காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக முதலமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பான அறிக்கையை இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யும் என இந்திய மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மழைநீர் சேகரிப்பில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதலமைச்சர்களை மத்திய அரசு விரைவில் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அறிக்கை ஒன்றை தயாரித்து உச்சநீதிமன்றில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது எனவும் அடுத்த மாதம்இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வரும் போது .இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அதன்பிறகு நீதிமன்றின் உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உமா பாரதி தெரிவித்தார்.