குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை தலைவராக்க கனவு காண்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாகவே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மீது சேறு பூசப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எதுவும் தமக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ஊடகங்கள் இந்த சேறு பூசல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஞானசார தேரர் எங்கிருக்கின்றார் என்பது ராஜபக்ஸக்களுக்கு தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ, கோதபாய ராஜபக்ஸ, உதய கம்மன்பில ஆகியோருக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் அதே சட்டத்தரணியே, ஞானசார தேரர் சார்பிலும் நீதிமன்றில் முன்னிலையாகின்றார் எனவும் எனவே குறித்த சட்டத்தரணிக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஞானசார தேரரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்திற்கு ஜாதிக ஹெல உறுமய எந்தவொரு ஒப்பந்தத்தையும் வழங்கவில்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.