குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின் இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் நிரந்தர வீடுகள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2000ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட போர் காரணமாக இடம் பெயர்ந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அடிப்படையில் இப்பகுதியில் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதியில் மீள் குடியேற்றம் நடைபெற்றிருந்தாலும் மீள் குடியேற்றப் பகுதிகளுக்கு அருகில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டி உள்ளதாகவும் இதனை விரைவு படுத்துமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுதுமட்டுவாழ் தொடக்கம் இத்தாவில் வரை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காணப்படுவதன் காரணமாக ஆபத்தான சூழ்நிலையிலேயே புகையிரதப் பாதையினைக் கடக்க வேண்டி உள்ளதாகவும் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிரந்தர வீடுகள் அமைக்கப்படாததன் காரணமாக இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் பாம்புகளின் தொல்லை கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கும் மக்கள் சிறப்பு அடிப்படையில் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.