இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் பலமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியுடன் இணைந்து நடத்திய கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக தான்ஆவலுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் திங்களன்று நடந்த பேச்சுவார்த்தையில், இவ்விரு தலைவர்களும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.
வெள்ளை மாளிகையில் அமைந்திருக்கும் ரோஸ் கார்டன் பகுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் வலுவாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
சமூகவலைத்தளமான டிவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிடும் டிரம்ப், தன்னையும், இந்திய பிரதமர் மோடியையும் ”சமூகவலைத்தளத்தில் பிரபலமான உலகத்தலைவர்கள்” என்று வர்ணித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பான புகலிடங்களாக விளங்கும் பகுதிகளை அகற்றுவது, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒத்துழைப்பில், ஒரு முக்கிய விடயமாக அமையும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்தியாவுக்கு பயணிக்குமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் அப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக். மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உள்ளிட்ட 20 முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்தார்.
வணிகரீதியாக நட்பான நாடாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற தனது அரசு ஆயிரக்கணக்கான சீர்திருத்தங்களை கொண்டு வந்ததாக அவர்களிடம் மோடி எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் விடுத்த டிவிட்டர் செய்தியில், ”முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் உரையாடினேன். இந்தியாவில் உள்ள வணிக வாய்ப்புக்கள் குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகள் நடத்தினோம்” என மோடி தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே வலுவான பொருளாதார சக்திகளாக இருந்த போதிலும், குடியேற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.