இலங்கை

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைந்தால் நான் அரசாங்கத்தில் இருக்க மாட்டேன் – அர்ஜூன ரணதுங்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைந்தால் தாம் அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் அரசியல் சாசனம் குறித்த எந்தவொரு ஆவணமும் வெளியிடப்படவில்லை எனவும் அரசியல் சாசனம் பற்றி பேசுவோர் இந்த ஆவணங்களை கண்டிருக்கின்றார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலரும் ஊடகங்களுக்கு சென்று தீயை மூட்டிவிடவே விரும்புகின்றார்கள் எனவும் இவ்வாறு செய்வதன் மூலம் மறுநாள் பத்திரிகையில் அரை பக்கத்திற்கு புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்படும் எனவும் இவ்வாறான இழிவான அரசியலில் ஈடுபடுவது அருவருக்கத் தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் அதில் தவறு எதனையும் தாம் நோக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை குறைக்குமாறு கோரவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டை வெள்ளைக்காரர்களிடமிருந்து மீட்ட போது சிங்கள பௌத்தர்கள் மட்டும் போராடவில்லை எனவும்  தமிழ் முஸ்லிம்களும் போராடியிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் அந்த அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் நீடிக்கப் போவதில்லை என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply