குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமதி கோரி மூன்று தடவைகள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்றைய தினம் நாடு கடத்தப்படவிருந்த எட்வின்னுக்கு இறுதி நேரத்தில் ஒர் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் Alex Hawk நாடு கடத்தும் உத்தரவினை ரத்து செய்து அவரை தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளார்.
நிரந்தரமாக வதிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எட்வின் தெரிவித்துள்ளார்.