மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கலவரம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்றும் அமுலில் இருந்தது.
ஒரு மதத்தினரின் புனிதத் தலம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து முகநூலில் பகிரப்பட்டதை தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் படூரியா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை இரவு கலவரம் மூண்டது. இதில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன் வீடுகள் சூறையாடாப்பட்டன. அத்துடன் படூரியா காவல் நிலையம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. மேலும்அடுத்த நாளும் தொடர்ந்த போராட்டம் மற்றும் வன்முறையில் அரசு மற்றும் வாகனங்களுக்கும் தீவைக்க்பபட்டது.
இதையடுத்து அங்கு 800 ராணுவத்தினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படூரியா, பசீர்ஹத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டதுடன் மாவட்டம் முழுவதும் இணைய தள சேவை முடக்கப்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசிடம் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கோரியுள்ளது.