குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மான்செஸ்டர் யுனைடட் கழகத்தின் முகாமையாளர் ஜோஸ் முரினோ(jose mourinho) மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ரியல் மட்ரீட் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக முரினோ மீது ஸ்பெய்ன் வழக்குரைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2011 மற்றும் 2012ம் ஆண்டு காலப் பகுதியில் 3.3 மில்லியன் யூரோக்கள் வரி ஏய்ப்ப்பு செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முரினோ எவ்வித பதில்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. நன்மதிப்பின் ஊடாக கிடைக்கும் வருமானம் பற்றிய விபரங்களை முரினோ வெளியிடத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்பெய்னில் ஏற்கனவே சில கால்பந்தாட்ட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வரி ஏய்ப்பு குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரியல் மட்ரீட் கழகத்தின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.