இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு மரபணு பரிசோதனை உள்ளிட்ட முக்கிய அறிக்கைகள் ரயலட் பாரிடம் பாரப்படுத்தப்பட்டது.

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட முன்னர் ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு டெல்பின் ரக வாகனத்தில் இருந்து வித்தியாவை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருடன் வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர் அவர்களும் வித்தியாவையே பார்த்தனர். என குறித்த வழக்கின் 7ஆவது சாட்சியான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் நான்காம் நாள் சாட்சி பதிவுகள்,  இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில்  5 சட்டத்தரணிகள் முன்னிலை. 
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாந்த  மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் நான்காம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
DNA அறிக்கை உட்பட ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டன. 

இன்றைய வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை , மொரட்டுவா பல்கலைகழக கணணி விஞ்ஞான பீடத்தின் அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றினால் நீதாய விளக்கத்திற்கு  (ரயலட் பார்)    பரப்படுத்தப்பட்டது.

குற்ற பத்திரிகையில் திருத்தம். 
இன்றும் 02 சாட்சியங்கள் , 02 சான்று பொருட்கள் இணைப்பு. 

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் குற்ற பத்திரிகையில் , திருத்தம் செய்வதற்கு மன்றின் அனுமதியினை கோரினார்.
அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து , புதிதாக  மாணவி கொலை நடைபெற்ற கால பகுதியில் யாழ்ப்பான போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரியா உட்பட இரண்டு போலிஸ் சாட்சியங்களையும் இரண்டு சான்று பொருட்களையும் இணைத்து கொள்ள அனுமதி கோரினார். அதனையும் மன்று ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினம் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு புதிய சாட்சியங்களுடன் இந்த வழக்கில் 51 சாட்சியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 
சாட்சியத்தின் தகுதி மன்றினால் பரிசோதனை. 
அதன் போது குறித்த வழக்கின் 09ஆவது சாட்சியமான , மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளிக்கையில் , குறித்த சாட்சியம் 13 வயது சிறுவனாக காணப்பட்டதனால் , மன்றானது சாட்சியத்தின் தகுதியினை பரிசோதனை செய்யுமுகமாக , சிறுவனின் முழுப்பெயர் , தாய் , தந்தையின் முழு பெயர்கள் , கல்விகற்கும் பாடசாலை , வயது எதற்காக இங்கே (மன்றுக்கு ) வந்துள்ளீர் போன்ற கேள்விகளை சாட்சியத்திடம் கேட்டது. அதற்கு சாட்சியம் உரிய பதில்களை வழங்கியதை அடுத்து சாட்சி மன்றில் சாட்சியம் அளிப்பதற்கு தகுதியுடையது என மன்று தீர்மானித்து சாட்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
சாட்சிக்கு தலைச்சுற்று. 10 நிமிடம் விசாரணை ஒத்திவைப்பு. 
அதன் போது குறித்த சாட்சியம் சாட்சி அளிக்கையில் , நான் புங்குடுதீவில் வசிக்கின்றனான். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து சின்ன ஆலடி பகுதி (மாணவி படுகொலை செய்யபப்ட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதி ) ஊடாக தான் பாடசாலை செல்வேன்.
இவ்வாறாக குறித்த சாட்சியம் சாட்சி வழங்கி கொண்டு இருந்த வேளை தனக்கு தலைச்சுற்று ஏற்பட்டு உள்ளதாக மன்றிலே சாட்சியான சிறுவன் தெரிவித்தான். அப்போது மன்று காலையில் சாப்பிடவில்லையா ? என சிறுவனிடம் கேட்ட போது இல்லை என சொன்னதை அடுத்து வழக்கு சுமார் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு , சிறுவனுக்கு உணவு வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் சாட்சி பதிவுகள் தொடர்ந்தன.
“ம் … ம் .. ” என சத்தம் கேட்டது .
சிறுவன் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில் ,  சம்பவ தினம் நானும் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனான தனுஜனும் துவிச்சக்கர வண்டியில் சென்றோம்.  அது தனுஜனின் சைக்கிள். அவன் தான் ஓடினான். நான் பின்னால் இருந்து சென்றேன்.
செல்லும் போது சின்ன ஆலடிக்கு அருகில் தனுஜனின் செருப்பு கழன்று வீதியில் வீழ்ந்து விட்டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்கிளை நிறுத்தினான். நான் பின்னால் இருந்து இறங்கி சென்று செருப்பை எடுத்து வர சென்றேன்.
