158
வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட பலரும் உறுதிபூண்டிருக்கின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.
முன்னாள் நீதியரசர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்ட வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதையடுத்து ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமைகளின் மூலம் கிடைத்துள்ள அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. இத்தகைய நிலைமைகள் மீண்டும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை மற்றும் சபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வடமாகாண சபையின் பின்னணியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளினதும் செயற்பாடுகளும் இதற்கு அவசியமாகின்றது.
வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் சுமார் ஒரு வார காலமே நீடித்தது. குறுகியதொரு காலமாக இருந்தாலும், இக்காலப்பகுதியில் மாகாண சபையினருக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கும் ஏற்பட்டிருந்த அனுபவங்கள் சிறந்த படிப்பினைகளாகக் கொள்ளத்தக்கன.
அமைச்சர்களின் ஊழல் செயற்பாடுகள் என குறிப்பிட்டு செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஒரு விசாரணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டன. விசாரணையின் முடிவில், அதுபற்றிய அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊடகங்களில் கசிந்திருந்தன. இதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த அறிக்கையை அதிகாரபூர்வமாக சபையில் வெளியிட்ட முதலமைச்சர் அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டிருந்த பரிந்துரைக்கு அமைவாக தனது முடிவுகளை வெளியிட்டார். இதனையடுத்து சபையில் புயல் எழுந்தது.
குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்றும், ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களைச் சுமமத்தியவர்கள் விசாரணைகளுக்கு முன்னிலையாகாத காரணத்தினால், அந்த அமைச்சர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகக் காணப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் பதவி விலக வேண்டும் எனக் கோரிய முதலமைச்சர், ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அந்த விசாரணை காலத்தில் அவர்கள் இருவரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
குற்றவாளிகள் அல்ல என தெரிவிக்கப்பட்ட அமைச்சர்களை விடுமுறையில் செல்ல வேண்டும் என முதலமைச்சரினால் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையே புயலைக் கிளப்பியிருந்தது.
அந்த நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கூறியிருந்தார்.
குற்றமற்ற அமைச்சர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டால், அவர்கள் குற்றம் செய்தமைக்காகவே அவர்கள் விடுமுறையில் அனுப்பப்படுகின்றார்கள் என்ற கருதப்படும். இது அவர்களுக்கான ஒரு தண்டனையாகவும் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, குற்றமற்றவர்கள் என கூறப்பட்டவர்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழரசுக் கட்சியினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
முக்கியமான காரணங்களுக்காகவே, இந்த அமைச்சர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் பின்னர் விளக்கமளித்திருந்தார்.
அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்போது, முறையிட்டவர்கள் மட்டுமல்லாமல், அந்த அமைச்சுக்களில் பணியாற்றுபவர்களும் சாட்சிகளாக விசாரணைக்குழுவின் முன்னால் முன்னிலையாக வேண்டிய அவசியம் இருக்கின்றது. இது தவிர்க்கப்பட முடியாதது. அவ்வாறு அவர்கள் சாட்சகளாக முன்னிலையாகும் வேளையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அதிகார நிலையில் பணியில் இருக்கும்போது சாட்சியங்களில் இடையூறு ஏற்படும். அத்தகைய இடையூறுகளின்றி சுதந்திரமாக விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே அநத அமைச்சர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என கூறப்பட்டது என்பது முதலமைச்சரின் விளக்கமாகும்.
அதேவேளை, அவர்கள் அவ்வாறு விடுமுறையில் சென்றாலும், தமது பணிகளில் இருந்து விலகியிருப்பார்களே தவிர, அவர்களுடைய சம்பளமோ, அவர்கள் வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத:துகின்ற உரிமைகளோ இல்லாமல் செய்யப்படமாட்டாது. அவற்றை அவர்கள் வழமைபோல கொண்டிருக்கலாம் என்றும் முதலமைச்சர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், அமைச்சர்கள் மீது விதிக்கப்பட்ட விடுமுறை நிபந்தனையை விலக்கிக்கொள்ள முடியாது என்று தெரிவித்த முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் சபை உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவும் பகிரங்கமாக எச்சரித்திருந்தனர். இது முதலமைச்சருக்கு எதிரான ஒரு மிரட்டலாகவே வெளிப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கை, வெறுமனே ஓர் அறிவிப்பாக மட்டும் இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் திரட்டிக்கொண்டு, முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்து அதனை ஒரு பிரேரணையாக ஆளுனரிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்தக் குழுவிற்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமை ஏற்றிருந்தார்.
ஆளுனர் ரெஜினோல்ட் குரே, இந்தப் பிரேரணையை ஏற்றுக்கொண்டதுடன், தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு, முதலமைச்சரிடம் கோரப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதே சூட்டோடு, முதலமைச்சருக்கு ஆதரவான உறுப்பினர்களும் ஒரு குழுவாகச் சென்று ஆளுனரிடம் முதலமைச்சருக்கான ஆதரவு கடிதத்தைக் கையளித்திருந்தனர்.
இந்த வகையில் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையானது, முதலமைச்சர் மீதான நம்பிக்கையற்ற நிலையாக விசுவரூபமெடுத்திருந்தது. அத்துடன் வடமாகாண சபை இருகூராகப் பிரிந்து அந்த சபை தொடர்ந்து இயங்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
மக்கள் எழுச்சி
அது மட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான அணியென்றும், முதலமைச்சருக்கு ஆதரவான அணியென்றும் ஆதரவாளரகள் இரு அணிகளாகத் திரண்டிருந்தனர். தமிழ் மக்கள் பேரவை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பை மேற்கொள்ளுமாறு பகிரங்க அழைப்பை விடுத்திருந்தது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்த தமிழரசுக் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த கடையடைப்பின் மற்றுமொரு முக்கிய நோக்கமாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பெருமளவில் அணி திரண்ட மக்கள் பேரணியாகச் சென்று முதலமைச்சரை அவருடைய இல்லத்தில் சந்தித்துத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். அதேநேரம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட நகரங்களில் முதலசை;சருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு மக்களை அணி திரட்டுவதிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பொது அமைப்புக்கள் முன்னின்று செயற்பட்டிருந்தன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமையாகக் கொண்டுள்ள வடபகுதி மக்கள் மத்தியில் இவ்வாறு முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் பெருமளவில் அணி திரண்டிருந்ததும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். அத்துடன், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகத் திகழும் தமிழரசுக்கட்சிக்கு விடுக்கப்பட்ட அரசியல் ரீதியான எச்சரிக்கையாகவும் இது பதிவாகியிருக்கின்றது.
இந்த மக்கள் எழுச்சியானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி மீது மக்கள் கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான அதிருப்தியின் வெளிப்பாடாகவும் அரசியல் ஆய்வாளர்களினால் நோக்கப்படுகின்றது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததன் மூலம், தமிழரசுக் கட்சி ஆப்பிழுத்த நிலைமைக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டது என்று ஏற்கனவே வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.
அவதானமும் அரசியல் நுட்பமும்
விசாரணை நடைபெற வேண்டிய அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் விதித்திருந்த நிபந்தனையை விலக்கிக் கொள்ளச் செய்வதற்காக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக எடுத்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அந்தக் கட்சியின் அரசியல் அனுபவம், முதிர்ச்சி, பிரச்சினைகளைக் கையாள்வதற்காகப் பயன்படுத்துகின்ற இராஜதந்திரம் என்பவற்றை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
அமைச்சர்களின் விடுமுறை நிபந்தனையை விலக்கிக் கொள்ளாவிட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழரசுக் கட்சியின் பகிரங்க எச்சரிக்கையானது, உட்கட்சிப் பிரச்சினையொன்றிற்குத் தீர்வு காண்பதற்காக படிப்படியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போக்கைக் கைவிட்டு, தீவிரமாக அதியுச்ச நடவடிக்கைக்குத் தாவியிருந்ததையே வெளிப்படுத்தியிருந்தது.
முதலமைச்சருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஏற்கனவே அரசியல் ரீதியான உரசல்கள், பனிப்போர் தன்மையிலான நிலைமைகள் இருந்திருக்கலாம். ஆனால், அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வடமாகாண சபையின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் நிலைமையை உருவாக்க வல்லது என்பதை தமிழரசுக் கட்சி உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க முயன்றபோது, அந்தக் கட்சி, பின் விளைவுகள் குறித்து முன்னோக்கிச் சிந்தித்திருந்ததாகத் தெரியவில்லை.
தமிழரசுக் கட்சியானது, தனது கட்சி நலன்களை முன்னிலைப்படுத்தியே காரிங்களை முன்னெடுக்கின்றது. காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றது என்று ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும் அரசியல் ரீதியான மனக்குறைகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளேயும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் நிலவுகின்ற ஒரு சூழலில், வடமாகாண சபை விவகாரத்தை மிகவும் அவதானமாகவும் நுட்பமாகவும் கையாண்டிருக்கலாம். அத்தகைய அவதானமும், அரசியல் நுட்பமும் அங்கு அவசியமாகியிருந்தது என்பதை வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணையானது, வடமாகாண சபையை உலுக்கியதுடன் நிற்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையையும் குலைத்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அங்கு ஏற்பட்டிருந்த முரண்பாடுகளைக் களைந்து, நெருக்கடிகளைத் தணித்து நிலைமையை சுமுகமாக்குவதற்கான முயற்சிகளில் கைக்கொள்ளப்பட்ட கூட்டமைப்புத் தலைமையின் அணுகுமுறையானது, அந்த முயற்சிகளை விரைவுபடுத்தவும், அவற்றில் நம்பிக்கை கொள்வதற்கும் வழி சமைத்திருக்கவில்லை. சரியான அணுகுமுறை கையாளப்பட்டிருந்தால், இந்த அரசியல் விவகாரத்தில் யாழ் ஆயர் மற்றும் நல்லை ஆதீன முதல்வர் ஆகிய இரு சமயத் தலைவர்களும் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்க மாட்டாது.
சமரச முயற்சிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், டெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இறங்கியிருந்தார்கள். விசாரணைகளின்போது, அமைச்சர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற விடயத்தில், அந்த அமைச்சர்களின் சார்பில் சுதந்திரமான விசாரணைகள் நடைபெறுவதற்குத் தாங்கள் இடையூறு விளைவிக்கப்படமாட்டாது. நீதியான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். சாட்சிகளுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்படாத வகையில், நீதியான விசாரணை எந்தவிதமான இடையூறுமின்றி நடைபெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
உத்தரவாதம் தரமுடியாது….
இந்த நிலையில், தொலைபேசி வழியாக முதலமைச்சரைத் தொடர்பு கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பின்னர் அவருடன் கடிதங்கள் மூலமாகத் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறியிருந்தார். அமைச்சர்களை விடுமுறையில் செல்லக் கோருவது ஒரு சட்ட ரீதியான நடவடிக்கை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, அதனைக் கைவிடுமாறு சம்பந்தன் கோரியிருந்தார். அந்த அமைச்சர்கள் தொடர்பான விசாரணைகளின்போது சாட்சிகள் குறுக்கீடு செய்யப்படமாட்டார்கள். அவர்கள் சுதந்திரமாக சாட்சியமளிப்பதற்கும், விசாரணைகள் சுதந்திரமாக நடைபெறுவதற்கும் உரிய உத்தரவாதத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் சார்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தன் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டிருந்தார்.
ஆனால் சம்பந்தன் அத்தகைய உத்தரவாதத்தைத் தன்னால் தர முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார். குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களை விடுமுறையில் செல்ல வேண்டும் என்பது இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு மாறானது. அவர்களைத் தண்டிக்கும் முறையிலான முதலமைச்சரின் இந்த நடவடிக்கையே பிரச்சினைகளுக்குக் காரணமாகும் என்று அந்தக் கடிதத்தில் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
‘உங்களைச் சந்தித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது, இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள். விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு, நான் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப் போவதில்லை.
