகையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கடந்த எட்டு வருடங்களாகப் பேணி வந்துள்ளது.
இருப்பினும் இந்த காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் இறுக்கமான அரசியல் சக்தியாகக் கட்டமைத்து வளர்ப்பதற்கு அதன் தலைமை தவறியிருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அதிகாரபூர்வமான ஓர் அரசியல் கட்சியாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வழிமுறைகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவில்லை. மாறாக, கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் செல்வாக்கு பெற்றிருக்கின்ற தமிழரசுக்கட்சி, கட்சி அரசியல் நலன்களைப் பேணுவதிலும், அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் முன்னோக்கி வளர்த்துச் செல்வதிலுமே கவனம் செலுத்தி வந்தது. அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுத்துவதில் அது தீவிர கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வழிமுறைகளில் தன்னிகரற்ற ஒரு தன்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அது தொடர்ந்து முதன்மைப்படுத்தி வந்துள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகத் திகழ்கின்றதேயொழிய, அதன் அரசியல் குறியீட்டுக்குரிய தேர்தல் சின்னமாக, தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென தனியான கொடிகூட கிடையாது. அதுவும் தமிழரசுக் கட்சியின் கொடி அடையாளத்தையே கொண்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு நிலையில்தான் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆளும் கட்சியாக அமோக வெற்றியீட்டியிருந்தது. அதன் முதலமைச்சராக பணி ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலுக்குள் அழைத்து புகுத்தியிருந்தார்.
வடமாகாண சபைக்கான தேர்தலில் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டபோது, வடமாகாண சபையின் முதலமைச்சராகவே அவர் உருவகப்படுத்தியிருந்தார். அந்த அடிப்படையிலேயே அவருக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். அவ்வாறு முதலமைச்சராக்கப்பட்ட விக்னேஸ்வரனையே இப்போது தமிழரசுக் கட்சி தனக்கு நம்பிக்கையில்லாதவர் என சுட்டிக்காட்டி வடமாகாண ஆளுனரிடம் எழுத்து மூலமாகத் தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் அரங்கு புதிய அரசியல் அனுபவம்
வடமாகாண சபை என்பது தமிழ் மக்களுக்குப் புதியதோர் அரசியல் அரங்காகும். வடமாகாணத்திற்கென ஒரு மாகாண சபை முன்னர் இருந்ததில்லை. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு, சிங்கள அரசியல் பேரினவாத சக்திகள், இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் அரசியல் தந்திரோபாய ரீதியில் இரண்டாகப் பிரித்து, முடிவுக்கு வந்ததன் பின்னர், முதலில் கிழக்கு மாகாண சபையையும், தொடர்ந்து வடமாகாண சபையையும் தனித்தனியே தேர்தல்களின் மூலம் செயற்படுத்தியிருந்தது.
இந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்கள் செல்வாக்கு செலுத்தத்தக்க ஓர் அரசியல் சக்தியாகப் பரிணமிக்க முடியாமல் போனது. அங்கு இனப்பரம்பலில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த தீவிரமான மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகியது. ஆனால் வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக, வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டபோது, அத்தகைய நிலைமை காணப்படவில்லை. அதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அங்கு அமோகமான வெற்றியை ஈட்டக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் தொடருமாக என்பது சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருகின்றது.
தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடமாகாணத்தின் இனப்பரம்பலை மிக நுட்பமான அரசியல் நோக்குடன் நன்கு திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசியல் சக்திகள் மாற்றி வருகின்றன. இதன் காரணமாக வரப்போகின்ற தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போ அல்லது அது சார்ந்த அரசியல் கட்சிகளோ கடந்த காலங்களைப் போல தேர்தல்களில் அமோக வெற்றியை ஈட்ட முடியாத ஒரு நிலைமை உருவாகி வருகின்றது.
இது ஒரு புறமிருக்க, வடமாகாண சபை என்ற புதிய அரசியல் அரங்கில், அரசியல் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவர்களே, பிரதிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். அதேபோன்று அரசியலுக்குப் புதியவராகிய முன்னாள் நீதியரசராகிய என்பது சி.வி.விக்னேஸ்வரனும் முதலமைச்சர் பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டிருந்தார்.
தனிநாடு கோரி, சாத்வீக வழிகளிலும், பின்னர் ஆயுத ரீதியாகவும் போராடி வந்த தமிழ் மக்களுக்கான முதலாவது தமிழ் அரசாங்கமாக வடமாகாண சபை என்ற மாகாண அரசே வந்து வாய்த்திருந்தது. இது ஒரு பொன்னான சந்தர்ப்பம். தனிநாட்டுக்காக ஏங்கிய மக்களுக்கு கிடைத்த ஓர் அரசியல் வரப்பிரசாதம். அதனைக் கண்ணென போற்றி முடிந்த அளவில் சிறப்பாகச் செய்படுத்தியிருக்க வேண்டும். அந்த அரசியல் பொறுப்பு வடமாகாண சபையின் ஆளும் தரப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே சார்ந்திருந்தது.
வடமாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்றிருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்;கள் அனைவருக்கும் இந்த பொறுப்பு உரியதாகும். இது ஆட்சிச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள சபை உறுப்பினர்களுக்கு மட்டும் உரியதென்று வரையறுத்துவிட முடியாது. இந்த கூட்டுப் பொறுப்ப்pல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மிகவும் காத்திரமான பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் – சிறப்பானதோ அல்லது மோசமானதோ – எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கே சார்ந்ததாகும்.
பாரிய பொறுப்பு
வடமாகாண சபையின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருந்த அதேவேளை, அதன் நிர்வாகத்தை சிறப்பாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குரிய வழிகாட்டல்களை கூட்டமைப்பு முதலமைச்சருக்கும், சபை உறுப்பினர்களுக்கும் உரிய வழிமுறைகளின் ஊடாக வழங்கியிருக்க வேண்டும்.
வடமாகாண சபை என்பது மாகாண நிர்வாகத்திற்கும், மாகாண மட்டத்திலான அரசியலுக்கும் பொறுப்பானதாக இருக்கலாம். ஆயினும், ஆயுதப் போராட்டத்தின் தலைமைத் தளமாக வடமாகாணமே திகழ்ந்தது. முப்பது வருட காலமாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி யுத்தமும் வடமாகாணத்திலேயே நடந்து முடிந்தது. இதனால் பாரிய அழிவுகளும், ஈடு செய்யவே முடியாத மனித பேரவலங்களும் அங்கேயே நிகழ்ந்தன. அத்துடன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் ரீதியான பேரிழப்புக்கள் என்பனவும் அங்கேயே ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, இத்தகைய இழப்புக்களை ஈடு செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களை சமூக, பொருளாதார, அரசியல் உட்பட வல்வேறு வழிகளில் வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் வடமாகாண அரசையே சார்ந்திரு;ககின்றது. அரசியல் நிர்வாகச் செயற்பாடுகளில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. அத்தகைய குறைபாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பானதொரு நிர்வாகத்தைக் கொண்டு நடத்தியிருக்க வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட மக்களின் ஏகோபித்த எதி;ர்பார்ப்பாக இருந்தது. இன்னும் இருக்கின்றது.
புதிய பொறுப்புக்களில் புத்தூக்கத்துடனும், அரசியல் சார்ந்த ஆர்வத்துடனும் வடமாகாண சபையின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்பட்டிருக்கலாம். அத்றகான நடைமுறைகள் குறித்து சரியான முறையில் அறியாத நிலையில் அல்லது தமக்குத் தெரிந்த வழிமுறைகளின் மூலம் அவர்கள் தமது பொறுப்புக்களை முன்னெடுத்திருக்கலாம். ஆயினும் அவர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியிருக்க வேண்டியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், அதன் தலைமையினதும் பொறுப்பாக இருந்தும்கூட, அதனை அவர்கள் சரியான முறையில் செய்யத் தவறியிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.
மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகளில் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் ஏற்பட்டிருந்ததாக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே முறையிட்டிருந்தார்கள். இதுவும்கூட, மாகாண சபையின் சேவைகள் முழுமையாகவும் நல்ல முறையிலும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தின் மேலீட்டால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த முறைப்பாடுகள் அரசியல் சார்ந்ததாக, அரசியல் நன்மைகளை சார்ந்ததாக பரிணாமம் பெற்றிருப்பதே வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குக் காரணமாகும். அமைச்சர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்வதும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதுவும் தவிர்க்கப்பட முடியாத செயற்பாடுகளாகும். அது அந்த சபையின் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் இதயசுத்தி சார்ந்த சேவை என்பவற்றுடன் நேரடியாக தொடர்புடைய விடயமாகும்.
பரபரப்பான சூழல்
ஆரம்பத்தில் இருந்தே வடமாகாண சபையின் செயற்பாடுகளில் ஒதுங்கியிருக்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் விடயத்திலும் ஒதுங்கியிருக்கின்ற நடைமுறையையே பின்பற்றியிருந்தது.
ஆனால் அமைச்சர்கள் நான்கு பேருக்கும் எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையானது ஊடகங்களில் கசிந்து, அந்த முறைப்பாடுகளைக் கையாள்கின்ற நடைமுறைகளில் சிக்கல்களை உருவாகியதையடுத்து தமிழரசுக்கட்சி முதலமைச்சருக்கு எதிராக எடுத்திருந்த நிலைப்பாடே சிக்கல்களை மேலும் சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றியிருக்கின்றது.
அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 23 லட்சம் ரூபா செலவில் நடத்தப்பட்ட விசாரணைகள் பற்றிய விசாரணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முதலமைச்சர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். ஆயினும் விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளும், அது தொடர்பில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளும் விவாதப் பொருளாகின. மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு சமூக வலைத்தலங்களில் அவைகள் மிகவம் முக்கிய பேசுபொருளாக மாற்றம் பெற்றன.
இத்தகைய ஒரு நிலையில்தான், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத அமைச்சர்களான டாக்டர் ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அந்த விசாரணைகள் முடியும் வரையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி, விடுமுறையில் செல்ல வேண்டும் என முதலமைச்சர் அறிவித்ததையடுத்து, அவருக்கு எதிராக தமிழரசுக் கட்சி போர்க்கொடி உயர்த்தியது.
அந்த அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் அவ்வாறு செயற்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருந்தார். ஆயினும். அதனையும் பொருட்படுத்தாத வகையிலேயே முதலமைச்சர் தனது முடிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, கட்சி நலன்கள் சார்ந்து தமிழரசுக்கட்சி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத பிரேரணை அடங்கிய கடிதத்தை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கூட்டிச் சென்று ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கயைளித்ததையடுத்து, தேனீக்களின் கூட்டைக் கலைத்தது போன்று பரபரப்பானதோர் அரசியல் நிலைமை உருவாகியது.
முதலமைச்சரின் கொடும்பாவி எரிக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் சார்பில் கருத்து வெளியிடப்பட்டது, அதேவேளை, முதலமைச்சர் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வகையில், தமிழரசுக் கட்சிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கறுப்பு கொடி கட்டிய நிகழ்வும் நடந்தேறியது.
அடுத்தது என்ன?
முதலமைசருக்கு ஆதரவாக சமூக வலைத்தலங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆதரவு திரட்டப்பட்டது. அதேபோன்று பொது அமைப்புக்களும், தமிழ் மக்கள் பேரவையும் ஒன்று கூடி முதலமைச்சரைப் பாதுகாப்பதற்காக அவரை ஆதரித்து குரல் எழுப்பியிருந்தன. முதலமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டைக் கண்டித்தும் அடையாள கடையடைப்பு மேற்கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை பகிரங்க அறிவிப்பையும் வெளியிட்டிருக்கின்றது.
வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இவ்வாறு முதலமைச்சருக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடாகவும், தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு நிலைப்பாடாகவும், தமிழ் அரசியலில் இரண்டு நிலைமைகள் கூர்மையடைந்துள்ளன.
இது தமிழ் மக்களின் அரசியல் தலைமைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவாலாகும். இது கால வiயிலும் ஏற்பட்டிராத ஒரு தீவிரமான அரசியல் நிலைப்பாடும் ஆகும். இதுகால வரையிலும், தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்கியாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியும். கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பகிரங்கமாக விமர்சனம் செய்து வந்தன. அத்துடன் தமிழரசுக்கட்சியின் செயற்பாடகளைக் கண்டித்தும் இருந்தன. அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான ஒரு பகுதியினரும், இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதற்காகப் போராடி வருகின்றவர்களில் ஒரு பகுதியினரும், தமிழரசுக் கட்சிக்கும், அதே நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் எதிராகக் குரல் எழுப்பியிருந்தனர்.
ஆனால் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, முதலமைச்சருக்கு ஆதரவாகவும், அதேநேரத்தில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும் பொதுமக்கள் மத்தியில் இருந்து பெருமளவானவர்களை அணிதிரளச் செய்திருக்கின்றது.
இது தமிழரசுக்கட்சி சார்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான ஒரு தீவிரமான அரசியல் நிலைப்பாட்டின் எழுச்சியாகவே நோக்கப்பட வேண்டும்.
இந்த வேளையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் தொடர்பில் தெரிவித்துள்ள முடிவினையடுத்து ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் கருத்து வெளியிட்டிருந்த போதே அவரைத் தண்டிக்க வேண்டும் என, தான் கருத்து வெளியிட்டிருந்ததாகவும், எனினும். இம்முறை தமிழ் மக்களின் நலன்களுக்காகவே அவரைத் தண்டிக்காமல் தாங்கள் பொறுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும். மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவைக் கண்ணுற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் மனம் நெகிழ்ந்து, எப்போதும் தான் மக்கள் பக்கமே இருப்பார் என்றும் உறுதியளித்திருக்கின்றார். முதலமைச்சர் என்ற அரசியல் பதவியில் இருந்தாலும்கூட, சிந்தனையில் தான் ஓர் அரசியல்வாதியல்ல. ஆகவே, தனக்கு கட்சி முக்கியமல்ல. மக்களே முக்கியமானவர்கள் என அவர் கூறியிருக்கின்றார்.
எனினும் மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், மாகாண சபையின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றது. மாகாண சவையின் சிக்கல்கள் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டாலும்கூட, மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவானவர்கள் என்றும், முதலமைச்சருக்கு எதிரானவர்கள் என்றும் இரு முனைப்பட்டவர்களாக, இரு கூராகத் தீவிரமாகப் பிரிந்திருக்கும் நிலையில் வடமாகாண சபை தொடர்ந்தும் பதவியில் எவ்வாறு நீடித்திருக்கப் போகின்றது என்பதும் முக்கிய வினாவாகியுள்ளது.
Spread the love