அந்த நேரம் வீதி ஓரமாக அலரி மரங்கள் உள்ள பகுதியில் ரவிமாமா (இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்) மஞ்சள் கலர் ரீ.சேர்ட்டுடன் நின்றார். அப்போது “ம் .. ம் .. ” என சத்தம் கேட்டது நான் முதலில் பேய் என்று பயந்தேன். ஏனெனில் அந்த வீதியில் சனநடமாட்டம் இருப்பதில்லை. வழமையாக பாடசாலை செல்லும் போது , சின்ன ஆலடி பகுதிக்கு கிட்ட வந்ததும் வேகமாகவே செல்வோம்.
அன்றும் அந்த சத்தத்தை பேய் என்று பயந்தாலும் , அது மாடு கத்தும் சத்தம் போன்று இருந்தது. மன பயம் இருந்ததினால் செருப்பை எடுத்து தனுஜனிடம் கொடுத்ததும் அவன் போட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று விட்டோம்.
மறுநாள் 14 ஆம் திகதி நான் பாடசாலை செல்ல அம்மாவுடன் சென்ற போது ஊரில் உள்ள ஒருவர் அம்மாவிடம் வித்தியா அக்கா இறந்த விடயத்தை சொன்னார். அம்மாவுடனே என்னிடம் சொன்னார் , இத வீட்ட ஓடிப்போய் அண்ணாவுக்கு சொல்லு என நான் வீட்ட போய் அண்ணாவுக்கு சொன்னேன். பின்னர் நான் பாடசாலையும் செல்லவில்லை.
சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் நான் பாடசாலை சென்ற போது அதிபர் கேட்டார் நீங்கள் பாடசாலை வரும் போது எதனையும் கண்டீர்களா ? என நான் அப்போது “ம் .. ம் .. ” என்ற சத்தம் கேட்ட விடயத்தை அதிபரிடம் சொன்னேன். அது தொடர்பில் வேறு யாருக்கும் பிறகு சொல்லவில்லை. பின்னர் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கே சொன்னேன். என சாட்சியம் அளித்தான்.
அதையடுத்து சாட்சியான சிறுவனிடம் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ரவிமாமா என்பவரை அடையாளம் காட்ட முடியுமா என சாட்சியான சிறுவனிடம் கேட்டார்.
எதிரியையும் ரீ. சேர்ட்டையும் அடையாளம் காட்டினார். 
அதற்கு சிறுவன் ஆம் என பதிலளித்து எதிரி கூண்டில் நின்ற இரண்டாம் எதிரியான  பூபாலசிங்கம் ஜெயக்குமாரை சாட்சி கூண்டில் நின்று அடையாளம் காட்டினான்.
அதையடுத்து அன்றைய தினம் ரவிமாமா போட்டு இருந்த ரீ. சேர்ட்டை அடையாளம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு சிறுவன் ஆம் என பதிலளித்தான். அதனை அடுத்து மன்றினால் சான்று பொருளான ரீ. சேர்ட்ட சிறுவனிடம் காட்டிய போது சிறுவன் மஞ்சள் நிற ரீ. சேர்ட்ட அடையாளம் காட்டினான்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி விடுவிக்கப்பட்டது.
எதனையும் காணவில்லை. 
தொடர்ந்து பத்தாவது சாட்சியான இலங்கேஸ்வரன் தனுஜன் சாட்சியமளிக்க முற்பட்ட வேளை, குறித்த சாட்சியம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதனால் சாட்சி அளிக்க தகுதி உடையவரா என மன்றானது பரிசோதித்து , குறித்த சாட்சியம் சாட்சி அளிக்க தகுதியுடைய சாட்சியம் என மன்று தீர்மானித்து சாட்சியமளிக்க அனுமதித்தது.
அதனை தொடர்ந்து குறித்த சிறுவன் சாட்சியம் அளிக்கையில் ,
நானும் தனுராமும் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தோம். எனது சைக்கிளில் நான் தான் அவனை பின்னுக்கு ஏற்றிக்கொண்டு சென்றேன்.
சின்ன ஆலடி எனும் பகுதியில் ,  சைக்கிள் பெடல் கட்டை இல்லாததால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்டது. நான் சைக்கிளை நிறுத்தி , சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்த போது , தனுராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்தான். பின்னர் நாங்கள் செருப்பை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு சென்று விட்டோம். என சாட்சியம் அளித்தான்.
 அதன் போது , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சாட்சியத்திடம் செருப்பு கழன்று விழுந்த இடத்தில் எதனையாவது அவதானித்தீரா ? என கேட்ட போது சாட்சியான சிறுவன் இல்லை என பதிலளித்தான். அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
தங்கையின் கணவனே இரண்டாம் எதிரி. 
அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்சியான , பாலசந்திரன் பாலசந்திரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் 13ஆம் திகதி காலை 8.47 மணியளவில் கடைக்கு சென்ற போது வித்தியா கொலை நடந்த இடத்திற்கு அருகில் , பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.
அதில் ரவி என்று அழைக்கபப்டும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் எனது தங்கையின் கணவன். மற்றையவரான பூபாலசிங்கம் தவக்குமார் , ஜெயக்குமாரின் சகோதரன்.
சம்பவ இடத்தில் இருந்து 15 அடி தூரத்தில் நின்று இருந்தார்கள்.
மறுநாள் 14 ஆம் திகதி தான் வித்தியா இறந்த செய்தி தெரியும். வித்தியா எனக்கு கிட்டத்து சொந்தமும் கூட , வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு சுமார் 15 அடி தூரத்தில் தான் முதல் நாள் ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா என கேட்ட போது சாட்சி எதிரி கூண்டில் நின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளை சாட்சி அடையாளம் காட்டினார். அதனை யடுத்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சியம் விடுவிக்கப்பட்டது.
வித்தியாவை தேடி சென்றேன். 
அதனை தொடர்ந்து வழக்கின் 07ஆவது சாட்சியமான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் வித்தியா வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறேன். 14ஆம் திகதி காலை வித்தியாவின் அம்மாவும் சகோதரனும் , வித்தியாவை நேற்றில் இருந்து காணவில்லை. என தெரிவித்து தேடி பார்க்க சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
வித்தியா பாடசாலை செல்லும் வழியில் உள்ள கிணறுகள் , கேணிகளில் தாய் தேடிக்கொண்டு வந்தார். நான் வீதியோரமாக பற்றைகளுக்குள் தேடி சென்றேன். வித்தியாவின் அண்ணா ஆட்கள் அற்ற வீட்டு பகுதிகளை தேடி சென்றோம். அப்போது திடீரென்று வித்தியாவின் அண்ணா ஐயோ வித்தியா வித்தியா என கத்தினான்.
அந்த இடத்திற்கு நான் சென்றேன். அப்போது வித்தியாவின் அம்மாவும் அங்கு வந்து விட்டார். அவர் உடனே என்னிடம் , வித்தியாவின் சடலம் கிடக்கிறது தொடர்பில் ஊருக்குள் சென்று செல்லுமாறு கூறினார். நான் சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்தேன்.
சுவிஸ் குமாரை கறுத்த கண்ணாடியுடன் கண்டேன். 
வித்தியாவை சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்யபப்ட்டது 13ஆம் திகதி சடலம் மீட்கப்பட்டது 14 ஆம் திகதி) ஆலடி சந்தியில் கண்டேன்.
அன்றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்கள் வாங்க என ஆலடி சந்தியில் உள்ள கடைக்கு சென்று இருந்தேன். அப்போது வித்தியா பஞ்சாபியுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்.
அந்த நேரம் கடைக்கு எதிரே வீதியின் மறுபுறத்தில் , டொல்பீன் ரக வாகனத்தில் , முன் ஆசனத்தில் (சாரதி ஆசனத்திற்கு அருகில்) சுவிஸ்குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு இருந்தார். மற்றைய ஆசனங்களில் சசிதரன் , சந்திரஹாசன் , கண்ணன் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் மேலும் இருவரும் இருந்தனர். அவர்களை யார் என்று தெரியாது. மொத்தமாக வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர்.
வித்தியாவை பார்த்துக்கொண்டே நின்றனர். 
அவர்கள் அனைவரும் பஸ்சினால் வந்து இறங்கி சைக்கிள் எடுத்துகொண்டு சென்று வித்தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தனர். என சாட்சியம் அளித்தார்.
அதனை அடுத்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , சுவிஸ் குமார் சசிதரன் , சந்திரஹாசன் , கண்ணன் ஆகியோரை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டார். சாட்சி ஆம் என பதிலளித்து எதிரி கூண்டில் நின்ற 09 ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் , 04ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 05ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 08ஆம் எதிரியான கண்ணன் என அழைக்கபப்டும் ஜெயதரன் கோகுலன் ஆகியோரை அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணையின் போது , சாட்சியிடம் , வாகனம் எவ்வளவு தூரத்தில் நின்றது என கேட்டார் அதற்கு சாட்சி சுமார் 15 அடி தூரத்தில் நின்றது என பதிலளித்தார். அதையடுத்து 15 அடி தூரத்தில் கறுத்த கண்ணாடி அணிந்து இருக்கும் நபர் எங்கே பார்க்கின்றார் என்பதனை கூற முடியாது என நான் 9 எதிரி சார்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறியதற்கு சாட்சி இல்லை நான் பார்த்தேன் அவர்கள் வித்தியாவை தான் பார்த்தார்கள். என சாட்சியம் அளித்தார். அதை தொடர்ந்து நீங்கள் எவ்வளவு நேரமாக கடையில் நின்றீர்கள் என சட்டத்தரணி கேட்டதற்கு , கடையில் ஆட்களாக இருந்தமையால் , ஒரு மணித்தியாலம் கடையில் நின்றேன் அப்போது வாகனத்தை பார்த்தேன். அவர்கள் நின்றார்கள் என சாட்சியம் அளித்தார். அதையடுத்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
ஒற்றையடி பாதையில் எதிரியை கண்டேன். 
