குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று யாழ் தீவக வலய பாடசாலைகளுக்கான E Learning கற்றல் இறுவட்டுக்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் தீவக வலய அதிபர்கள்,கணித,விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்
நாங்கள் ஒரு தனி நாட்டுக்காக போராடிய இனம். இன்று நாங்கள் எவ்வாறு செயற்படுகின்றோம்? அந்தப்போராட்டத்தை நடத்திய எங்களுக்கு அதனது இலக்கை அடைவதற்கான தகுதி இருக்கிறதா என்று வெட்கத்துடன் நினைக்கத்தோன்றுகிறது. காரணம் எங்களுக்கு அந்த ஓர்மம் வரவேண்டும். இது எங்களுடைய நாடு, எங்களுடைய மக்கள்,எங்களுடைய சகோதரர்கள் ஆகவே இதை நாங்கள் முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற அவா நம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்.
ஆகவே நிர்வாகத்தில் இருக்கக் கூடிய சிக்கல்களை சீர் செய்து ஆசிரியர்களுடைய பணிகளுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளை முடிந்த வரை களைந்து செயற்படுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் அதே போன்று ஆசிரியர்களும் அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள் என்றார்.
கல்வியில் நாங்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அடைவு மட்டத்தில் பின்னிற்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஆசிரியர்களின் முழு ஈடுபாடும் கற்பித்தலிலேயே இருக்கவேண்டுமாக இருந்தால் நிர்வாகம் சீராக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் கல்வித்துறையில் நான் கண்ட பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாணமுடியும் இந்த விடயங்களை அடுத்துவரும் நாட்களில் துறைசார் அதிகாரிகள்,வலயக்கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோரை சந்தித்து எத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அந்தப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன அல்லது புதிதாக என்னென்ன வழிமுறைகளை உருவாக்கிக்கொள்வது போன்ற விடயங்களையும் ஆராய இருக்கின்றேன்.
ஒரு நிறுவனத்திலோ அல்லது நிர்வாகத்திலோ தலைமை எந்தளவுக்கு சரியாக இருக்கிறதோ அல்லது தலைமை எந்தளவுக்கு வினைத்திறன் மிக்கதாக இருக்கிறதோ அல்லது தலைமை எந்தளவுக்கு சிறப்பாக செயற்படுகிறதோ அந்தளவுக்கு அதனது ஏனைய பாகங்களும் செயற்படும். அந்தவகையில் முதலில் எங்களுடைய அமைச்சினுடைய உயரதிகாரிகளோடு பேசி அங்கே புதிய மாற்றங்களை கொண்டுவரவேண்டும். அது தொடர்பாக ஏற்கனவே இந்தத்துறையிலே மிகுந்த அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற,ஆர்வமிக்க, தொடர்தும் அந்த சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி தேவைப்பட்டால் சில ஆலோசனை குழுக்கள்,செயற்பாட்டு குழுக்களை உருவாக்கி தொடர்ச்சியாக கல்வித்துறையிலே இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கி முன்கொண்டு செல்லவேண்டும். அதற்காக உங்களுடைய முழு ஒத்துளைப்பையும் வழங்குவீர்கள் என நம்புகிறேன். என்றார்.
நிகழ்வில் தீவக வலய பாடசாலையின் அதிபர்கள் கணித,விஞ்ஞான,ஆங்கில பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.