நான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சீர் செய்வதற்காகவே, நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கிறேன். எனினும் ஒரு சட்ட ரீதியான சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன் என சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், மாகாண அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே இடம்பெற்ற பேச்சுக்களின்போது, நான்கு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது என்று இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், அமைச்சர்களை நியமிப்பதில் தமிழ்ததேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் தீர்மானமே ஓங்கியிருந்தது. கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த இணக்கப்பாட்டிற்கு அமைவாக அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை என பின்னர் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் அந்த அமைச்சர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏனைய சபை உறுப்பினர்கள் வேண்டிய ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள். அரசியல் ரீதியாகவோ அல்லது அரசியல் கட்சி ரீதியாகவோ பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தனை அனைவரும் மதிப்புக்கு உரியவராக, அவரை உயர்வான இடத்தில் வைத்தே மதித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, அவரைத் தமது தலைவராகவே அவ்வாறு விமர்சிப்பவர்களும் கருதுகின்றார்கள். அந்த விடயத்தில் அவர்கள் எவரிடமும், தங்களுடைய தலைவர் என்ற வகையில் சம்பந்தனை விட்டுக் கொடுப்பதில்லை.
இத்தகைய ஒரு நிலையில்தான் அமைச்சர்கள் தொடர்பில சம்பந்தன் ஓர் உத்தரவாதத்தைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு, நான் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை’ என கூறி அத்தகைய உத்தரவாதத்தைத் தருவதற்கு அவர் மறுத்துவிட்டார்.
விட்டுக்கொடுப்பும், கலந்துரையாடலும் பிரச்சினைக்குத் தீர்வு காண அவசியம்
இறுதியாக சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்த யாழ் ஆயர் மற்றும் நல்லை ஆதீன முதல்வர் ஆகிய இரு மதத் தலைவர்களும், சுதந்திரமான நீதியான விசாரணை நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை முதலமைச்சர் கைவிட வேண்டும். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற மூன்று விடயங்களையும் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினரிடமும் முன்வைத்து, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இதே நடவடிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும், தமிழ் மக்களின் மூத்த முக்கிய தலைவர் என்ற ரீதியிலும் சம்பந்தன் முன்வைத்திருப்பாரேயானால், பிரச்சினை நிச்சயமாக அவரால் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமமக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியானது சரியோ பிழையோ வடமாகாண சபையில் பிரச்சினை எழுந்துவிட்டது. அந்தப் பிரச்சினைக்கு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி, சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று செயற்படுவதற்குப் பதிலாக கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடாகக் கையாண்டதையே காண முடிந்தது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று அதிதீவிரமான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டதும், அவர் முன்னரே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர் எனவே அவரைத் தண்டிக்க வேண்டும் என கருத்து வெளியிட்டதும் நிலைமைகளை மேலும் மோசமாக்குவதற்கே வழி வகுத்திருந்தன.
மோசமான ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு வழியின்றி தமிழ் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எப்போது அரசியல் தீர்வு கிட்டும், எப்போது தாங்கள் தமது சொந்த நிலங்களில் தமது சொந்தப் பிரதேசங்களில் சுதந்திரமாக உரிமைகளுடன் வாழ முடியும் என்று அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய அரசியல் தலைமைப் பொறுப்பை எற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், மக்களுடைய அபிலாசைகளுக்கே முன்னுரிமையும் முதலிடமும் வழங்கிச் செயற்பட வேண்டும்.
அரசியல் விடயங்களாக இருந்தாலும் சரி கட்சி சார்ந்த நடவடிக்கைகளாக இருந்தாலும்சரி, ஆட்சி நிர்வாகப் பொறுப்பு சார்ந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் சார்ந்த விடயங்களானாலும்சரி மக்களின் நலன்களும், அரசியல் ரீதியான ஒறறுமையுமே முதன்மை நிலையில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். நீதியான செயற்பாடுகள் அவசியம் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனாலும் மாகாண சபை என்பது அரசியல் சார்ந்த காரியங்களைக் கையாள்கின்ற ஒரு தளம் என்ற காரணத்தினால், அரசியல் ரீதியான விட்டுக்கொடுப்புகளும் அவசியம் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அரசியல் ரீதியான விட்டுக்கொடுப்பு என்பதற்காக நியாயத்தை விட்டுக்கொடுப்பதும் முறையாகாது.
பலதரப்பினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விட்டுக்கொடுப்பும், கலந்துரையாடல்களின் மூலம் இணங்கிச் செல்கின்ற போக்கும் முக்கியம். இந்தத் தன்மைகொண்ட செயற்பாடே வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளுக்கு மதத் தலைவர்களின் வழிகாட்டலில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
Spread the love