அதனை தொடர்ந்து வழக்கின் 15 ஆவது சாட்சியான செல்வராசா சதானந்தரூபிணி சாட்சியம் அளிக்கையில் ,
நான் சம்பவ தினமான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது சைக்கிளில் வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த வீதியில் ஒரு இடத்தில் உள்ள ஒற்றையடி பாதை ஊடக , சந்திரஹாசன் சரம் ஒன்றினை மடித்துக்கட்டியவாறு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் போய் கொண்டிருந்த தூரம் எனக்கும் அவருக்கும் இடையில் ” தம்பி ” என கூப்பிட்டால் கேட்கும் தூரம் தான் அப்போது இருந்தது.
அவர் சென்ற ஒற்றையடி பாதை ஊடாக சுமார் 200 மீற்றர் தூரம் சென்றால் , வித்தியாவின் சடலம் கிடந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்காக அவர் அங்கு தான் சென்றார் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன்.
பின்னர் மறுநாள் வித்தியாவின் சடலம் கிடக்கின்றது என்ற செய்தி அறிந்து நானும் அயலவர்கள் சுமார் 10 பேரும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றோம்.
அப்போது அந்த இடத்திற்கு சந்திரஹாசனும் வந்திருந்தார்.  அவர் அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டார் என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மதிய போசன இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இடது கண்ணில் பார்வை குறைபாடு இருந்தது.  


மதிய நேர இடைவேளைக்கு பின்னர் மீண்டும் மன்று கூடிய போது  18ஆவது சாட்சியான கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முத்துசாமி மலரவன் சாட்சியமளித்தார். அதன் போது ,

தான்  புங்குடுதீவு மாணவியின் ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருந்தமையால் , அவருக்கு சிகிச்சை அளித்து கண்ணாடிக்கு சிபாரிசு செய்து இருந்தேன்.
எனது சிகிச்சை (கிளினிக்) நிலையத்திற்கு வந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஒரு கண்ணாடியினை தந்தார்கள். அதனை பரிசோத்தித்து பார்த்த போது அது என்னால் சிபாரிசு செய்யப்பட்டு எனது நோயாளி ஒருவருக்கு கொடுத்த கண்ணாடி என தெரிந்து கொண்டேன்.
அந்த கண்ணாடியை வித்தியா எனும் மாணவிக்கு வழங்கி இருந்தேன். அவருக்கு வலது கண் நூறு வீதம் பார்வை திறன் கொண்டது இடது கண் 70 வீதமே பார்வை திறன் கொண்டது. இடது கண் கருவிழி மாற்று சத்திர சிக்கிசை செய்தமையால் 70 வீதமே பார்வை திறன் கொண்டது. என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வித்தியாவின் மருத்துவ பதிவேடு மற்றும் கண்ணாடி வழங்குவதற்கான சிபாரிசு கடிதம் ஆகியவற்றை அடையாளம் காட்ட முடியுமா என கேட்ட போது ஆம் என பதிலளித்து அவற்றை மன்றில் அடையாளம் காட்டினார்.
அதன் பின்னர் வித்தியாவற்கு வழங்கப்பட்ட கண்ணாடியை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கேட்டதற்கு கண்ணாடியை பரிசோதித்து பார்த்தே கூற வேண்டும். (தனது அனுபவத்தின் அடிப்படையில் கண்ணாடியை மன்றில் வைத்து பரிசோதனை செய்தார்) என கூறி கண்ணாடியை பரிசோதித்து வலது பக்க வில்லை சாதாரண வில்லையாகவும் , இடது பக்கம் உருளை வில்லையும் பொருத்தப்பட்டு உள்ளமையால் அது வித்தியாவிற்கு வழங்கபட்ட கண்ணாடி என அடையாளம் காட்டினார்.
அதையடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் அழைக்கப்பட்ட ஏனைய சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் இடம்பெற்றன.
வழக்கு ஒத்திவைப்பு. 
குறித்த சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் இரவு 7 மணி வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மன்றனாது வழக்கு விசாரணைகளை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்தது. அதுவரையில் எதிரிகளை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.